பிரேக்-அப் என்பது தோல்வி அல்ல! உங்கள் வாழ்க்கையின் புதிய 'ரூட் மேப்' இதோ!


Break-up is not a failure
Break-up is not a failure
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

யார் ஒருவர் நமக்கு அதிகமான மகிழ்ச்சியைத் தருகிறார்களோ அவர்கள்தான் நமக்கு அதிகளவில் சோகத்தையும் கொடுப்பார்கள் என்று சொல்லப் படுவதுண்டு. காதலில் தோல்வி அடைந்ததும் வாழ்வே சோகமயமானது போன்ற உணர்வு ஏற்படும். எதையோ இழந்துவிட்டது போல நிம்மதியின்றி தவிக்கத் தோன்றும்.

பிரேக் அப் வலியின்றி விலக, பிரிவதற்கான காரணத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு, எதிர்கால நம்பிக்கை வார்த்தைகளைத் தவிர்த்து, நிஜத்தை ஏற்றுக்கொண்டு, பழைய நினைவுகளில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும்.

வலியின்றி பிரிந்து செல்ல:

தெளிவான முடிவு:

பிரேக் அப் என்பது ஒரு கடினமான சூழல் என்றாலும், அதை நேர்மையாகவும் நிதானமாகவும் கையாள்வது இருவருக்குமான காயங்களை குறைக்க உதவும். ஏன் இந்த உறவு செட்டாகவில்லை என்பதைப் பற்றி தெளிவாகவும், ஒருவரையொருவர் புண்படுத்தாத வகையிலும் பேசுவது நல்லது. அதேசமயம் பொய் நம்பிக்கை எதுவும் தராமல் முடிவில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். பிரிவை உறுதியாக சொல்ல வேண்டும். இது இருவரின் மன அழுத்தத்தையும் குறைக்கும். பிரிவுக்குப் பிறகு தனிமை என்பது இயல்பானது. ஆனால் முற்றிலும் தனிமைப்படுத்திக் கொள்வது சரியல்ல. உலகம் இந்த ஒரு உறவோடு முடிந்து விடவில்லை என்பதே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது:

உறவு முடிந்துவிட்டது என்பதை மனதார ஒப்புக்கொள்வது சரியான மனநிலையாகும். பிரிவை சரி செய்ய முயல்வது வேதனையை அதிகப்படுத்தும் என்பதை உணர்ந்து அதை மனதார ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். பிரிவு ஏற்பட்ட பின்பு பழைய புகைப்படங்கள் அல்லது ஒருவருக் கொருவர் பரிமாறிக்கொண்ட பரிசுகளைப் பார்த்து ஏங்குவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

சுயபரிசீலனை:

உறவில் இருந்த தவறுகளை ஆராய்ந்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு, நம் அன்பின் ஆழத்தை நேர்மையாக எடை போடப் பழகுவது நல்லது. சிலர் பிரேக் அப் ஏற்படுத்திய வலியால் பழிவாங்க நினைப்பதுண்டு. இது முற்றிலும் தவறான கண்ணோட்டம். காதல் தோல்வி, பிரேக்கப் போன்றவற்றிற்கு பிறகு நாம் செய்யும் மோசமான தவறு என்னவென்றால், இதற்குக் காரணம் நாம் செய்த தவறுதான் என்று நினைத்து வருந்துவது.

பிரேக்கப்பிற்கு இருவருமே காரணமாக முடியும் என்பதை முதலில் மனதில் நிறுத்திக்கொண்டால் குற்ற உணர்வு ஏற்படாது. இன்னும் சிலரோ குற்ற உணர்ச்சியில் மூழ்கி தவிப்பதும், தன்னைத்தானே குறை சொல்லிக்கொண்டு புலம்புவதுமாக இருப்பார்கள். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

இதையும் படியுங்கள்:
மொட்டை மாடி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய இவ்வளவு ஈஸியான வழிகள் இருக்குனு யாருக்கும் தெரியாது!

Break-up is not a failure

தொடர்பை துண்டித்தல்:

அடிக்கடி பேசுவதையோ, சமூக வலைதளங்களில் பார்ப்பதையோ தவிர்த்து விடுவது சிறந்தது. இது தேவையற்ற நினைவுகளைத் தூண்டி வலியைக் கூட்டும். பிரிவுக்குப் பிறகு சிலர் செய்யும் பொதுவான தவறு உணர்ச்சிவசப்பட்டு திரும்பவும் அழைப்பதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருப்பார்கள். இது காயங்களை மீண்டும் கிளறிவிடும். அத்துடன் சுயமரியாதையையும் இழக்க வேண்டிவரும்.

எனவே சிறிது தூரம் விலகி இருப்பது அவசியம். பிரேக் அப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர சில காலங்கள் எடுக்கலாம். அதுவரை புண்பட்ட மனதை ஆற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தலாம். சிறிது காலம் கழித்து, இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியதும் புதிய நபர்களை சந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

தனிப்பட்ட நேரம்:

தனிமையில் நேரத்தை கழிக்காமல் நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும், நமக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துவதும் மனதின் வலியை மாற்றி, பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வர உதவும். முக்கியமாக நம்மை நேசிப்பவர்களுடன் (குடும்பம் மற்றும் நண்பர்கள்) நேரத்தை செலவிடுவது இந்த கடினமான சூழலை மாற்ற உதவும்.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ! வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றாங்களா? இந்த ஒரு மைக்ரோவேவ் ட்ரிக் போதும்!

Break-up is not a failure

நம் நம்பிக்கைக்குரியவர்களிடம் மனம் திறந்து பேசுவது, மனதிலிருந்து பெரிய பாரம் இறங்கியது போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு நடந்ததை நினைத்து வருந்திக்கொண்டிருக்காமல், வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல முயல வேண்டும். அதற்கு நமக்கு பிடித்த செயல்களை செய்ய ஆரம்பிக்கலாம்.

பிரேக் அப் என்பது தோல்வி அல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்பதைப் புரிந்துகொண்டு நம்மை நாமே நேசிக்க தொடங்கினால் வலியின்றி கடந்துவிடலாம்.

logo
Kalki Online
kalkionline.com