
எதிரிகள் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. தவறான புரிதல், சமூக வேறுபாடுகள், பொருளாதாரப் போட்டி, கலாச்சார வேறுபாடுகள், அது தவிர தனிப்பட்ட விரோதங்கள் காரணமாகவும் எதிரிகள் உருவாகின்றனர்.
1) நேரடித்தன்மை:
உண்மையை முகத்துக்கு நேராக பேசுவது எதிரிகளை உருவாக்கும். பூசி மெழுகி சிரித்துப் பேசுபவர்களுக்கு அவ்வளவாக எதிரிகள் இருக்க மாட்டார்கள். எதையும் நேரடியாக எந்தவித நெளிவு சுழிவும் இன்றி கேட்பது எதிரிகளை உருவாக்குவதற்கு காரணமாகும்.
2) உடல் மொழி:
சிலரின் முக பாவனைகளும், குரலின் தொனியும் அதிகாரம் செய்வது போல் இருக்கும். சொற்கள் இல்லாத உடல் மொழி வார்த்தை களிலிருந்து வேறுபட்ட செய்திகளை வெளிப்படுத்தக் கூடும். எனவே பேசும் சொற்களிலும், சமிக்ஞைகளிலும் கவனம் செலுத்துவது நல்லது.
3) அதீத தன்னம்பிக்கை:
சில சமயங்களில் தன்னம்பிக்கை என்பது ஆணவமாக புரிந்து கொள்ளப்பட்டு எதிரிகளை உருவாக்கலாம். எனவே நாம் சொல்ல வரும் கருத்துக்களையும், யோசனைகளையும் முன் வைக்கும்பொழுது கவனமாக செயல்பட வேண்டும்.
4) கலாச்சார வேறுபாடுகள்:
வெவ்வேறு விதமான கலாச்சார பின்னணிகள் தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். ஒரு கலாச்சாரத்தில் கண்ணியமாக கருதப்படுவது மற்றொரு கலாச்சாரத்தில் முரட்டுத்தனமான செயலாக கருதப்படும். இம்மாதிரி கலாச்சார நம்பிக்கைகளில் உள்ள வேறுபாடுகளில் கவனம் அவசியம்.
5) தேவையற்ற பேச்சு:
சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவது கட்டாயம் எதிரிகளை உருவாக்கும். இவன் இப்படித்தான் என்ற முத்திரை குத்தப்பட்டு, சொல்லப்பட்ட கருத்துக்கள் அர்த்தமுள்ளதாக இருப்பினும் எதிர்ப்பை உருவாக்கும்.
6) தவறான புரிதல்:
நல்ல எண்ணத்துடன் கருத்துக்களை முன் வைத்தாலும், தவறான புரிதலுடன் நம் பேச்சுக்களை எதிர்மறையாக எண்ணி, நம் நோக்கம் தவறு என்று சரியான புரிதல் இல்லாமல் விரைவான தீர்ப்பை வழங்கி எதிரியாக எண்ணுபவர்கள் அதிகம்.
7) சுய விழிப்புணர்வு:
நம்பகமானவர்களிடம் கருத்து கேட்பதும், மோதல்கள் எழும் சூழ்நிலைகளில் ஏதேனும் வடிவங்கள் உள்ளதா என்பதை அடையாளம் கண்டு அதனை சரி செய்யவும் நேரமும் முயற்சியும் தேவை.
8) தனிப்பட்ட அனுபவங்கள்:
ஒருவருடைய கடந்தகால அனுபவங்கள், குறிப்பாக மோசமான அனுபவங்கள், மற்றவர்களிடம் எதிர்மறையான உணர்வுகளை ஏற்படுத்தலாம். இதனால் எதிரிகள் உருவாவதற்கு வழிவகுக்கும்.
9) பொருளாதார போட்டி:
சொத்துக்கள் மீதான உரிமை போட்டிகள், பங்காளிகள், தாயாதிகள் போன்ற உறவுகளுக்கு இடையே ஏற்படும் பொருளாதாரப் போட்டி, வேலை வாய்ப்புகள், வியாபாரத்தில் போட்டிகள், வளங்கள் போன்ற வற்றிற்கான போட்டிகள் எதிரிகளை உருவாக்கும்.
10) தனிப்பட்ட விரோதங்கள்:
தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மூலமும் எதிரிகள் உருவாகின்றனர்.
எதிரிகள் உருவாகாமல் இருக்க:
பிறருக்கு உதவவும், நல்ல வார்த்தைகளைப் பேசவும், மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவும் வேண்டும். மற்றவர்களின் திறமைகளை மதிக்க கற்றுக்கொள்ளலாம். எந்த சூழ்நிலையிலும் சண்டைகளை தவிர்த்து அமைதியாக பொறுமையாக நடந்து கொள்ளலாம். மற்றவர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்ப்பதும், நம் அணுகுமுறையை சிறிது மாற்றிக்கொள்வதன் மூலமும் எதிரிகள் உருவாகும் வாய்ப்பை குறைக்கலாம்.