
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் ஏதாவது ஒரு பொருளைக் கேட்டால், சில பெற்றோர்கள், ‘நான் அந்தக் காலத்தில் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படித்தேன். உனக்கு எல்லாவற்றையும் கேட்ட உடனே வாங்கிக் கொடுக்க வேண்டியது இருக்கிறது’ என்று கூறுவார்கள். இதனால் குழந்தைகள் சந்தோஷம் அடைவதில்லை. ‘எப்பொழுதும் பெற்றோர்கள் அவர்கள் காலத்தைப் பற்றி பேசுகிறார்களே’ என்று வருந்துவது உண்டு. அப்படி பேசுவது சரியா? அதனால் என்ன நன்மை, தீமைகள் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் கணினி விளையாட்டுகளிலும், தொலைக்காட்சியிலும், கைதொலைபேசியிலும் நேரத்தை அதிகம் செலவிடுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியில் நன்மையும், தீமையும் உண்டு என்பதை அனைவரும் அறிவோம். இதுபோன்ற நன்மை, தீமைகளில் பெற்றோர்கள்தான் விழிப்புணர்வுடன் இருந்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
பெற்றோர் காலத்துக்கேற்ப தங்கள் அறிவியல் தொழில்நுட்பத்தினை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். தெளிவற்ற வழிகாட்டல் குழப்பமாகிவிடும். பிள்ளைகளின் காலத்தின் வளர்ச்சியுடன் பெற்றோர்கள் தங்கள் காலத்தை இணைக்கக் கூடாது என்பதில் கவனமாக செயல்பட வேண்டும்.
எங்கள் நண்பர் ஒருவர் நான் படித்த காலத்தில், ‘எனக்கு இரண்டு செட் டிரஸ்தான் இருக்கும். அதையே துவைத்துதான் பள்ளிக்குப் போட்டு செல்வேன். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படித்தேன்’ என்று அடிக்கடி அவர் மகனிடம் கூறிக் கொண்டிருப்பார். ஒவ்வொரிடமும் இதையே கூறுவார். இதைக் கேட்டு கேட்டு மகனுக்கு அப்பா மீது ஒரு வெறுப்பே வந்துவிட்டது.
ஒரு நாள் அனைவரின் முன்னிலையிலும், ‘இன்னமும் உங்க காலத்தைப் பற்றியே பேசாதீர்கள் அப்பா! அந்தக் காலத்தில் அனைவரும் அப்படித்தானே இருந்தார்கள். படிக்கின்ற காலத்தில் பெற்றோர்களிடத்தில் அவ்வளவு காசு பணம் இருந்திருக்காது. அப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் எட்டு, பத்து பிள்ளைகள் கூட இருப்பார்கள். அப்பா மட்டும்தான் சம்பாதிப்பார். ஆதலால் அனைவரையும் ஒருவர் சம்பளத்தில்தான் வளர்த்து, படிக்க வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
எங்களுக்கு இப்பொழுது அப்படி இல்லை. இருவரும் வேலைக்குச் செல்கிறீர்கள். நான் ஒரு பையன்தான். எனக்கு நீங்கள் தாராளமாக செலவு செய்யலாம். நானும் ஒன்றும் வீணான பொருள் எதுவுமே கேட்பதில்லை. எத்தனை முறை சொன்னதையே கூறுவீர்கள்’ என்று கேட்க, அவர் சற்று அமைதியானார். ஆதலால் அந்தக் காலத்தை இந்தக் காலத்துடன் ஒப்பீடு செய்வதை நிறுத்த வேண்டும் பெற்றோர்கள். இதைத்தான் குழந்தைகள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இடையிலான புரிதல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நம்பிக்கையும், திறந்த மனதும், தெளிவான நிலையுடனும் பிள்ளைகளுடன் பழகுவது மிகவும் அவசியம். தான் சொல்வதைத்தான் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை திணிக்கும் பெற்றோர்களை ஒரு நேரத்தில் பிள்ளைகள் வெறுப்பதைக் காண முடிகிறது. இதனால் தமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் பிள்ளைகளுக்குக் கூறிக் கொண்டிருக்காமல், நாம் யோசிக்கும் அனைத்தையும் சொல்லிக்கொண்டே இருக்காமல், சூழ்நிலைக்கு ஏற்றதை மாத்திரம் கூறினால் நல்லது. பிள்ளைகள் நாம் கூறுவதில் எதை எடுத்துக் கொள்வார்கள், எதை விடுவார்கள், எதை மறுப்பார்கள் என்பது தெரியாததால் இரண்டு, மூன்று சொற்களில் நாசுக்காக விளக்கி விடுவதே நல்லது.
ஒருவரின் உயர்வுக்கோ, தாழ்வுக்கோ, தயக்கத்திற்கோ, தன்னம்பிக்கைக்கோ அவர்களது குழந்தை பருவமே முக்கியக் காரணம் ஆகிறது. இதை பெரியோர்கள் உலகப் புகழ் வாய்ந்தவர்கள் கூறுவதை பலமுறை பார்த்தும், கேட்டும், படித்தும் இருக்கின்றோம். ஆதலால் குழந்தைப் பருவ அனுபவங்கள் ஒருவித விசாரணையும் இல்லாமல் நேரடியாக ஒருவரின் ஆழ்மனதை சென்று அடைந்து விடுகிறது என்பதால், பெரியவர்களானதும் அவை அவ்வப்போது தலைகாட்டுவதைக் காண முடியும். நாமும் நமக்கு சிறு பிராயத்தில் நடந்ததைத்தான் எப்பொழுதும் நினைவுபடுத்தி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆதலால், எல்லா சூழ்நிலையிலும் குழந்தை பருவமே ஒருவரை தீர்மானிக்கிறது என்பதால் அப்பருவத்திலேயே அவர்களுக்கு நல்லதை போதித்து விட வேண்டும்.
இதை விடுத்து நம் கடந்த காலத்தைப் பற்றி இவர்களின் எதிர்காலத்தோடு ஒற்றுமைப்படுத்தி பேசினால், அதனால் எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதைத்தான் குழந்தைகள் இப்பொழுது விரும்புகிறார்கள் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.