
நாம் பார்க்கும் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதத்தில் வேறுபட்டு இருப்பர். சிலர் 20 வயதில் 40 வயது அறிவு முதிர்ச்சியுடன் பேசுவார்கள். அதேபோல், வேறு சிலரோ 50 வயது ஆகி இருந்தாலும் 20 வயதிற்கு உண்டான அறிவு முதிர்ச்சி கூட அவர்களிடம் தென்படாது. அத்தகையவர்களுடன் பழகுவது என்பது மிகவும் கடினம். அதுவும் நெருங்கிய உறவு என்றால் சொல்லவே தேவையில்லை, அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. எல்லைகள்: எந்த வகையான உறவாக இருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு எல்லைக்கோடு தனியாக வைக்க வேண்டியது மிகவும் அவசியம். காதலாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும் அவர்கள் எந்த எல்லையில் இருக்க வேண்டும் என்பதை தெளிவாகக் கூறி விடுவதால் உணர்வு ரீதியாக நீங்கள் உங்களை இழக்காமல் இருக்கவும், அவர்களுடன் நல்ல உறவைப் பேணவும் இது மிகவும் உறுதுணையாக இருக்கும்.
2. அவர்கள் ரியாக்ஷன்கள் உங்களை பாதிக்கக் கூடாது: நீங்கள் உங்களுடைய விஷயங்களைப் பேசும்போது எதிரில் இருப்பவர் எந்த மாதிரி ரியாக் ஷன் காட்டினாலும் அதனால் நீங்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் மனதை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். உணர்வு ரீதியாக நீங்கள் அவர்களுடன் ஒற்றுதல் இல்லாமல் இருந்தால் அவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைத்தாலும் உங்களுக்குக் கவலையே இருக்காது. இதனால் உங்கள் மனம் பாதிக்கப்படாமல் நீங்கள் பார்த்துக்கொள்ள முடியும்.
3. சமநிலை: அறிவு ரீதியாக அல்லது உணர்வு ரீதியாக முதிர்ச்சி இல்லாத ஒருவர் உங்களிடம் பேசும்போது அது உங்களைப் பற்றிய விஷயமாக பொதுவாக இருக்காது. ஆனால், அவர்கள் பேசும்போது அவர்களின் மனம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்பதால் அந்த நேரத்தில் நீங்கள் எதுவும் பேசாமல் இருந்து விடுங்கள்.
4. எப்படிப் பேச வேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்: யாருடைய குணாதிசயங்களையும் நம்மால் மாற்ற இயலாது. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அதன்படியே நாம் அவர்களை விட்டு விட்டு அவர்கள் பேசுவதற்கு நாம் எப்படி பதில் சொல்வது என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இதனால் அவர்களுடன் உடலளவிலும் மன அளவிலும் குறிப்பிட்ட எல்லையை தீர்மானித்துக் கொண்டு மரியாதையாகப் பேசி முடிக்க வேண்டும். இதை பர்சனலாக எடுத்து நாம் கோபப்பட்டால் அது நமக்கே திரும்ப வரும்.
5. அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுபோல நீங்கள் நடந்து கொள்ளுங்கள்: பொதுவாக, அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களிடம் பேசும்போது மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். நம்மை எந்த அளவிற்கு கோபப்படத் தூண்டினாலும் அதைப் பொருட்படுத்தாமல் நிதானத்தை ஆயுதமாக வைத்து அவர்கள் உங்களை எந்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என விருப்பப்படுகிறார்களோ, அதேமாதிரி நடந்து, நடையைக் கட்டிவிட வேண்டும்.
மேற்கண்ட இந்த 5 விஷயங்களை நாம் பின்பற்றினாலே எப்படிப்பட்ட மனிதர்களுடனும் பழகுவது நமக்குக் கடினமாக இருக்காது.