

குழந்தைகள் நாம் சொல்வதில் இருந்து அல்ல செய்வதிலிருந்தே அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோரின் பேச்சு, செயல்கள், பண்புகள் ஆகியவையே குழந்தைகளிடம் எதிரொலிக்கின்றன.
சிறந்த பண்புகளுடன் ஒரு குழந்தை வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் முதலில் தாங்கள் சிறந்த பண்புகள் உள்ளவர்களாக மாறவேண்டும். இந்த விஷயத்தில் நான் என் குழந்தைக்கு சிறந்த முன் உதாரணமாக இருக்கிறேனா? என்று ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு செயலிலும் கேட்டுக்கொள்ள வேண்டும். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக இருக்க சில விஷயங்களை பின்பற்றுங்கள்.
பொருட்களைத்தாண்டி மனிதர்களே முக்கியம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். பணம், அந்தஸ்து, செல்வாக்கு போன்ற வித்தியாசங்களை கடந்து மனிதர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளும் அதே மாதிரி உறவுகளை மதிப்பார்கள்.
எளிதான செயல்களை மட்டுமே செய்துகொண்டு இருக்காதீர்கள். சவாலான விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள். அச்சத்தை கடந்து நீங்கள் அடி எடுத்து வைப்பதை பார்த்தே குழந்தைகளும் துணிச்சல் பெறுவார்கள். நேர்மறை சிந்தனை அவர்களுக்கும் கிடைக்கும்.
எப்போதும் வெற்றிகளை மட்டுமே சிந்திப்பவர் என்று யாரும் கிடையாது. தேர்வில் குறைந்த மதிப்பெண், விளையாட்டு சக குழந்தைகளால் ஏளனம் செய்யப்பட்டோம் என கண்ணீருடன் குழந்தைகள் வந்தால் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்.
நீங்கள் அடைந்த தோல்விகளையும் உங்களின் பலவீனங்களையும் அவர்களிடம் வெளிப்படையாக சொல்லி, அந்த தடைகளை எப்படி தகர்த்து மீண்டு வந்ததை உணர்த்துங்கள். அதைக் கேட்டு தன்னம்பிக்கை பெறுவார்கள்.
நான் அவசரபுத்திகாரன், கோபம் அதிக வரும், என்றெல்லாம் குழந்தைகளிடம் உங்களைப்பற்றி எதிர்மறையான பிம்பத்தை உருவாக்காதீர்கள். நான் நிறைய படிக்காததால் பெரிய வேலை கிடைக்கவில்லை என்று சொல்பவரை விட இந்தப் படிப்பை முடித்துவிட்டு இவ்வளவு உயரம் வந்து விட்டேன்.
நீ எல்லாம் எங்கோ பெரிய இடத்துக்கு செல்வாய் என்று உயர்த்திச் சொன்னால் அவர்களுக்கு அந்த வார்த்தை உற்சாகத்தை தரும்.
படிப்பு, கலைகள், புதிய திறமைகள் என்று உங்களின் தனிப்பட்ட மேம்பாட்டுக்கு நீங்கள் நேரம் ஒதுக்குவதை போன்று அரை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களும் ஆர்வமாய் அதுபோல செய்வார்கள். பாடப் புத்தகங்களை தாண்டி இதர புத்தகங்களின் மூலம் கிடைக்கும், அறிவு, தேடல் மற்றும் அனுபவங்களை குழந்தைகளுக்கும் பழக்குங்கள்.
குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வளர வேண்டும். அதற்கான வாழ்க்கை முறைகளை அவர்களுக்கு முன் உதாரணமாக இருந்து பழக்குங்கள். உடற்பயிற்சி அல்லது விளையாட்டு சத்தான உணவு நிறைவான தூக்கம் என்று ஆரோக்கியத்தில் அவர்களையும் கவனம் செலுத்துங்கள்.
சிலரின் தோற்றம் நிறம் உருவத்தை வைத்து யாரையும் கிண்டல் செய்யாதீர்கள். குழந்தைகளுக்கும் அதை பழக்காதீர்கள்
தோற்றத்தை தாண்டி ஒருவரின் குணம் மற்றும் ஆரோக்கியமே முக்கியம் என்பதை புரியவையுங்கள். குடும்பத்தில் யார் என்ன நல்ல விஷயம் செய்தாலும் அதை மனம் திறந்து பாராட்டுங்கள். நீங்கள் ஏதேனும் தவறு செய்தால் எந்த தயக்கமும் இல்லாமல் மன்னிப்பது, எல்லோரையும் பாராட்டும் குணத்தையும், தங்கள் தவறுகளுக்கு வருந்தும் பண்பையும் பார்த்து குழந்தைகளும் கற்றுக் கொள்வார்கள்.
தினசரி வேலைகளில் ஒழுங்கை கடைப்பிடியுங்கள். தூங்கி விழிப்பது, வேலைக்கு செல்வது என்று எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை பின்பற்றுங்கள். மன அழுத்தம், எரிச்சல், கோபம் எல்லாம் காணாமல் போகும். உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு தாமதமாக செல்ல மாட்டார்கள்.
எல்லாவற்றிலும் குறை சொல்வதும், எப்போதும் புகார் செய்தபடி இருக்கும், புலம்பல் மனிதராக நீங்கள் இருக்காதீர்கள். எல்லாவற்றையும் நன்றியுடன் அணுகும் பரந்த மனம் பெறுங்கள்.
உங்கள் குழந்தைகளும் அதைப் பார்த்து வியக்கத்தக்க மனிதர்களாக வளருவார்கள். நீங்கள் எந்த வேலையும் செய்தாலும், அதைப் பற்றி குழந்தைகள் முன்னிலையில் புலம்பாதீர்கள் வேலை என்பது வெளிச்சம் தரும் விஷயம் என்று அவர்கள் மனதில் பதிந்துவிடும். வேலையை நேசித்து செய்யுங்கள். அதை வாழ்வின் அர்த்தமாக கருதுங்கள். குழந்தைகளும் வளர்ந்த பிறகு அப்படியே இருப்பார்கள்.
அடுத்தவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணத்தை பெறுங்கள். அடுத்தவர்களின் வெற்றியை கொண்டாடும் மனிதராக இருங்கள். பிறர் சாதனைகளை அங்கீகரித்து பாராட்டுங்கள். செல்போன், கணினி என நேரத்தைக் கடத்தாமல் குடும்பத்துடன் பயணம், வெளியே கூட்டி செல்லுதல் என இருந்தால் குழந்தைகள் மிக மகிழ்ச்சியுடன் பெற்றோரை மதிப்பார்கள்.