
ஹவுஸ் கீப்பிங் என்பது சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பு தொடர்பான ஒன்று. பொதுவாக, இந்த சொல் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ஹோட்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஹவுஸ் கீப்பிங்கில் சிறந்து விளங்குவதற்கு சில அடிப்படைத் திறன்கள் மற்றும் நுணுக்கங்கள் நமக்குத் தேவை. முதலாவதாக சுத்தம் மற்றும் ஒழுங்குபடுத்தும் நுட்பங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். வீட்டு பராமரிப்புப் பணிகளை திட்டமிட்டு, திறமையாக செயல்படுத்தும் திறனும் இருக்க வேண்டும். அத்துடன் சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதும் அவசியம்.
வீட்டில் உள்ள பொருட்களின் இடைவிடாத பராமரிப்புதான் நம் அழகியலையும் சுத்தத்தையும் சொல்லாமல் சொல்லும். காஸ்ட்லியான பொருட்களை வாங்கி அழகுபடுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பதைக் கொண்டு அழகாக, நேர்த்தியாக வீட்டைப் பராமரிப்பதே சிறந்தது.
ஹவுஸ் கீப்பிங் தொடர்பான பயிற்சிகளைப் பெறுவது நம்மை சிறப்பாக செயல்படத் தூண்டும். சரியான உபகரணங்கள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துவது நம்முடைய வேலையை எளிதாக்குவதுடன் தரத்தையும் மேம்படுத்தும்.
திரைச் சீலைகள், குஷன் கவர்கள், சோபா கவர்கள், பெட் ஸ்ப்ரெட் போன்றவற்றை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவது ஆரோக்கியத்தை மட்டும் தருவதல்ல, வீட்டையும் அழகாக்கும்.
வீட்டை அழகுப்படுத்தும் ஷோகேஸ் பொம்மைகளை அடிக்கடி தூசி தட்டி சுத்தப்படுத்தி வைப்பது கண்களை மட்டுமல்ல, கருத்தையும் கவரும். ஃபிளவர்வாஸ் பூக்களை தூசி, அழுக்கு போக சோப்புத்தூள் கலந்த நீரில் ஊற வைத்து அலசி விட, புத்தம் புதிது போல் பளபளக்கும்.
வீட்டைத் துடைக்கும் 'மாப்'பை பயன்படுத்திய பிறகு நல்ல தண்ணீரில் அலசி வெயிலில் காய வைக்க நாற்றம் எடுக்காமல் இருப்பதுடன், நீண்ட நாட்களும் உழைக்கும்.
வார்ட்ரோப் கண்ணாடி, பீரோ கண்ணாடி மற்றும் நிலைக் கண்ணாடிகளை நியூஸ் பேப்பர், துண்டை ஈரமாக்கி அதைக் கொண்டு துடைக்கவும். பிறகு ஈரமில்லாத சுத்தமான துணி கொண்டு துடைக்க கிறிஸ்டல் கிளியராக பளிச்சென்று ஆகிவிடும்.
நார்மலான சீப்பு, அகலமான பற்கள் கொண்ட சீப்பு, சிக்கு எடுக்க உதவும் சீப்பு மற்றும் பேன் சீப்புகளை வாரம் ஒரு முறை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைத்து அதற்கென்று உள்ள பிரஷ்ஷில் சுத்தம் செய்ய சீப்பு சுத்தமாவதுடன் தலையில் பொடுகு பிரச்னையும் வராது.
வினிகரையும், பேக்கிங் சோடாவையும் சம அளவு கலந்து சிங்க் பகுதியில் சூடான நீரால் கழுவி விட, அடைப்பு எதுவும் இன்றி சுத்தமாக பளிச்சிடும்.
பல் தேய்க்கும் பிரஷ்களை 2 மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடுவது நல்லது. அத்துடன் பிரஷ், பேஸ்ட் வைக்கும் ஸ்டாண்டையும் அவ்வப்போது கழுவி சுத்தமாக வைப்பது நல்லது.
வீட்டின் முக்கியமான மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் பகுதிகளான சமையலறை, குளியலறை, படுக்கையறை, கழிப்பறைகள் ஆகியவற்றை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் பூஞ்சை தொற்று போன்ற தொற்றுகள் ஏற்பட்டு உடல் நலனை பாதிக்கக் கூடும்.
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தூசி தட்டி, ஜன்னல்கள் மற்றும் கதவுகளை துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்வதும், கிருமி நீக்கம் செய்வதும் அவசியம்.
அவ்வப்போது வீட்டில் சேரும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்துவது, வீட்டில் ஷெல்புகளில் படியும் தூசிகளைத் துடைத்து சுத்தம் செய்வது மற்றும் மழை நீர் வடிகால்களில் இருந்து இலைகளை அகற்றுவதும், வீட்டைச் சுற்றி கொசுக்கள், விஷப் பூச்சிகள் அடையாமல் இருக்க சுத்தமாகப் பராமரிப்பதும் அவசியம்.
சமையலறை மற்றும் குளியல் அறையில் குழாய்களில் படியும் உப்புக் கறையை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்வதும், சமையலறை சிங்கில் அடைப்பு ஏற்படாமல் அவ்வப்போது சூடான நீர் விட்டு அடைப்பை நீக்குவதும் நல்லது.
ஈரம் அதிகம் படும் இடங்களான குளியலறை, சமையலறைகளை உலர்வாக வைத்துக்கொள்வது பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் இருக்க உதவும்.
காலப்போக்கில் வீட்டு மேற்பரப்புகளில் தூசி படிந்து மேற்பரப்புகளை அழுக்காக்குவதுடன் தும்மல் மற்றும் சுவாசப் பிரச்னையை உண்டாக்கும். வெற்றிட கிளீனர்கள் (Vacuum cleaner) கொண்டு அவற்றை அகற்றுவதும், வரவேற்பறையில் உள்ள தரை விரிப்புகள், கம்பளங்களில் இருந்து அழுக்கு மற்றும் தூசிகளை அகற்றவும் வேண்டும்.