தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு என்றாலே ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழாதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்த வருடம் ஸ்ரீ தியாகராஜர் 178ஆவது ஆராதனை விழா 14.01.2025 அன்று தொடங்கி, நாளை 18.01.2025 அன்று நிறைவடைகிறது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் 1767ம் ஆண்டு திருவாரூரில் ராமபிரம்மம் - சீதம்மா தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். சிறு வயதிலேயே சமஸ்கிருதம் பயின்று அதில் தேர்ச்சி பெற்றார். பின்பு சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்றார். தமது தலை சிறந்த சாகித்தியங்களால் கர்நாடக சங்கீதத்திற்கு சிறப்பும் பெருமையும் சேர்த்தவர் தியாகப்ரம்மம்.
அபார ராம பக்தி கொண்ட தியாகராஜர் ஸ்ரீராமபிரான் மீது எண்ணற்ற கீர்த்தனங்கள் தெலுங்கில் இயற்றியிருக்கிறார். இவருடைய கீர்த்தனங்கள் பாவத்துடன் கேட்பவர் உள்ளத்தை உருக்கும் விதமாக அமைந்திருக்கும். எல்லாமே பக்தி ரசம் நிறைந்த கீர்த்தனங்கள். சங்கீத வித்வான்கள் மனமுருகி பக்தியோடு இன்றும் இந்த கீர்த்தனைகளை மேடைக் கச்சேரிகளில் இசைக்கிறார்கள்.
ஒரு சமயம் மகான் ஒருவர் இவரை ராம நாமத்தை 96 கோடி முறை ஜபிக்கும்படி கூறினார். அதன்படியே இவர் 21 ஆண்டுகளில் 96 கோடி ராம நாமம் ஜபித்து முடித்தார். இதனால் இவர் வாழ்க்கையில் பல முறை இவருக்கு ஸ்ரீ ராமரின் தரிசனம் கிடைத்தது.
முதன் முதலில் பெங்களூரூ நாகரத்தினம்மா என்னும் கர்நாடக இசைப்பாடகி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்காக ஒரு கோயில் கட்டி, 1940ல் தியாகராஜ ஆராதனையை தொடங்கி வைத்தார். ஸ்ரீதியாகராஜரின் ஆராதனை விழா தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற இசை விழாவாக விளங்குகிறது. முதலில் ஆராதனை நடைபெறும் தினத்தன்று காலையில் உஞ்சவிருத்தி பஜன் அவருடைய இல்லம் அமைந்திருக்கும் திருமஞ்சன வீதியிலிருந்து ஆரம்பித்து, அவருடைய சமாதியில் முடிவுறும். அன்று அவருடைய திருவுருவச் சிலைக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். அந்த நேரத்தில் சங்கீத வித்வான்களால் பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைக்கப்படும்.
ஆராதனை விழாவின் முக்கிய நாளான ஐந்தாம் நாள் (18.01.2025 சனிக்கிழமை) ஸ்ரீ தியாகராஜர் சித்தியடைந்த தினமான பகுள பஞ்சமி அன்று காலை 8.30 மணிக்கு மங்கல இசை இசைக்கப்படும். அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞ்சர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி ஸ்ரீதியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவார்கள்.
ஒரு வரிசை கிரமப்படி நடைபெறும் இந்த ஆராதனை விழாவில், காலை எட்டு மணியளவில் முதலில் நாதஸ்வர வித்வான்களின் சேர்ந்திசையை அடுத்து, 'சேதுலாரா' என்னும் பைரவி ராகக் கீர்த்தனத்தை புல்லாங்குழல் வித்வான்கள் சேர்ந்து இசைப்பார்கள். அப்பொழுது ஸ்ரீ தியாகராஜர் விக்கிரகத்திற்கு அபிஷேகம் ஆரம்பிக்கப்படும்.
அதைத் தொடர்ந்து எதிரெதிர் வரிசைகளில் அமர்ந்திருக்கும் ஆண்கள், பெண்கள் என்று எல்லா சங்கீத வித்வான்களும் சேர்ந்து, 'பஞ்சரத்ன' கீர்த்தனங்கள் என்று ஸ்ரீ தியாகய்யர் இயற்றிய ஐந்து பாடல்களை கோரஸாகப் பாடுவார்கள். இவை, 'ஜெகதாநந்தகா' என்னும் நாட்டை ராகப் பாடல், 'துடுகு கல' என்னும் கௌள ராகப் பாடல், 'சாதிஞ்சனே' என்னும் ஆரபி ராகப் பாடல், 'கனகன ருசிரா' என்னும் வராளி ராகத்தில் அமைந்த பாடல், கடைசியாக 'எந்தரோ மஹானுபாவுலு' என்னும் ஸ்ரீராகப் பாடலாக உள்ளது. இந்த வரிசையில் ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனங்கள் பாடப்படுவது ஒரு இத்தினத்தில் பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வை நேரலையாக பல வருடங்களாக பொதிகை தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட்டு வருவதால் திருவையாறில் நடைபெறும் ஆராதனை விழாவுக்குப் போக முடியாத சங்கீத வித்வான்களும், ரசிகர்களும் வீட்டிலிருந்தபடியே நேரலையில் ஆராதனை விழாவை கண்டு களித்தபடி, பஞ்சரத்ன கீர்த்தனங்களை கூடவே பாடி ஸ்ரீ தியாகராஜ பிரம்மம் என்னும் ஒப்பற்ற மகானுக்கு இசை அஞ்சலி செலுத்தலாம்.
இந்த வருடம் கூடுதல் சிறப்பாக 178ஆவது ஆராதனை விழாவுக்காக ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளைப் போற்றும் வகையில் அவருக்கு இசை அஞ்சலி செலுத்திய முக்கிய இசை மேதைகளின் படங்களைக் கொண்ட தொகுப்பு, 'எந்தரோ மகானுபாவுலு' என்ற தலைப்பில் சிறப்பு அஞ்சல் அட்டை தொகுப்பாக வெளியாகி உள்ளது. இதில் 23 அஞ்சல் அட்டைகள் அங்கியுள்ளன.