
எரிச்சலூட்டும் வகையில் பிறர் பேசும்போது அதை பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகும். ஆனால், இந்தத் திறனை வளர்த்துக் கொண்டால் உறவுகளை மேம்படுத்தலாம், மன அழுத்தத்தை குறைக்கலாம், சக்தி வாய்ந்த நபராகத் திகழலாம். அந்த வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உரையாடலுக்கு முன்: எரிச்சலூட்டும் வகையில் பேசக்கூடிய நபர்கள் பேசுவதைக் கேட்பதற்கு முன்பு சில தீர்மானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் எப்படிப் பேசினாலும் அமைதியுடனும் புரிந்தலுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக்கொள்ள வேண்டும். ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். இது மனதை அமைதிப்படுத்த உதவும். நரம்பு மண்டலம் ரிலாக்ஸாக இருக்க உதவும். மனதிற்கு அமைதியைத் தரும்.
உங்களை எரிச்சலூட்டுவது எது? அவர்களின் குரல் தொனியா? சப்தமாக பேசும் இயல்பா? பிறரை பேச விடாமல் குறுக்கிடும் அவர்களது போக்கா? கடுகடுத்த முகச்சுளிப்போடு அவர்கள் பேசுவதா என்று சில விஷயங்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
உரையாடலின்போது: அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் என்ன பேசுகிறார்கள் என்பதன் மையப் பொருளை மட்டும் தீவிரமாக கவனிக்க வேண்டும். அவர்கள் பேசும்போது கவனமாகக் கேட்கிறீர்கள் என்பதன் அடையாளமாக அவர்களின் கண்களைப் பார்க்கலாம், தலையை அசைத்துக் கொள்ளலாம், ம், சரி என்பது போன்ற சொற்களைப் பிரயோகிக்கலாம். குறிக்கிடாமல் கேட்பது நல்லது. அப்போதுதான் அவர்களின் எரிச்சல் குறையும்.
‘ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பதற்றமாகப் பேசுகிறார்கள்? அவர்களுக்கு என்ன பிரச்னையோ?’ என்று அவர்கள் மீது அனுதாபம் கொள்ளலாம். எதிர்வினையாற்றுவதற்கு பதிலாக அவர்களைப் புரிந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். அவர்களது முகம் கடுகடுப்போடு இருந்தாலும் உங்களுடைய முகபாவனைகள் அமைதியாக, நடுநிலையான வெளிப்பாட்டை குறிப்பதாக இருக்க வேண்டும். சத்தமாக பெருமூச்சு விடுவது, கண்களை உருட்டுவது, நாற்காலியைக் கைகளால் தட்டுவது, தாளமிடுவது போன்றவை அவரை மேலும் எரிச்சல் அடையச் செய்யலாம்.
எப்படி எதிர்வினையாற்றுவது?
அவர்கள் பேசி முடித்ததும் சிறிது நேரம் கழித்து நீங்கள் பேசலாம். ‘நீங்கள் ஏன் எப்போதும் ஆக்ரோஷமாகவே பேசுகிறீர்கள்?’ என்று சொல்வதற்கு பதிலாக, ‘உங்கள் கருத்தைப் பொறுத்தவரை எனக்கு வேறு ஒரு கண்ணோட்டம் உள்ளது. நீங்கள் சொல்வதை நான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். ஆனால், நீங்கள் அதிக சத்தத்துடன் பேசியதால் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. தெளிவாக, அமைதியாக மீண்டும் அதை சொல்ல முடியுமா? அல்லது ஒரு உதாரணம் தர முடியுமா?’ என்று கேட்கும்போது அவர்கள் எரிச்சல் குறைந்து சற்றே அமைதியடைவார்கள்.
அப்படியும் அவர்கள் கட்டுப்பாடின்றி இரைந்தால், ‘நாம் அமைதியான ஒரு தருணத்தில் இந்த உரையாடலைத் தொடலாம்’ என்று பொறுமையாக பதில் சொல்லலாம். ‘இருவரும் நல்ல மனநிலையில் இருக்கும்போது இதைப் பற்றி மீண்டும் பேசலாம். இப்போது சற்றே விலகிச் செல்கிறேன்’ என்று பொறுமையுடன் எடுத்துச் சொல்லலாம். பொறுமையாகக் கேட்பது என்பது ஒரு மிகச்சிறந்த கலை. இந்த நுட்பங்களை பயிற்சி செய்வதற்கு பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம். ஆனால், இவற்றை பயிற்சி செய்தால் எளிதாகக் கைகூடும். இதனால் மிக சக்தி வாய்ந்த நபராக ஒருவரால் மாற முடியும்.