
சிரித்த முகமாக இருப்பவர்கள் பிறரை விட அழகாக இருக்கிறார்கள். நகைச்சுவையுடன் பேசுபவர்களிடம் நட்பு வைத்துக்கொள்ள பலரும் விரும்புவார்கள். சிரிக்க சிரிக்கப் பேசுபவர்களின் நட்பு வட்டம் பெரிதாக இருக்கும். சிரிப்பு ஒரு தொற்றுநோய்போல மிக விரைவில் அடுத்தவரை தொற்றிக்கொள்ளும். ஒரு நபர் சிரித்தால் அவரை சுற்றியுள்ளவர்களும் சிரிக்கத் தொடங்குவார்கள். சிரிப்பின் பல்வேறு வகைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
அமைதியான சிரிப்பு;
இந்த வகையான சிரிப்பு அமைதியாக எந்த விதமான சத்தமும் எழுப்பாமல் சிரிப்பதைக் குறிக்கிறது. ஒருவரின் முகம் மட்டும் சிரிக்கும். இந்த வகையான சிரிப்பை யோகாவில் பயன்படுத்துவார்கள். நூலகத்தில் இருக்கும் போது சத்தம் எழுப்பாமல் அமைதியாக சிரிக்கும் வகையை சேர்ந்தது இது.
பதட்டமான சிரிப்பு;
பதட்டமாகவோ சங்கடமாகவோ இருக்கும்போது சிரிக்கும் சிரிப்பு. இது பதட்டத்தை விடுவிப்பதற்கான ஒரு வழியாகும். உதாரணமாக ஒருவருடைய சட்டையில் காபியை கொட்டிவிட்டால் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் பதட்டமாக சிரிப்பதை குறிக்கிறது.
தொற்றும் சிரிப்பு;
பிறர் சிரிப்பதைப் பார்த்து தானும் சிரிக்கத் தொடங்குவதைக் குறிக்கும் தொற்று சிரிப்பு. இது சங்கிலித் தொடர்போல இருக்கும். மேடையில் ஒரு நகைச்சுவை நாடகம், திரைப்படம் அல்லது நகைச்சுவை பட்டிமன்றம் போன்றவற்றை கேட்கும் போது அவ்வளவு வேடிக்கையாக இல்லாவிட்டாலும் சிலர் சிரிப்பதை பார்த்து நிறைய பேருக்கு சிரிப்பு தொற்றிக் கொள்ளலாம்.
புறா சிரிப்பு;
உதடுகளை மூடிக்கொண்டு புறாவின் கூச்சலைப்போல ஒரு ஹம்மிங் ஒலியை எழுப்புவதை குறிக்கிறது. சிரிப்பு யோகா வகுப்புகளில் விளையாட்டுத்தனமாக உணர்வதற்கு இந்த வகையான சிரிப்பை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும் ஆழமாக சுவாசிக்க உதவும் சிரிப்பு சிகிச்சையிலும் இது பயன்படுத்தப் படுகிறது.
குறட்டை சிரிப்பு;
சத்தமாக சிரிக்கும்போது மூக்கின் வழியாக ஒரு ஒலி எழும்பும். அது குறட்டை சத்தம்போல இருக்கும். வேடிக்கையான வீடியோவை பார்க்கும்போது எதிர்பாராத விதமாக குறட்டை ஒலி வருகிறது.
போலி சிரிப்பு ;
இது வேண்டுமென்றே சிரிப்பதைக் குறைக்கிறது. வேடிக்கையான அல்லது நகைச்சுவையாக எதுவும் இல்லாவிட்டாலும் சிரிப்பது போல நடிப்பதை குறிக்கிறது. பிறரை உணர்வுகளை புரிந்துகொள்ள அல்லது புண்படுத்துவதை தவிர்க்க சிலர் இதை செய்கிறார்கள். ஒரு நகைச்சுவையைக் கேட்கும்போது வேடிக்கையாக தோன்றவில்லை என்றாலும், அவருக்காக அவர் மனம் புண்படக் கூடாது என்பதற்காக போலியாக சிரிப்பதை குறிக்கிறது.
வயிறு குலுங்க சிரிப்பது;
இது முழு உடலையும் நடுங்க வைத்து ஆழ்ந்து சிரிக்க வைக்கும். மிகத் தீவிரமாக இருக்கும். சிலர் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிப்பார்கள். மிகவும் வேடிக்கையான திரைப்படம் அல்லது நகைச்சுவை நிகழ்ச்சியை பார்க்கும்போது வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்கலாம்.
கிச்சு கிச்சு சிரிப்பு;
கிச்சு கிச்சு மூட்டும்போது கட்டுக்கடங்காமல் சிலருக்கு சிரிப்பு வரும். இது இந்த வகையான சிரிப்பு ஒரு தூண்டுதலால் நிகழ்கிறது. இது விளையாட்டுத்தனமான சிரிப்பாகும்.
நோயியல் சிரிப்பு;
சில நரம்பியல் கோளாறுகளின் காரணமாக மூளை நிலைமைகள் சரியாக இல்லாதவர்கள் எந்த விதக்காரணமும் இல்லாமல் கட்டுப்பாடு இல்லாமல் சிரிப்பதைக் குறிக்கிறது.
சிரிப்பின் நன்மைகள்;
எல்லா வகையான சிரிப்பும் சமூகப் பிணைப்பு மற்றும் மன அழுத்த நிவாரணம் முதல் உடல் ஆரோக்கிய நன்மைகள் வரை வெவ்வேறு நோக்கங்களுக்கு உதவுகிறது. வயிறு குலுங்க சிரிப்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. நுரையீரல், இதயம் மற்றும் தசைகளைத் தூண்டி மகிழ்ச்சி ஹார்மோன்களின் வெளியீட்டை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆக்சிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கும், பதற்றம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.