நம்முடைய கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு என்னும் சுரப்பி சரியாகச் செயல்படாமல், அதிகமாக அல்லது குறைவாக ஹார்மோன்களை சுரப்பதனால், தைராய்டு பிரச்னை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய இப்பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தயிர்: தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு தயிர் மிகவும் ஏற்ற உணவாகும். இதில் அயோடின் உள்ளதால், அது தைராய்டு செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. உடலில் மெட்டபாலிசம் நடப்பதற்கு தைராய்டு ஹார்மோன் மிகவும் அவசியமாகும். தயிரில் கால்சியம், புரதம் இருப்பதால் இது உடல் நலத்திற்கும் ஆரோக்கியம் தரக்கூடியதாகும்.
2. பழங்கள்: ஆப்பிள், பேரிக்காய், பிளம்ஸ் போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிகமாக Pectin என்னும் நார்ச்சத்து இருப்பதால், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் இதை சாப்பிடுவது நல்லதாகும். இது தைராய்டு செயல்படாமல் இருக்க மெர்க்குரி போன்றவற்றால் பிரச்னை ஏற்பட்டால் உடலில் இருந்து அந்த நச்சுக்களை நீக்கி சரிசெய்ய உதவுகிறது. இந்தப் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதால், இயற்கையாகவே நச்சுக்களை உடலில் இருந்து நீக்கி தைராய்டு சுரப்பியை பலப்படுத்துகிறது.
3. சர்க்கரைவள்ளிக் கிழங்கு: சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் தைராய்ட்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் நார்ச்சத்து தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்பட வழிவகுக்கிறது.
4. முழு தானியங்கள்: ஓட்ஸ், முளைக்கட்டிய பயறு, பிரவுன் அரிசி போன்ற முழு தானியங்களில் அதிக சக்தி இருப்பதோடு, அதிக நார்ச்சத்தும் உள்ளது. இது உடலில் மெட்டபாலிசத்தை அதிரித்து ஆரோக்கியமான தைராய்டு செயல்பாட்டிற்கு உதவுகிறது.
5. அவகேடோ: அவகேடோவில் அதிகமான ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புக்கள் இருக்கின்றன. இது தைராய்டு ஆரோக்கியமாக செயல்பட மிகவும் உதவுகிறது.
6. பிரேசில் நட்ஸ்: பிரேசில் நட்ஸில் செலினியம் அதிகமாக உள்ளது. செலினியம் தைராய்டு செயல்பாட்டிற்காக உதவக்கூடிய ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகும். இது செயல்படாமல் இருக்கக்கூடிய தைராய்டு ஹார்மோன்களை செயல்பட வைக்க உதவுகிறது. பிரேசில் நட்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்பட தேவையான செலினியம் கிடைக்கிறது.
7. மஞ்சள்: மஞ்சளில் உள்ள curcuminல் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளன. நாள்பட்ட அழற்சி காரணமாக தைராய்டு பிரச்னை ஏற்படலாம். எனவே, மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலமாக அழற்சியை போக்கி தைராய்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். மஞ்சளை சூப், குழம்பு போன்றவற்றில் சேர்த்து சாப்பிடுவது சிறந்ததாகும்.