
நம் பெரியோர்கள் அன்றாட வாழ்வில் சில நேரங்களில் சில வாழ்க்கைப் பாடங்களை அனுபவ மொழிகளாகச் சொல்வதுண்டு. அதை நம்மில் பலர் காது கொடுத்துக் கேட்போம், சில வேளைகளில் கண்டு கொள்ளாமல் இருப்போம். ஆனால், அவர்கள் சொல்வதில் அர்த்தம் உள்ளது என்கிறார்கள் இன்றைய ஆய்வாளர்கள். உதாரணமாக சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
‘பிறருக்குக் கொடுத்து மகிழ்’ என்பார்கள் ஆன்றோர். உண்மையில் அடுத்தவர்களுக்குக் கொடுத்து மகிழும் சுகம் அலாதியானது என்கிறார்கள் இது பற்றி ஆராய்ந்த சிகாகோ பல்கலைக்கழக உளவியல் ஆராய்ச்சியாளர்கள். நாம் மற்றவர்களிடமிருந்து பெறுவதை விட, நாம் மற்றவர்க்குக் கொடுக்கும்போதுதான் அதிக இன்பம் பெறுவதாகவும், அப்படி பெறும் இன்பம் நீண்ட நாள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
பெரியவர்கள் அடிக்கடி சொல்வது, ‘மனசாட்சிபடி நடந்துக்கோ’ என்று. அப்படி மனசாட்சிபடி நடந்து கொண்டால் என்னவாம்?. மனசாட்சிபடி வாழ்கிறவர்கள், அப்படி இல்லாதவர்களை விட 50 சதவீதம் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நம் பெரியவர்கள், ‘அடுத்தவர்களுக்கு உதவுங்கள். அது உங்களுக்குப் புண்ணியம் சேர்க்கும்’ என்பார்கள். ‘அது உங்களுக்குப் புண்ணியம் சேர்க்கிறதோ இல்லையோ, உங்களின் ஆரோக்கியம் காக்க உதவுகிறது’ என்கிறார்கள் ஹார்வர்டு பப்ளிக் ஹெல்த் ஸ்கூலின் ஆராய்ச்சியாளர்கள். அடுத்தவர்களுக்கு உதவும் தயாள குணம் உங்கள் இரத்த அழுத்தத்தை இயல்பான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. அதனால் அமைதியான வாழ்க்கைக்கு உதவி, உங்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்கிறார்கள்.
வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளை, ‘காலத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டிகளை பெற வழியை பார்’ என்பார்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள். அப்படி இல்லாமல் காலம் தாழ்த்தி கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தைகள் பெற்றால் உடல்நலக் குறைவுடன் குழந்தைகள் பிறப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் வியன்னாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
வீட்டில் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதை வலியுறுத்தி வருவார்கள் நம் வீட்டுப் பெரியவர்கள். குடும்பத்துடன் அனைவரும் ஒரே இடத்தில் சாப்பிடுவது மகிழ்ச்சியான விஷயம்தான். அதனால் மற்றும் ஒரு பலனும் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆம்! வாரத்திற்கு 2 அல்லது 3 முறை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடும் டீன் ஏஜ் வயதினருக்கு இளம் வயதில் வரும் உடல் பருமன் பிரச்னை 33 சதவீதம் குறைகிறது என்கிறார்கள் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
பெரியவர்கள் இளைய தலைமுறையினருக்கு சொல்வது, ‘உட்காரும்போது நிமிர்ந்து உட்காருங்கள். ஏனோதானோ என்று உட்காராதீர்கள்’ என்பதுதான். ஆனால், இளைய தலைமுறையினர் அதை செவிமடுப்பதில்லை. இளைய தலைமுறையினர் தற்போது உட்கார்ந்துகொள்வது ஏனோதானோ என்றுதான். நீண்ட நேரம் தவறான நிலையில் அமர்ந்து படிக்கும் அல்லது வேலை பார்க்கும் இளைஞர்களுக்குதான் பின்னாளில் முடக்குவாத நோய் அதிகம் வருகிறது என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். எனவே, உட்காரும்போது நிமிர்ந்து உட்காருங்கள். அது உங்களின் பல்வேறு உடல் நலக்குறைவுகளை தவிர்க்கும் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.