

நம் வாழ்வில் பல நேரங்களில் ஏன் இவ்வளவு சோர்வாக உணர்கிறோம் என்று யோசித்ததுண்டா? உடல் உழைப்பை விட, மனதளவில் நாம் சுமக்கும் சுமைதான் நம்மை அதிகம் வாட்டுகிறது. அந்தச் சுமைக்கு காரணம் ‘மற்றவர்களை மாற்றத் துடிக்கும் மேனேஜர் வேலை’தான். கணவர் பேசும் விதம் சரியில்லை, தோழி அனுப்பிய மெசேஜில் அக்கறையில்லை, பக்கத்து வீட்டுக்காரர் நம்மைப் பற்றி என்ன நினைப்பாரோ... இப்படி அடுத்தவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் செதுக்கிக் கண்டே இருப்பது எவ்வளவு பெரிய சுமை!
இந்தச் சுமையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, நிம்மதியாக மூச்சு விட ஒரு வழி இருக்கிறது. அதுதான் பிரபல எழுத்தாளர் மெல் ராபின்ஸ் அறிமுகப்படுத்திய "லெட் தெம்" (Let Them Theory) என்னும் தத்துவம். இது ஒரு புத்தகம் மட்டுமல்ல, நமக்கு நாமே தந்து கொள்ளும் ஒரு விடுதலைப் பத்திரம்.
அந்த மந்திரச் சொல்:
இந்தத் தத்துவத்தின் சாரம் மிக எளிமையானது. யாராவது உங்களைக் காயப்படுத்தினால் அல்லது உங்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்தால், பதற்றப்பட்டு அவர்களைத் திருத்த முயலாதீர்கள். ஒரு நிமிடம் அமைதியாக, "அவர்கள் அப்படியே இருக்கட்டும்" என்று உங்களுக்குள் சொல்லுங்கள்.
அவர்கள் ஒரு விருந்துக்கு அழைக்கவில்லையா? போகட்டும். உங்களைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்களா? இருக்கட்டும். அவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாகத் தெரிகிறதா? எடுக்கட்டும். மற்றவர்களின் செயல்கள் அவர்களைப் பற்றியது, உங்களைப் பற்றியது அல்ல என்பதை உணரும்போது, மனஅமைதி உங்களை விட்டுப் போகாது.
நான் என்ன செய்யப் போகிறேன்?
மற்றவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவதால் நாம் ஏமாளியாகி விடுவோம் என்று அர்த்தமல்ல. ‘அவர்கள் செய்யட்டும்’ என்று சொன்ன பிறகு, ‘நான் என்ன செய்யப்போகிறேன்’ என்று யோசிப்பதே உண்மையான அதிகாரம்.
உதாரணமாக, ஒரு நண்பர் எப்போதும் தாமதமாக வருகிறார் என்றால், ‘அவர் தாமதமாகவே வரட்டும், நான் அதுவரை என் புத்தகத்தைப் படிக்கிறேன்’ அல்லது ‘அவர் இல்லாமலே நான் வேலையை ஆரம்பிக்கிறேன்’ என்று முடிவெடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. இது உங்களை ஒரு 'பாதிக்கப்பட்டவர்' என்ற நிலையிலிருந்து மாற்றி, உங்கள் வாழ்க்கையை நீங்களே வடிவமைப்பவராக மாற்றும்.
வானிலையும், மனநிலையும்:
யாராவது என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படுவது மனித இயல்பு. ஒருவரது கருத்து என்பது அவருடைய அனுபவம், பயம் மற்றும் பாதுகாப்பற்ற தன்மையிலிருந்து உருவாவது. வானிலையை மாற்ற முடியாதது போலவே மற்றவர் மனநிலையும் மாற்ற முடியாத ஒன்று. ‘அவர்கள் அப்படியே நினைக்கட்டும்’ என்று விட்டுவிடுவதன் மூலம், ஒருவருடைய சுயமதிப்பு காப்பாற்றப்படும்.
மாற்றத்தால் வரும் எதிர்ப்புகள்:
ஒருவர் திடீரென மாறும்போது, அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு அது பிடிக்காமல் போகலாம். இவ்வளவு காலம் எல்லாவற்றுக்கும் எதிர்வினை செய்து கொண்டிருந்த ஒருவர், இப்போது அமைதியாக இருப்பதைக் கண்டு மற்றவர்கள் கோபப்படலாம். ஆனால், அது சரியான பாதையில் செல்வதற்கான ஒரு அறிகுறி. ‘அவர்கள் வருத்தப்படட்டும்’ என்று விட்டுவிட்டு அமைதியில் உறுதியாக இருப்பது அவசியம்.
உறவுகளில் மலரும் புது வசந்தம்:
மற்றவர்களைத் திருத்துவதை நிறுத்தும்போதுதான், அவர்களை உண்மையில் நேசிக்கமுடியும். ‘இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்ற அழுத்தம் குறையும்போது, உறவுகளில் இருந்த கசப்பு மறைந்து நெருக்கம் கூடும். பிடிவாதமாக ஒரு உறவைத் தக்கவைக்கப் போராடுவதை விட, இயல்பாக இருப்பதை ரசிப்பது அதிக மகிழ்ச்சியைத் தரும்.
குறையும் மனபாரம்:
மற்றவர்களை மேலாண்மை செய்ய வீணடித்த சக்தியைத் தனக்காகவும், தன் கனவுகளுக்காகவும் பயன் படுத்தலாம். வாழ்க்கை என்பது மற்றவர்களைச் செதுக்கும் சிற்பக் கூடம் அல்ல; அது வாழ்வதற்கான களம். ‘அவர்கள் அப்படியே இருக்கட்டும்’ என்று சொல்லிப் பழகினால், அந்தச் நொடியே மனபாரம் பாதியாகக் குறையும். அமைதி என்பது வெளியில் இல்லை, மற்றவர்களை அனுமதிப்பதில் இருக்கிறது!