
தற்காலத்தில் நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது மைக்ரோவேவ். மைக்ரோவேவை உள்ளேயும் வெளியேயும் திறம்பட சுத்தம் செய்வதற்கு சில எளிய குறிப்புகளை இந்தப் பதிவில் காணலாம்.
வினிகர்: மைக்ரோவேவின் பாதுகாப்பான கிண்ணத்தில் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி வெள்ளை வினிகரை விட்டுக் கலக்கி சில நிமிடங்கள் (3 முதல் 4 நிமிடங்கள்) சூடாக்கவும். பின்பு ஈரமான துணியால் அதன் உட்புறத்தைத் துடைக்க மைக்ரோவேவின் உட்புறத்தில் சிக்கிய உணவு மற்றும் அழுக்குகளைப் போக்கி சுத்தமாக்கும். உட்புறத்தை சுத்தம் செய்யும்பொழுது ஸ்க்ரப்பிங் செய்வதைத் தவிர்க்க ஸ்டீம் கிளீனிங் முறைதான் சிறந்தது.
எலுமிச்சை: மைக்ரோவேவின் பாதுகாப்பான கிண்ணத்தில் ஒரு கப் தண்ணீருடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து நீராவியை உருவாக்குவதற்கு சில நிமிடங்கள் சூடாக்கவும். திரவம் கொதித்து மைக்ரோவேவ் நீராவியால் நிரம்பும் வரை வைத்து அணைக்கவும். இந்த நீராவி மைக்ரோவேவின் உள் அழுக்கை தளர்த்த உதவும். பின்பு ஈரமான துணி அல்லது கடற்பாசியினால் நன்கு துடைத்து ஆற விடவும். இது நீடித்த நாற்றத்தைப் போக்க உதவும்.
பேக்கிங் சோடா: பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கரைத்து பேஸ்ட்டாக்கவும். அதில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறை சிறிது கலந்து அந்தக் கரைசலை மைக்ரோவேவின் உள்ளே வைத்து சில நிமிடங்கள் (2 முதல் 3 நிமிடங்கள்) அதிக சக்தியில் வைத்து சூடாக்கி அணைத்து விடவும். பின்பு ஈரத்துணியால் மைக்ரோவேவின் உட்புறத்தை நன்கு துடைத்து விடவும்.
பாத்திரம் கழுவும் சோப்: தண்ணீரில் நனைத்த மென்மையான துணி மற்றும் சிறிது பாத்திரம் கழுவும் சோப்பைப் பயன்படுத்தி உட்புறத்தை நன்கு துடைக்கவும். பிறகு சுத்தமான துணி கொண்டு துடைத்து, சிறிது நேரம் கதவைத் திறந்து உலர விடவும். இப்படி கரைசலை மைக்ரோவேவ் செய்வதன் மூலம் அதன் உட்புறத்தை சுத்தமாக துர்நாற்றமின்றி வைத்துக்கொள்ள முடியும்.
கையுறைகளைப் பயன்படுத்தி சூடான கிண்ணத்தை அகற்றி விட்டு கதவைத் திறந்து சிறிது நேரம் நீராவியை வெளியேற விடவும். நீராவி அழுக்கைத் தளர்த்தி இருக்கும். இதனால் துடைப்பது எளிதாக இருப்பதுடன் அழுக்குகளும், இடையில் சிக்கிய உணவுகளும் எளிதில் வந்து விடும். ஒரு ஈரமான துணி கொண்டு துடைப்பது எளிதாக இருக்கும்.
பிடிவாதமான கறைகளுக்கும், புள்ளிகளுக்கும் பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீர் கலந்து பேஸ்ட்டாக்கி துடைக்கலாம் அல்லது ஈரமான பஞ்சைக் கொண்டு மெதுவாக தேய்க்க, பிடிவாதமான கறைகளும் புள்ளிகளும் போய்விடும். மைக்ரோவேவின் வெளிப்புறத்தை ஈரமான துணி கொண்டு துடைத்து, கதவு மற்றும் கைப்பிடியிலும் சிறிது அழுத்தம் கொடுத்து தேய்க்க பளிச்சென்று சுத்தமாகிவிடும்.
டர்ன்டேபிள்: சுத்தம் செய்வதற்கு முன்பு டர்ன்டேபிளை முழுவதுமாக குளிர்விக்க விட்டு சுத்தம் செய்ய வேண்டும். சூடான டர்ன்டேபிளை தண்ணீரில் போட்டால் உடைந்து போகலாம். டர்ன்டேபிளை அகற்றி, வெதுவெதுப்பான சோப்பு நீரில் கழுவலாம். காற்றில் நன்கு உலர விடுவதற்கு கதவை சிறிது நேரம் திறந்து வைக்கவும். டர்ன்டேபிளை உலர்த்தி சுத்தம் செய்த உடனேயே மாற்றவும். டேபிள் இல்லாமல் மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்த வேண்டாம்.
மைக்ரோவேவை எத்தனை முறை சுத்தம் செய்ய வேண்டும்?
நாம் அதனை எவ்வளவு பயன்படுத்துகிறோமோ அதனைப் பொறுத்தது. அடிக்கடி பயன்படுத்துகிறோம் என்றால் வாரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்வது நல்லது. இதனால் குப்பைகள், சிதறிய சமையல் துண்டுகள் மற்றும் அழுக்குகள் தேங்குவதைத் தடுக்கலாம். பெரிய அளவில் கசிவுகள் அல்லது தெறிப்புகள் ஏற்பட்டவுடன் உடனடியாக ஈரத்துணி கொண்டு மைக்ரோவேவின் சுவர்கள், கூரைப்பகுதி, தரைப்பகுதி மற்றும் டர்ன்டேபிளை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.