
வயதாகும்போது உடலில் நோய்கள் தோன்றுவதுடன், ஞாபக மறதியும் அறிவாற்றல் வீழ்ச்சியும் ஏற்படுவது இயல்பு. நம் வீட்டு தாத்தா, பாட்டிகளுக்கு சில பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களது ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்பாக பராமரிக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும் முடியும். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
நினைவாற்றல் பயிற்சிகள்:
புதியன கற்றல்: கற்றல் என்பது சிறு வயதினருக்கானது மட்டுமல்ல, எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம். முதியவர்கள் ஒரு புதிய மொழியை கற்றுக் கொள்ளலாம். அதை முழுக்க கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் சில சொற்களை மட்டுமாவது பேச, எழுதக் கற்றுக்கொள்ளலாம். ஒரு புதிய இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்ளலாம். வரலாறு, அறிவியல், கலை போன்ற ஏதாவது துறையில் ஒரு தலைப்பை எடுத்து அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம், ஆழமாகத் தெரிந்து கொள்ளலாம், புதிய சமையல் ரெசிபி ஒன்றை கற்றுக்கொள்ளலாம். இதனால் புதிய நரம்பியல் பாதைகள் மற்றும் இணைப்புகள் மூளையில் உருவாக்கப்படுகிறது.
வாசித்தல்: வழக்கமான செய்தித்தாள் அல்லது கதைகள் போன்றவற்றை வாசிக்காமல் பல்வேறு வகையான இலக்கியங்களை ஆராய்ந்து அறிமுகம் இல்லாத புதிய தலைப்புகளில் கட்டுரைகளைப் படிக்க வேண்டும். அதை பிறருக்கு சுருக்கமாக விளக்க வேண்டும். இதனால் மொழி வளம் கூடுவதோடு, இலக்கியத்தைப் பற்றிய விமர்சன சிந்தனை, புரிதல் சொல்லகராதி மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
மூளைப் பயிற்சி விளையாட்டுகள்: சுடோகு, குறுக்கெழுத்துக்கள், ஜிக்சா புதிர்கள், நினைவக விளையாட்டுகள், லாஜிக் புதிர்கள், சதுரங்கம், செக்கர்ஸ், வீடியோ கேம்கள் போன்றவை மூளைக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். இவை அறிவாற்றலை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகப்படுத்துகின்றன. சிக்கல் தீர்க்கும் திறனையும் தருகிறது.
படைப்பாற்றல்: எழுதுவது, ஓவியம் வரைதல், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதுதல் அல்லது நாட்குறிப்பை கூட எழுதலாம். புதியவற்றை படைக்கும்போது அது மூளையின் பல்வேறு பகுதிகளை ஈடுபடுத்துகிறது. இதனால் கற்பனைத் திறன் மேம்படுகிறது.
மனநிறைவு மற்றும் தியானம்: இவை மன அழுத்தத்தை குறைப்பதற்கு மட்டுமல்ல, சக்தி வாய்ந்த மூளைப் பயிற்சிகளும் கூட. தினமும் பத்து நிமிடங்களாவது தியானம் செய்யும்போது உணர்ச்சிக் கட்டுப்பாடு உண்டாகும். கவனம் செலுத்தும் திறன் மேம்பட்டு மனக் குழப்பம் நீங்குகிறது. இதுவரை வாழ்க்கையில் கிடைத்துள்ள அத்தனை விஷயங்களுக்கும் மனநிறைவோடு நன்றி சொல்ல வேண்டும். இதனால் மனநிம்மதி உண்டாவதால் மூளையின் செயல்திறன் மேம்படும்.
இடது கை பயன்பாடு: பெரும்பாலும் எல்லாப் பணிகளுக்கும் பிரதானமாக வலதுகையைத்தான் நாம் உபயோகிக்கிறோம். சிலர் மட்டுமே இடது கையை உபயோகிக்கிறார்கள். எளிய விஷயங்களுக்கு இடது கையை உபயோகிக்க வேண்டும். பல் துலக்குவது, காபி கலக்குவது, கதவுகளைத் திறப்பது, பேனாவை எடுப்பது போன்ற சின்னச் சின்ன செயல்களுக்கு இடது கையை அல்லது இதுவரை அதிகமாகப் பயன்படுத்தாத கையை பயன்படுத்தும்போது மூளையின் எதிர் அரைக்கோளத்தில் நரம்பியல் பாதைகள் பலப்படுகிறது. மூளை செயல்பாடு அதிகரிக்கிறது.
குழுப்பணிகளில் ஈடுபடுதல்: மனிதத் தொடர்பு என்பது ஒரு சிக்கலான அறிவாற்றல் பணியாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அர்த்தமுள்ள உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். தன்னார்வத் தொண்டு செய்தல் அல்லது குழு நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்கவும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், சுறுசுறுப்பாகக் கேட்கவும் வேண்டும். இதனால் மொழி செயலாக்கம், பச்சாதாபம், நினைவாற்றல் மீட்டெடுப்பு மற்றும் விமர்சன சிந்தனையைத் தூண்டுகிறது. இந்தப் பயிற்சிகள் வயதான காலத்திலும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் மகிழ்ச்சியாகவும் இருக்க உதவும்.