
வாகனம் ஓட்டும்போது பலரும் செய்யும் தவறு வேகமாக வாகனங்களை இயக்குவதுதான். அதனால்தான் விபத்துக்கள் அதிகரித்து உயிரிழப்புகள் மற்றும் உடல் உறுப்புகளுக்குக் கடுமையான சேதம் ஏற்படுகின்றன. இந்தப் பதிவில் வேகக் குருட்டுத் தன்மையால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம்.
வேகக் குருட்டுத் தன்மை என்பது என்ன?
இளைஞர்கள் பைக்கில் ஏறி அமர்ந்தாலே அதை சீறிப் பறக்கவிடும் நோக்கில் வேகமாக செல்வார்கள். அதேபோல நான்கு சக்கர வாகனங்கள் குறிப்பாக கால் ஓட்டிச் செல்லும் நபர்கள் 90, 100 என்ற வேகத்தில் நெடுஞ்சாலைகளில் பறப்பது அதிகரித்து வருகிறது. விலை உயர்ந்த ஆடி, பி.எம்.டபிள்யூ போன்ற கார்களை வைத்திருப்போர் சாதாரணமாகவே 100, 110 என்ற வேகத்தில் தான் செல்கிறார்கள். அதிவேகமாக வாகனத்தை ஓட்டும்போது அவர்களின் மூளை அந்த வேகத்திற்குப் பழகிவிடும். முன்னால் அல்லது பின்னால் வரும் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்வது போலவே அவர்களுக்கு மூளை உணர்த்தும். இதனால் அவற்றின் மீது மோத நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதுவே வேகக் குருட்டுத் தன்மை எனப்படும்.
நீண்ட நேரம் வாகனம் ஓட்டிய பிறகு மூளை வேகத்திற்கு ஏற்றவாறு மாறி அதை சாதாரணமாக உணர வைக்கிறது அதனால் வேகமாக செல்கிறோம் என்கிற உணர்வே வாகன ஓட்டிகளுக்கு இருக்காது. நெடுஞ்சாலைகளில் வேகமாக ஓட்டிவிட்டு ஊருக்குள் வரும்போது அதே வேகத்திலேயே வண்டியை இயக்கத் தோன்றும். மனிதர்கள் அல்லது வேறு வாகனங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்பட நேரும்.
வேகக் குருட்டுத்தன்மையால் ஏற்படும் விளைவுகளும், அபாயங்களும்;
வாகனத்தை அதிவேகமாக ஒட்டி செல்லும் போது விபத்துகள் மற்றும் வேக மீறல்கள் ஏற்படும். திடீரென்று குறுக்கே வரும் மனிதர்கள் அல்லது விலங்குகளை கடைசி நிமிஷத்தில் பார்த்து சுதாரித்து பிரேக் போடுவதற்குள் நிலைமை கை மீறிவிடும். குறுக்கே வரும் வாகனங்களையும் கட்டுப்படுத்த முடியாமல் போகும்.
அதிக வேகத்திற்குப் பழகிய மூளை சாலையில் உள்ள தடைகள் அல்லது பொருட்களைத் துல்லியமாக பார்க்க விடாது, அதாவது பார்வையின் சக்தி குறுகி சாலையை சரியாக பார்க்க விடாமல் செய்து விடும். திடீரென ஏற்படும் குறுக்கீடுகளைத் தவிர்க்கும் விதத்தில் செயல்பட மூளை ஒத்துழைக்காது. இதனால் மோசமான எதிர்வினைகள் உண்டாகலாம்.
கார் அல்லது பிற வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டிச் செல்லும்போது உண்மையான வேகத்தை தீர்மானிப்பதில் சிரமம் உண்டாகும். அதிக வேகத்தில் சென்றாலும் வாகனத்தை குறைவான வேகத்தில் ஓட்டுவது போலவே உணர்வு உண்டாகும்.
பக்கவாட்டில் வரும் மற்ற வாகனங்களின் தூரத்தை மதிப்பிடுவதில் சிரமம் உண்டாகும். பின்னால் வரும் வாகனமும் வேகமாக வந்தால் சுதாரித்து தனது வண்டியின் வேகத்தை குறைக்க முடியாமல் போய் மோத நேரும்.
அதேபோல முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனம் சீரான அல்லது மெதுவான வேகத்தில் சென்று கொண்டு இருந்தாலும் அதை சரியாக கணிக்க முடியாமல் வேகமாக ஓட்டிச் சென்று அதன் மேல் மோதி விபத்தை உண்டாக நேரலாம். மனிதர்களோ அல்லது விலங்குகளோ சாலையில் குறுக்கிடும்போது பிரேக் போடுவதில் தாமதம் உண்டாகலாம்.
இதை சரிப்படுத்துவது எப்படி?
அடிக்கடி ஸ்பீடா மீட்டரை பார்க்க வேண்டும். அப்போதுதான் என்ன வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரியும். நீண்ட பயணங்களின் போது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது காரை நிறுத்தி சற்று நேரம் ஓய்வெடுக்கும் போது அது கை கால்களுக்கு மட்டுமல்ல கண்களுக்கும் மூளைக்கும் ஓய்வையும் புத்துணர்ச்சியையும் தரும். அறுபது டு 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் தான் சாலையை சரியாகக் கவனிக்க முடியும். பிரேக் போடுவதில் சிக்கல்கள் ஏற்படாது.
எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டில் நமக்காக குடும்பத்தினர் காத்துக்கொண்டிருப்பார்கள் என்ற நினைப்பு மனதில் எப்போதும் இருக்க வேண்டும். அது அதிவேகத்திற்கு தடை போடும் காரணியாக அமைந்துவிடும்.