
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப மனிதனும் அவனின் செயல்பாடுகளும், அதற்கேற்றாற்போல் மாறிக்கொண்டேதான் வருகின்றன. இணையத்தின் வாயிலாகதத்தான் இப்போது எந்த ஒரு தகவலும், செய்தியும், அறிக்கைகளும் பெறவும் அனுப்பவும் முடியும் என்கிற நிலைமைக்கு நாம் வந்து விட்டோம். இது மட்டுமில்லாமல், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது இணையத்தில் ஒரு மிகப்பெரிய அசாத்திய வியப்புகளையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
இப்படி இருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் ஒருவருக்கு கடிதம் எழுதி அனுப்புவது என்பது மிகவும் அரிதானதாகவே மாறிவிட்டது! உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ அல்லது பெற்றோர்களுக்கோ கடிதம் எழுதி அனுப்புவது மிக மிகக் குறைந்து விட்டன. சொல்லப்போனால் அழிந்து விட்டன என்றே கூறலாம்! இப்போது வாட்ஸ் அப்பில் சுலபமாக நாம் தெரியப்படுத்த நினைக்கும் விஷயங்களையும், விருப்பங்களையும் தட்டச்சு செய்தோ அல்லது வாய்ஸ் ரெக்கார்ட் செய்தோ அனுப்பி விடுகிறோம்.
அதுவும் தட்டச்சு என்பது தங்கிலீஷில் செய்து அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இப்படிச் செய்து நாம் பழகிப் போனதால் நமது கற்பிக்கும் திறனும், எழுதும் திறனும் பாதிப்படைகின்றன. சரியாக பிழையின்றி எழுதப் பழகுவதற்கு, முதலில் நமக்குப் பிடித்தவர்களை நினைத்து கடிதங்களை எழுதி எழுதிப் பழக வேண்டும். அப்போதுதான் நாம் எழுதும் திறமையில் எந்தக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதை நம்மால் உணர முடியும்!
கடிதம் எழுதுவதால் எழுத்தாற்றல் மட்டுமில்லாமல், நினைவுக் கூர்மையும், நினைவாற்றலும் சேர்ந்தே வளர்கின்றன. முன்பெல்லாம் தபால்காரர் சைக்கிளில் தபால்களை ஒரு துணிப்பையில் போட்டுக்கொண்டு, சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு போய் தபாலை கொடுப்பதைப் பார்த்திருப்போம். இப்போது இந்தக் காட்சியைப் பார்த்தால் நமக்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது! அந்த அளவிற்கு கடிதப் போக்குவரத்தும், தபால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இல்லை… இல்லை பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்வதை விட, நாம் எல்லோரும் இணையத்திலேயே சுலபமாக தகவல்களை அனுப்பி விடுகிறோம் என்பதால்தான் இதுபோன்ற நிலைமை ஏற்படுகின்றது என்றே சொல்லலாம்.
சரியோ, தவறோ, நிறையோ, குறையோ முதலில் கடிதம் எழுதும் பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். முதலில் உங்களது அம்மாவிற்கோ அல்லது அப்பாவிற்கோ அவர்களைப் பற்றி ஒரு கடிதத்தை எழுதிக் கொடுங்கள். அந்தக் கடிதத்தை வாசித்துக் காட்டுங்கள் அல்லது அவர்களைப் படிக்கச் சொல்லுங்கள். இதன் மூலம் உங்களுக்கும் உங்களது பெற்றோருக்கும் மன நிம்மதியும், பரவசமும், சந்தோஷமும் ஏற்படும்!
அதேபோல், உங்களுடைய நண்பனுக்கும் அவனைப் பற்றி ஒரு கடிதத்தை எழுதி அவனுடைய கையில் கொடுங்கள். அதனைப் படித்துப் பார்ப்பதன் மூலம் உங்களுக்குள்ளும் அவனுக்குள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கையும் அன்பும் ஏற்படும்! இது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல, நிஜமாகவே இது நடக்கும்.
நீங்கள் வேண்டுமென்றால் இந்தக் கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு, உடனே ஒரு கடிதத்தை எழுதத் தொடங்குங்கள் பார்ப்போம்! இந்த சவாலை யார் முடிப்பார் என்று பார்ப்போம்! பார்த்தீர்களா? கடிதம் எழுதுவது கூட ஒரு சவாலாக ஆகிவிட்டது.
முன்பெல்லாம் கடிதம் எழுதுவது சுலபமாக இருந்தது. இப்போது அதுவே நமக்கு ஒரு சவாலாக மாறிவிட்டது. இதுதான் இன்றைய நிலைமை. இதனை நாம் மாற்ற வேண்டும். கடிதம் எழுதுவது யாருக்காக இருந்தாலும் பரவாயில்லை. முதலில் எழுதுங்கள். உங்கள் கைப்பட கடிதம் எழுதுங்கள்.
கடிதம் எழுதும் பழக்க வழக்கத்தை நாம் கைவிட்டால், நமக்குப் பின்னே உள்ள தலைமுறை இதனை சுத்தமாக மறந்து விடும்! நீங்கள் எழுதும் கடிதங்கள், வேறொருவரிடம் நினைவலைகளாக என்றும் உயிரோட்டமாக ஒரு புத்தகத்திற்குள்ளோ, நோட்டிற்குள்ளோ பத்திரமாக ஒளிந்து கொண்டுதான் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.