
திருமணம் என்பது இரு மனங்களை இணைக்கும் நிகழ்வு மட்டுமல்ல, இரு குடும்பங்களை, பிள்ளைகளால் ஒரு சமூகத்தை உருவாக்கும் ஒரு அற்புதமான பந்தம். ஆனால், தற்போது கேள்விப்படும் செய்திகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. ஆம். திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில், அவினாசியை சேர்ந்த ஒரு புது மணப்பெண் புகுந்த வீட்டினரின் வரதட்சணை கொடுமையைத் தாங்க முடியாமல் தனது தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் வருந்த வைத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தில் கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் வரதட்சணையாக வாங்கிய இரக்கமற்ற மனிதர்களின் நிலையை என்னவென்று சொல்வது? தன்னை நம்பி வந்த பெண்ணின் மனதில் எத்தனை கனவுகள் இருக்கும். அவள் பெற்றோர் அவளை எத்தனை அன்புடன் சீராட்டி வளர்த்திருப்பார்கள் என்றெல்லாம் ஏன் ஒரு ஆண் மகன் யோசிப்பதில்லை? தனது பெற்றோரின் பண ஆசையை தவறு என்று சுட்டிக்காட்டி மனைவிக்கு ஆதரவாக நிற்பது ஒரு கணவனின் கடமை அல்லவா?
பெண் என்பவள் வெறுமனே திருமணத்திற்காகவும் பிள்ளை பெறும் இயந்திரமாகவும் இருக்க வேண்டியவள் அல்ல. இதைப் பெண்களைப் பெற்ற பெற்றோர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
பெண்ணுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்து அனைவரிடத்தும் விழிப்புணர்வு பெருகிவிட்ட நிலையில், அந்தக் கல்வி மட்டுமே போதாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் துணிவு மற்றும் எந்தப் பிரச்னை, எந்த நிலையில் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடக்கூடிய மன வலிமையை பெற்றோர் கற்றுத் தர வேண்டும். அத்துடன் ஆதரவாக, ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று குரல் தர வேண்டும்.
பெரும் அந்தஸ்தில் உள்ளவர்கள் தங்கள் மகள் திருமணம் முடித்து பிரச்னை என்று திரும்பி வந்தால் தங்களது அந்தஸ்து பாதிக்கப்படுமே என்ற அச்சத்தினால் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆனாலும், 'உனது கணவர் வீட்டினர் சொல்வதைக் கேள்' என்று திருப்பி அனுப்பி விடுவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்? இதற்காகவா அவர்கள் அரும்பாடு பட்டு சேர்த்த பணத்தை வரதட்சணை என்ற பெயரில் தந்து ஆசை ஆசையாய் வளர்த்த மகளையும் இழக்கிறார்கள்.
ஒரு திருமணத்தில் உண்மையிலேயே பிரச்னை இருக்கும் நிலையில், அதை விட்டு வெளியே வந்து சுதந்திரமாக வாழும் துணிவை பெண்கள் பெற வேண்டும். அதற்கு அவர்கள் கற்ற கல்வி நிச்சயம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையும் வேண்டும். அத்துடன், அவர்களுக்கு பக்கபலமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மனதை அறிந்து அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நாலு பேர் என்ன சொல்வார்கள் என்ற காரணத்துக்காக நமது குழந்தைகளின் வாழ்க்கையை நாமே அழித்து விடக் கூடாது. அந்த நான்கு பேரும் நமது சோதனைகளின்போது கூட வந்து நிற்கப் போவதில்லை.
ஆண் மகனைப் பெற்றவர்களே! நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். தற்போது ஆணுக்கு இணையாக பெண்களும் தங்கள் முழு சக்தியை பயன்படுத்தி வெற்றி பெறுகிறார்கள். இன்னும் ஆணாதிக்கத்தை பிள்ளைகளுக்குக் கற்றுத் தராதீர்கள். பெண்ணை மதித்து சமமாக நடத்த கற்றுக்கொடுங்கள்.
உங்கள் மகனை நம்பி வரும் பெண் உங்கள் அடுத்த தலைமுறையின் தலைவி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வெறும் பணம் காசு மட்டுமே வாழ்க்கையில் மகிழ்வை நிரப்பப்போவதில்லை என்பதை உங்கள் மகனுக்குக் கற்றுத் தாருங்கள். நீங்களும் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள்.
பெண்ணைப் பெற்றவர்களே! பெண்ணுக்கு கல்வியுடன் எதையும் எதிர்த்து நிற்கும் வலிமையையும் சொல்லித் தாருங்கள். சகித்துக்கொள்ள கற்றுக் கொடுக்கும் நீங்கள், அதே சகிப்புத்தன்மை எல்லை மீறும்போது ரௌத்திரத்தையும் பழகச் சொல்லி கற்றுத் தாருங்கள்.
தற்கொலை எந்த நிலையிலும் எதற்கும் தீர்வாகாது என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். பிரச்னை என்றால் தெளிவாக முடிவெடுத்து தனித்து இயங்குவது தவறில்லை எனச் சொல்லி ஆதரவு தாருங்கள்.
தவறு செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை தர வேண்டும் எனவும், இனியும் இதுபோன்ற வரதட்சணை கொடுமை மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தினரின் கருத்தாக உள்ளது.