
இந்தியா ஒரு வல்லரசு நாடு. அதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை. கடற்படை, ராணுவப் படை, விமானப்படை என அனைத்திலும் தலைசிறந்து விளங்குகிறது நம் இந்தியா. பொருளாதாரத்திலும் வளர்ச்சி அடைந்த நாடுதான் நம் நாடு. ஆனால், ஒரு வேளை சோற்றிற்கு கூட வழி இல்லாமல் தவித்து கொண்டிருப்போர் எத்தனையோ பேர் இந்த நாட்டில் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நடு வீதிகளிலும், கோயில்களின் வாசல்களிலும் உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டும் ரயில் நிலையத்தில் துண்டை விரித்து பிச்சை எடுத்துக் கொண்டு, வீடில்லாமல் மழையிலும் வெயிலிலும் பனியிலும் அங்கேயே வாழ்கிறார்கள். இன்னும் சில பேர் குப்பை தொட்டியில் நாம் தூக்கி எறிந்த உணவை பொறுக்கி உண்கிறார்கள். என்ன ஒரு கொடுமை இது? ஆனால், ஒருசிலர் சாப்பாட்டை எப்படி எல்லாம் வீண் செய்கிறார்கள் தெரியுமா?
இப்போதெல்லாம் திருமணம் என்பது ஒரு டிரெண்டாகி விட்டது. முன்பெல்லாம் பெரிய பெரிய பணக்காரர்கள் வீட்டுக் கல்யாணத்தில்தான் வித விதமான உணவுகளை அடுக்கி வைப்பார்கள். ஆனால், இப்போதோ அடுத்தவர்களுக்கு காண்பிப்பதற்காக கடன் வாங்கியாவது இவ்வாறான உணவுப் பழக்கத்தை எல்லோருமே திருமணத்தில் கடைபிடிக்கிறார்கள்.
முன்பெல்லாம் திருமணத்தில் காலை உணவுக்கு இட்லி, வடை அல்லது பொங்கல் வடை மற்றும் இனிப்புக்கு கேசரி வைப்பார்கள். ஆனால், இப்போதோ இட்லி, வடை, பொங்கல், தோசை, ஊத்தப்பம், ரவா தோசை, குழிப் பணியாரம், பூரி மசாலா, சொஜ்ஜி, அல்வா, இடியாப்பம், வடைகறி, காப்பி, டீ இப்படி அடிக்கிக்கொண்டே போகாலாம். அதைப் போல் மதிய உணவுக்கும் ஏகப்பட்ட உணவு வகைகள், ரிஸப்ஷனுக்கு வகை வகையான கிட்டத்தட்ட பத்து விதமான உணவு வகைகள். இதைத் தவிர நாலைந்து விதமான ஸ்வீட்ஸ், ஐஸ்கிரீம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், விசேஷத்துக்கு சாப்பிட வருபவர்கள் எல்லோருமே வசதி படைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். சிலர் பிளேட்டில் எல்லாவற்றையும் போட்டுக்கொண்டு பிறகு சாப்பிட முடியாமல் தூக்கி எறிவார்கள். இந்தியா முழுவதும் இப்போதைய நிலைமை இதுதான்.
விசேஷத்திற்கு எல்லோரையும் கூப்பிடத்தான் வேண்டும், அதில் தவறில்லை. ஆனால், அவர்களுக்கு பாரம்பரியமாகப் போடும் சாப்பாட்டை போட்டாலே போதுமே. திருமண விழாவிலோ அல்லது ஏதோ ஒரு சுப நிகழச்சியிலோ சிறிதளவு பணத்தை ஏழைகளுக்காக ஒதுக்கி அன்று ஒரு நாளாவது அவர்களுக்கு நம் பெயரைச் சொல்லி விதவிதமான சாப்பாட்டைப் போடலாமே.
இப்படி நாம் எல்லோரும் நினைக்க ஆரம்பித்தால் ஒரு வருடத்தில் எத்தனை ஏழைகளின் வயிறு நிரம்பும்? சற்றே யோசித்துப் பாருங்கள். வசதி இருப்பவர்களையே கூப்பிட்டு விருந்து கொடுப்பதற்கு பதிலாக இல்லாதவர்களுக்கு அதைக் கொடுத்து மகிழலாமே.
ஒரு பிறந்த நாள் விழாவிலோ அல்லது நம்முடைய உறவினரின் இறந்த திதியிலோ ஒரு அனாதை ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கோ அல்லது சாலையோரத்தில் நின்று பிச்சை எடுப்பவர்களுக்கோ உணவையும் உடுத்த துணியையும் கொடுத்தால் அவர்கள் எத்தனை சந்தோஷம் அடைவார்கள், மனதார நம்மை வாழ்த்துவார்கள். உண்மையிலேயே பசியால் வாடும் ஒருவருக்கு உணவளிக்கும்போது அவர்களால் நமக்குக் கிடைக்கக்கூடிய அந்த வாழ்த்துக்கு ஈடு இணை வேறு எதுவுமில்லை. தானத்திலேயே சிறந்தது அன்னதானமல்லவா!
நாம் எல்லோரும் சேர்ந்து நம்மால் முடிந்த உதவியை ஏழைகளுக்குச் செய்ய முயற்சிப்போம். அவர்களின் பசியைப் போக்க முன்வருவோம்.