இன்றைய காலகட்டத்தில் உலகத்திலேயே மிக பவித்திரமான வஸ்து எது தெரியுமா?

Vashthu
Vashthu
Published on

பவித்திரம் என்றால் தூய்மை அல்லது புனிதம் என்று பொருள்.

ஒருவர் வீட்டில் யாராவது இறந்து விட்டால் பிணத்தை எடுத்த பிறகு வீட்டை அலம்பி வீடு முழுவதும் புனித நீரான கங்கை நீரையோ அல்லது தண்ணீரில் கோமியத்தை கலந்தோ அல்லது துளசி இலையை போட்டோ தெளிப்பார்கள்.

தீட்டு கழிந்த பிறகு எல்லா துணிகளையும் தோய்த்து காய்ந்த பிறகு அவற்றின் மேலும் இதைத் தெளிப்பார்கள்.

சுடுகாட்டிற்கு போய் வந்தவர்கள் நேராக குளியலறைக்கு சென்று குளிப்பார்கள். தன்னுடைய காலணிகள், வாகனங்கள் என‌ எல்லாவற்றையும் தண்ணீரால் அலம்புவார்கள்.

இதைப்போல வீட்டில் ஒரு குழந்தை பிறந்தாலும் 10 நாட்களுக்கு தீட்டு அனுசரிக்கப்படும். பதினோறாவது நாள் புண்ணியாவசனம் என்ற‌ பெயரில் தாய் வைத்திருந்த பொருள், துணி என எல்லாவற்றையும் தண்ணீரை ஊற்றி பவித்திரமாக்குவார்கள். வீட்டிலும் கோமியத்தை தண்ணீரில் கலந்து தெளிப்பார்கள். பிரசவித்த தாய்க்கும் அந்த நீரை பருகத் தருவார்கள்.

சில பேர் மிகவும் மடி ஆச்சாரத்தோடு இருப்பார்கள். இவர்கள் வீட்டில் முடி வெட்டிக் கொண்டு வந்தால் கூட காலணிகள், வாகனம் என எல்லாவற்றையும் அலம்ப வேண்டும். இன்னும் சொல்லப் போனால் இவர்கள் சாதாரணமாக ஆஸ்பத்திரிக்கு போய் விட்டு வந்தால் கூட குளிப்பார்கள். அணிந்திருந்த துணிகளையும் தண்ணீரில் அலசுவார்கள்.

இன்னும் சொல்லப் போனால் தொலைபைசி மூலமாக கெட்ட செய்தி கேட்டால் கூட குளித்து விட்டு வருவார்கள்.

இவ்வளவு ஏன், கோயில்களில் கூட அன்றாடம் பூஜையை தொடங்குவதற்கு முன்னால் ஒரு சொம்பில் தண்ணீரை ஊற்றி அதில் ஒரு துளசியை போட்டு பிறகு அந்த நீரை எல்லா பூஜை சாமான்கள் மீதும் தெளிப்பார்கள்.

இவை எல்லாம் எதற்காக செய்கிறார்கள்?

ஒரு வீட்டில் தீட்டு நேர்ந்துவிட்டால் வீட்டில் உள்ள பவித்திரம் குறைந்து விடுவதாகவும், அதன் காரணமாக தீட்டு கழிந்தவுடன் வீட்டில் உள்ள எல்லாவற்றின் மீதும் புனித நீரை தெளிப்பதால் மறுபடியும் பவித்திரமாகி விடுவதாகும் கருதப்படுகிறது. அதைப் போல் கோயில்களிலும் தினமும் பூஜைக்கு முன்னால் புனிதத்திற்காக இத்தகைய முறை அனுசரிக்கப்படுகிறது.

சரி, இப்ப ஒரு விஷயத்தை யோசித்து பாருங்கள்...

ஒரு பொருள் இருக்கிறது... பவித்தரமான வஸ்து... ஆமாம்... அதை மட்டும் யாரும் தண்ணீர் ஊற்றி அலம்ப மாட்டார்கள்... ஆச்சாரம் பார்க்கும் புரோகிதர்கள் கூட அதை அலம்ப மாட்டார்கள்...

இதையும் படியுங்கள்:
கைபேசி மோகத்தால் பறிபோகும் கண்கள்: 2050-ல் பாதி குழந்தைகளை அச்சுறுத்தும் பார்வை குறைபாடு!
Vashthu

அந்த பொருளை பாக்கெட்டில் வைத்து கொண்டு சுடுகாட்டிற்கும் போகலாம்... மறுபடியும் அதையே எடுத்து கொண்டு கோயிலுக்கும் போகலாம்... ஆஸ்பத்திரிக்கும் போகலாம்... கழிவறையில் செல்லும் போது கூட எடுத்துக் கொண்டு செல்லலாம்...

முடி வெட்டி கொண்டு வீட்டிற்குள் வரும் போது அம்மாக்கள், காலணியை அலம்பு, வண்டியை அலம்பு, துணியை தண்ணீரில் போடு... என்பார்கள், ஆனால் முதலில் இந்த பொருளை மட்டும் தண்ணீர் ஊற்றாமலே வாங்கி வைத்து கொண்டு விடுவார்கள்...

ஐயா, விபத்திலோ அல்லது மருத்துவமனையிலோ அல்லது எங்கேயாவது பொது இடத்திலோ யாராவது இறந்து விட்டால், உடன் இருப்பவர்கள் முதலில் அவர்களுடைய பாக்கெட்டிலோ அல்லது கைப்பையிலோ இருக்கும் அந்த பொருளை முதலில் எடுத்து கொண்டு விடுவார்கள்...

ஆமாம்... நம் உயிரையும் விட மேலாக மதிக்கபடுகின்ற வஸ்து அது...

உலகமே இதற்கு அடிமை... இது இல்லை என்றால் உயிர் இல்லை.... வீடுகளில் பவித்தரத்திற்கு துளசி செடி இருக்கிறதோ இல்லையோ தெரியாது... ஆனால் வீட்டிலுள்ள அத்தனை நபரின் கைகளிலும் இது இருக்கும்...

அப்படி பவித்திரமான வஸ்து எது?

கண்டுபிடிங்க... பார்க்கலாம்....

இன்னுமா விடை தெரியவில்லை உங்களுக்கு...

அது வேறு எதுவுமில்லை...

நம் கைகளில் எப்போதும் இணைந்திருக்கும் கைபேசி தான் பவித்திரமான வஸ்துவாக இக்காலத்தில் கருதப்படுகிறது!!!

இதையும் படியுங்கள்:
மொபைல் போன் மோகத்தை குறைக்கும் 6 வழிகள்!
Vashthu

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com