

தினசரி சமையலுக்கு தேவைப்படும் கீரை வகைகளில் மிக முக்கியமானது கொத்தமல்லியும் புதினாவும் தான். இரண்டுமே சட்னியில் இருந்து பல வகை சமையல் ரெசிபிகளுக்கு மணம் சேர்க்கும் என்பதை அறிவோம்.
இதில் புதினா மிகவும் மருத்துவ குணம் மிக்கது என்பதால் ஒரு சிலர் தேநீரிலும் மற்றும் லெமன் டீ போன்றவற்றிலும் புதினாவின் தழைகளை சேர்த்து மணக்க மணக்க அருந்துவதுண்டு .
வாந்தி குமட்டல் போன்றவற்றிற்கு நிவாரணம் தருகிறது புதினா என்பதால் எப்போதும் கைவசம் புதினா இருந்தால் நன்றாக இருக்கும் தான். ஆனால் தினசரி பிரஷ்ஷாக வாங்க முடியுமா?
என்னதான் கடையில் வாங்கி வந்தாலும் அவைகள் இரண்டு மூன்று நாட்களில் வாடி வதங்கி விடுகிறது என்று நினைப்பவர்கள் வீட்டிலேயே இந்த முறையில் புதினாவை வளர்த்து தினசரி பிரஷ்ஷாக உபயோகிக்கலாம். இதற்கு தேவை அதிகம் இடமும் இல்லை அதிக செலவும் கிடையாது குறிப்பாக தினசரி நீரை ஊற்ற வேண்டும் என்ற கவலையும் இதில் கிடையாது.
நாம் வேண்டாம் என்று தூக்கி எறியும் கொக்கோகோலா பாட்டில்கள் மற்றும் நீர் கேன்கள் போதும். வாருங்கள். பாட்டில்களை உபயோகித்து அதிக தண்ணீர் ஊற்றாமல் எப்படி புதினாவை வளர்ப்பது என்று பார்ப்போம்.
முதலில் இரண்டு சாதாரண கோகோ கோலா பாடல்களை எடுத்துக் கொள்ளுங்கள் இதன் நடுவில் ஆக்சா பிளேடு கொண்டு அறுத்து இரண்டாக எடுத்துக் கொள்ளுங்கள் . இப்போது பாட்டிலின் அடிப்பகுதியில் நீரை ஊற்றுங்கள் .
புதினாவை உருவி விட்டு வேர்த்தண்டுகளை ரப்பர் பாண்ட் போட்டுக் கட்டி விடுங்கள் இப்போது வெட்டிய பாட்டில் மேல் உள்ள மூடி பகுதியில் மூடியை எடுத்து விட்டு அதில் புதினாவின் தண்டுகளை நுழைத்து அப்படியே நீரிருக்கும் பாட்டிலில் கவிழ்த்து வையுங்கள். (புதினா நீரில் மூழ்க வேண்டும். அந்த அளவுக்கு பாட்டிலை அறுத்துக் கொள்ளுங்கள்) .2 அல்லது 3 நாட்களில் புதினா வின் தண்டுகள் புதிய வேர் விட்டிருக்கும். அதை கவனமாக எடுத்து வையுங்கள்.
இப்போது அதே பாட்டில்கள் என்றாலும் சரி அல்லது புதிய பாட்டில்கள் என்றாலும் சரி எடுத்துக் கொள்ளுங்கள் பாட்டிலின் மூடியில் ஒரு சிறு துணி நுழையுமளவுக்கு துளை இடுங்கள். ஒரு முழம் இருக்கும் அளவுக்கு பருத்தித் துணியை ( தண்ணீர் உறிய வேண்டும்) எடுத்து மேலே ஒரு முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். முடிச்சை மூடியில் உள்ள துளையில் நுழைத்து துணியை கீழே இழுங்கள்
இப்போது அடி பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் துணையுடன் உள்ள மூடி உள்ள பாட்டிலைக் கவிழ்த்து அதில் தேவையான மண்ணை நிரப்பி வேர் விட்ட பொதினாத் தண்டுகளை நட்டு வையுங்கள். ஒரு வாரம் கழித்துப் பாருங்கள். கமகமக்கும் புதினா பச்சை பசேல் என்று வளர்ந்து இருப்பதைப் பார்க்கலாம். தேவைப்படும் போது ப்ரெஷாக கட் செய்து உபயோகியுங்கள்.
இந்த பாட்டில் புதினா வளர்ப்பு முறையில் மண்ணில் நீர் ஊற்ற வேண்டியதில்லை என்பதும் நீரில் விட்டுள்ள துணியின் மூலம் ஈரப்பதம் மண்ணில் எப்போதும் உறிஞ்சப் படுவதால் புதினா வளர்வதற்கு ஏதுவாகிறது என்பது சிறப்பு.
முதல் முறையாக செய்யும் போது அதிக வேலை என தோன்றும். ஆனால் ஒரே முறை இது போல் செய்து பாருங்கள். எளிதாக நம் வீட்டில் வளர்த்த புதினா கமகமக்கும் வீடு முழுவதும். இந்த செய்முறை உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.