
பலம், பலவீனம் இரண்டுமே நமது வாழ்க்கையை தீா்மானிக்கின்றன. நாம் சில விஷயங்களில் நட்பு மற்றும் உறவுகளிடம் அனுசரித்துப் போவோம். அதற்கு சில காரண, காரியங்களும் உண்டு.
காரணம்: நமக்குப் புரியாத விஷயம், நமக்கேன் தேவையில்லாத பிரச்னை, சின்ன விஷயம்தானே காசா, பணமா, உறவும் நட்பும் தேவைதான், அதனால் அனுசரித்துப்போவது போன்ற நிலைகளால் நம்மை பலவீனமானவர்கள் என எதிர்த்தரப்பினா்கள் நினைக்கிறார்கள். நமது பலவீனமே சில சமயம் நமக்கு எதிரியாகி விடுவதும் இயல்பே!
அந்த நேரம் நாமே நம்மைப் பார்த்து, ‘நாம் ஒன்று நினைத்தோம், விஷயம் வேறு மாதிரி ஆகிவிட்டதே’ என வேதனைப்படுவதும் இயற்கை! சில சமயங்களில் நமது பலமே நமக்குத் தெரியாமல் போய்விடுவதும் உண்டு! ‘பலவான் புத்திசாலி’ என நினைப்பதும் ஒரு பக்கம்!
‘எது நடந்தாலும் நல்லதற்கே’ என நாம் அனுசரித்துப்போக வேண்டும். இருந்தபோதிலும் நம்மைச் சுற்றி பழகும் பலரில் ஒருசிலர் நம்மோடு பழகுவதில் பலவித வித்தியாசங்களைப் பார்க்கலாம். நாம் நம்புகிற அளவிற்கு சிலர் நம்மிடம் நம்பகத்தன்மையோடு பழகுவதில்லை. அது தெரியாமல் நாம் வெகுளியாய் பழகி வருவது பலவீனமல்ல. ஈவு, இரக்கம், பாசம், பற்றுதல், வெள்ளந்தியான நிலைப்பாடு இப்படிப் பல வகை காரணங்கள் உண்டு. அதுதான் பலவீனமாகிறது. அதுவே அடுத்தவருக்கு பலமாகிறது.
பொதுவாக வீட்டிலுள்ள பெரியவர்கள், ‘பார்த்துப் பழகு, பார்த்துப் பழகு’ என அறிவுரை சொல்வார்கள். அந்த அறிவுரையானது அந்த நேரம் நமக்குக் கசப்பாகத் தெரியும். போகப்போகத்தான் அதன் அர்த்தம் புரியும்!
சிலர் நம்மிடம் நயவஞ்சகமாகப் பழகி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஏமாற்றி வருவார்கள். அது தெரியாமல் நாம் பழகுவதும், காலப்போக்கில் நமக்கு அது தெரியவந்தால் நமது மனது படும் வேதனைக்கு அளவே இருக்காது!
நம்மிடம் நிறைய பணம் இருக்கிறது என வைத்துக்கொண்டால் நயவஞ்சக உறவுகளும், நட்புகளும் அதிக அளவில் நம்மிடம் நட்பு பாராட்டி வருவது நடைமுறை. அந்த நேரம் நாம் வெகு ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். நாம், ‘போனால் போகிறது, மகள் திருமணம், மகனை வெளிநாடு அனுப்ப வேண்டும், வீடு கட்ட வேண்டும் எனக் கேட்கிறார், எப்படியும் கொடுத்து விடுவார்’ என நம்பி உதவி செய்வோம். காலப்போக்கில் அந்தத் தொகை திரும்பி வராத நிலையில், மன வருத்தம் ஏற்பட்டு, வார்த்தைப் பிரயோகத்தில் மாறுதல் உண்டாகி உறவில் விரிசல் வருவதையும் கண்கூடாக நாம் பார்த்து வருவதும் உண்டு.
அந்த நேரம் நமக்கு இரண்டு வழிகளில் சங்கடம் வருவதுண்டு. உறவில் விரிசல், நமது குடும்பத்தில் சண்டை. இது நாமே நமக்குள் ஏற்படுத்திக்கொண்ட கூடுதல் சுமை என்றுதான் சொல்ல வேண்டும். இதைத்தான், ‘தனக்கு மிஞ்சியே தான தர்மம், ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என பெரியவர்கள் சொல்வார்கள் என்பதை நாம் உணர வேண்டும். இதைத்தான் அவர்கள் சொல்லும்போது உண்மை நமக்குக் கசக்கிறது. அவர்கள் சொல்லும்போது நாம் கேட்பதில்லை. சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் நாம் உதவாமல் இருக்க முடியாது.
பொதுவாகவே, சில விஷயங்களை செய்ய முன்வரும்போது நமது குடும்பத்தார் மற்றும் மனைவியிடம் ஆலோசனை கேட்டு சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல நாம் முடிவு எடுக்க வேண்டும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் அள்ளித் தெளித்த கோலங்களாகி விடுகின்றன.
அதேபோல, உறவுகளில் வர வர ஆரோக்கியம் குறைந்து வருவதும் கொஞ்சம் கவலை அளிக்கிறது. கூட்டுக்குடும்பாக இருக்கும்போது உள்ள சந்தோஷம் தற்சமயம் குறைந்து வருகிறது. அப்போதெல்லாம் கூட்டுக் குடும்பத்தில் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். அன்பு, பண்பு, பாசம், நேசம், உறவுகளின் மேன்மை, பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது, இப்படி மனதில் கள்ளம் கபடு இல்லாத உறவுகளோடு பயணித்தோம். காலப்போக்கில் அவையெல்லாம் மாறிவிட்டது.
இப்போது உள்ள இளைய தலைமுறை உறவுகளுக்கு ஏதாவது ஒரு திருமண நிகழ்வுகளில் சந்திக்கும்போது, ‘இவர் சித்தப்பா மகன், பெரியப்பா மகன்’ என அறிமுகம் செய்யும் அவல நிலை வந்துவிட்டதும் வேதனையான விஷயமே. முகநூலில் முகம் தெரியாத நட்புகளிடம் பேசுகின்ற அளவு கூட முகம் தெரிந்த உறவுகளிடம் பேசுவதே இல்லாமல் போய் விட்டது வேதனையிலும் வேதனை!
இதுபோல உறவு, நட்புகளில் மனம் குறுக்கிப்போனதும் மனதின் விசாலங்கள் மாறுபட்டுப்போனதும் ஏன் என ஆராய்ச்சி செய்தால் சுயநலம் வந்து போவதும், காலத்தின் மாற்றம் காரணமாக மனித மனங்களில் குறுகலான புத்தி வளா்ந்து வருவதும் வந்து போவது நிஜம்தான்!
பணம் வாங்கினால் திருப்பிக் கொடுக்காத நிலை, உறவுகளில் விரிசல் இவையெல்லாம் சமீப காலமாக தலைதூக்கி வருகிறது. அதற்கான காரணங்களை பலவிதமாகச் சொல்லலாம்!
கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது, வேகமாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற தாக்கம், நேரமில்லாத காரணம், மன அழுத்தம், ஆரோக்கியக் குறைவு, பிள்ளைகளின் படிப்பு எதிர்கால சிந்தனை இவற்றைக் காரணமாக சொல்வதோடு, அதையும் தாண்டிய விபரீதமும் முக்கியமான காரணங்களாகச் சொல்லலாம்.
அந்த விபரீதமான விஷயம் விஞ்ஞானத்தின் விஸ்வரூப வளா்ச்சியே. அதில் நல்ல பல விஷயங்கள் இருந்தபோதிலும் சில கெடுதல்களும் தலைதூக்கி விட்டன. அதேபோல, நாகரிகம் என்ற போர்வையிலான கலாசார சீரழிவு தொலைக்காட்சிகளில் வரும் மெகா தொடர்கள். அதில் உள்வாங்கிய குடும்பத் தலைவிகள், அதிலேயே ஐக்கியமான நபர்கள், குடி கெடுக்கும் குடிப்பழக்கம் என பட்டியல் நீளும். இதற்கு முடிவுதான் என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைப்பது அரிதாகிறது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும். காலம் கலி காலமாகி வரும் வேளையில் இவை அதன் ஆரம்பமோ என நினைத்து கவலை கொள்ள வேண்டியதாக உள்ளதே தற்போதைய நிலை.