தொழில்நுட்பம் பிரம்மிப்பூட்டும் வகையில் முன்னேறி உள்ள தற்போதைய காலக்கட்டத்தில், மனிதர்கள் சக மனிதர்களுடன் சரியான நட்பு மற்றும் உறவுமுறை பேணாமல் மனதளவில் தனித்தீவுகளாக வாழத் தொடங்கி விட்டனர். மனிதர்கள் பல சமயங்களில் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி தடுமாறுகிறார்கள். இதனால் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.
இந்த உலகில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு நல்ல வழிகாட்டிகள் இருந்தால் அவர்களது வாழ்வு சிறக்கும். பல சமயங்களில் மனிதர்கள் யோசிக்காமல் செயலில் இறங்கி விடுகிறார்கள். ஒரு சரியான வழிகாட்டி இருந்தால் அவர்கள் செய்யும் செயல் மேன்மையானதாக இருக்கும். ஒரு வழிகாட்டியின் அனுபவம், அறிவு, திறன், நிபுணத்துவம் மற்றும் நுண்ணறிவு போன்றவை தனி மனிதரை அல்லது ஒரு குழுவை திறம்பட நடத்த உதவும். தங்களுக்குத் தேவையான வழிகாட்டிகளை அடையாளம் கண்டு மனிதர்கள் அவர்களின் கூற்றுப்படி, யோசனைப்படி நடக்க வேண்டும்.
யாரெல்லாம் வழிகாட்டியாக இருக்க முடியும்?
ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், வணிகத் தலைவர்கள், நிர்வாகிகள், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்கள், ஆன்மிகத் தலைவர்கள், குருமார்கள், தத்துவ ஞானிகள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் போன்றோர் நல்ல வழிகாட்டிகளாகத் திகழ முடியும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தவிர, பிறர் ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் போன்றவற்றிலும் தங்கள் வழிகாட்டுதலை நடத்தலாம்.
நல்ல, திறமையான வழிகாட்டியின் குணாதிசயங்கள்:
அறிவும், அனுபவமும்: ஒரு குறிப்பிட்ட துறையில், வழிகாட்டிகள் விரிவான அறிவு மற்றும் அனுபவம் போன்றவற்றைக் கொண்டிருப்பார்கள். தங்களது எண்ணங்கள், ஆலோசனைகள் மூலம் அவர்களால் சரியாக வழிகாட்ட முடியும்.
பாரபட்சமின்மை: ஒரு நல்ல வழிகாட்டி என்பவர் பாரபட்சம் பார்க்காத மனிதராக இருக்க வேண்டும். பல்வேறு கண்ணோட்டங்களில் விஷயங்களை ஆராய்ந்து பார்த்து தனது அனுபவங்களையும் சேர்த்து தேவைப்பட்டவர்களுக்கு அவர்கள் உதவ வேண்டும்.
ஆதரவு: ஆலோசனை நாடிவரும் நபர்களின் தேவைகள், கவலைகள் மற்றும் சிக்கல்களைப் புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்கி ஆதரவு மற்றும் மேம்பட்ட வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.
ஆழ்ந்து கவனித்துக் கேட்டல்: நல்ல திறமைசாலியான வழிகாட்டிகள் ஆழ்ந்து உற்றுக் கேட்கும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். தம் உதவியை நாடுபவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த அவர்களை ஊக்குவிப்பார்கள். அப்போதுதான் அவர்கள் சரியான வகையில் வழிகாட்ட முடியும்.
ஆக்கபூர்வமான யோசனைகள்: வழிகாட்டிகள் நேர்மையானவர்களாகவும் நியாயமான மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகளும் வழங்க வேண்டும். தவறான வழிகாட்டுதலால் தங்களை நாடி வருபவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் சார்ந்து இருக்கும் நிறுவனத்திற்குக் கூட தீங்கு விளைவிப்பதாக அமையும். தங்களுடைய யோசனைகள் மற்றும் கருத்துகள் உண்மையிலேயே பயனுள்ளதா, நன்மை விளைவிப்பதா என்பதை யோசித்து அவர்கள் செயல்பட வேண்டும்.
பொறுமை: வழிகாட்டிகளுக்கு முக்கியமாக இருக்க வேண்டிய குணம் பொறுமை. ஏனென்றால், அவர்கள் வழிகாட்டும் நபர்களின் முன்னேற்றம் மெதுவாக இருக்கலாம் அல்லது அவர்களின் வெற்றி வாய்ப்பு தள்ளிப்போகலாம். வழிகாட்டிகள் பொறுமையாக தங்கள் கருத்துக்களை எடுத்துரைப்பதுடன் யாருக்கு வழிகாட்டுகிறார்களோ அவர்கள் முன்னேற்றம் காணும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் புரியும் வகையில் பொறுமையாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
தலைமைத்துவ பண்புகள்: வழிகாட்டிகள் நல்ல தலைமைத்துவ பண்புகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரை சரியாக வழிநடத்தும் திறன் பெற்று இருப்பதாலேயே அவர்கள் வழிகாட்டிகள் ஆகிறார்கள்.