ஒரே கூரையின் கீழ் தனித்தனியா? குடும்ப உறவுகளை இணைக்கும் 20 நிமிட அதிசயம்!

நவீன வாழ்க்கையில் தொலைந்துபோன பாசப் பிணைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்.
குடும்ப உறவுகள்
குடும்ப உறவுகள்AI image
Updated on

டிஜிட்டல் யுகத்தில் ஒரே வீட்டில் இருந்தும் மனதளவில் தூரமாகி வரும் குடும்பங்கள் குறித்து இந்த கட்டுரை பேசுகிறது. தினமும் வெறும் 20 நிமிடங்கள் மொபைல், டிவி அனைத்தையும் விட்டு விட்டு குடும்பமாக அமர்ந்து பேசும் பழக்கம் எப்படி உறவுகளை வலுப்படுத்துகிறது, தவறான புரிதல்களை குறைக்கிறது, பிள்ளைகளின் தன்னம்பிக்கையை உயர்த்துகிறது என்பதை ஒரு குடும்பத்தின் அனுபவம் மூலம் விளக்குகிறது.

இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் மற்றவருடன் பேசி மகிழ்கிறோமா? அல்லது வேலை வேலை என்று இருக்கிறோமா?. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்தாலும் மனதளவில் ஒன்றாக இருக்கிறார்களா? காலையில் அவசரமாக வேலைக்குச் செல்வது, பள்ளி கல்லூரி அலுவலகம் செல்வது, மாலையில் மொபைல், தொலைக்காட்சி, சமூக வலைத் தளங்களில் மூழ்குவது என்று அன்றாட வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது.

இந்த அவசரத்தில் ஒருவரின் மனநிலையை மற்றொருவர் அறிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போகிறது. ஆனால் தினமும் வெறும் 20 நிமிடங்கள் குடும்பமாக அமர்ந்து மனம்விட்டு பேசினால் அந்த சிறிய நேரமே குடும்ப உறவுகள் வலுப்படுத்தும் மிகப்பெரிய முதலீடாக மாறும்.

எங்கள் தோழி வீட்டில் இப்படித்தான். அவள் கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் மொபைலில் மூழ்கிவிடுவார். அவரது மனைவி அதாவது என் தோழி சமையல் அறையில் பிஸியாக இருப்பாள். மகன் கணினியில் விளையாடிக் கொண்டு இருப்பான். மகள் மொபைலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருப்பாள். ஒரே வீட்டில் இருந்தாலும் "சாப்பிட்டாயா? ஹோம் ஒர்க் முடிச்சாச்சா?" என்பதைத் தவிர வேறு பேச்சே இல்லை.

ஒரு நாள் மகன் பள்ளியில் அவனுடைய ஆசிரியர் தினமும் குடும்பத்துடன் 20 நிமிடங்கள் பேசி எப்படி பயன்படுகிறது என்று சொல்லுங்கள்' என்று கூறி இருக்கிறார். அதை வீட்டில் மகன் சொல்லி இருக்கிறான். முதலில் அனைவரும் அப்படி என்ன மிரகிள் நடக்கும் என்று சிரித்தனர். இருப்பினும் ஒரு முயற்சியாக இரவு உணவிற்கு பிறகு 20 நிமிடங்கள் அனைவரும் மொபைலை விலக்கி வைத்து அமர்ந்தனர்.

குடும்ப உறவுகள்
குடும்ப உறவுகள்AI image

முதல் நாள் பேசுவதற்கு ஒன்றும் இல்லாதது போல இருந்தது. பிறகு அன்றைய தினத்தில் நடந்த ஒரு நல்ல விஷயத்தை ஒவ்வொருவரும் பகிர்ந்தனர். இரண்டாம் நாள் சிறு வயது நினைவுகள் பேசப்பட்டன. அடுத்த நாள் எதிர்கால ஆசைகள் பற்றி பேசினர். சில நாட்களில் வீட்டின் சூழலே மாறியது.

அமைதியாக இருந்த மகள் தனது பள்ளி நண்பர்கள் பற்றிய தன் மனதில் இருந்த கவலைகளைப் பகிர்ந்தாள். மகன் படிப்பில் சந்தித்த சிரமங்களை வெளிப்படையாக கூறினான்.

தோழி தனது சோர்வைப் பற்றி கூறியதும் அவள் கணவர் மகன் மகள் அனைவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்யத் தொடங்கினர். அவள் கணவரும் மனைவியின் சோர்வுக்கு என்ன காரணம் என்று அன்புடன் கேட்டு புரிந்து கொண்டார். தன்னுடைய அலுவலக அழுத்தத்தை அவர் பகிர்ந்த போது மனைவி மகள் மகன் அனைவரும் அவருக்கு ஆறுதலாக பேசினர்.

இந்த 20 நிமிட உரையாடல் யாரையும் குறை கூறுவதற்கான நேரமாக இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நேரமாக இருந்தது. அதனால் தவறான புரிதல்கள் குறைந்தன..சிரிப்பு அதிகரித்தது.. பாசமும் புரிதலும் வலுப்பெற்றன. பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை வளர்ந்தது.

இதையும் படியுங்கள்:
புத்தாண்டில் உங்கள் உடலையும் உள்ளத்தையும் மாற்றப்போகும் 5 நிமிட ரகசியம்!
குடும்ப உறவுகள்

பெற்றோருக்கு பிள்ளைகளின் மனநிலையை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் பெரிதாக மாறுவதற்கு முன்பே பேச்சின் மூலம் அதற்கு தீர்வு காண முடிந்தது.

சில நேரங்களில் பெரிய மாற்றங்களை உருவாக்குவதற்கு பெரிதாக செலவு செய்யத் தேவையில்லை. தினமும் மனம் திறந்து பேசுவதற்காக ஒதுக்கும் 20 நிமிடங்களே குடும்ப உறவுகளை வாழ்நாள் முழுவதும் வலுப்படுத்தும் அரிய பரிசாக மாறும்.

குடும்ப உரையாடல் என்பது பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே பேசுவதற்கான நேரம் அல்ல. அன்றைய நாளில் நடந்த மகிழ்ச்சியான சம்பவங்கள், பள்ளி கல்லூரி அல்லது அலுவலக அனுபவங்கள், எதிர்கால கனவுகள், நன்றி உணர்வை ஏற்படுத்திய தருணங்கள் போன்றவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்.

இன்று உனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த விஷயம் என்ன? நாளை நீ எதை எதிர்பார்க்கிறாய்? இன்று யாருக்காவது ஏதாவது உதவி செய்தாயா? போன்ற எளிய கேள்விகள் உரையாடலை சுவாரசியமாக மாற்றும். இப்படிப்பட்ட உரையாடல்கள் குழந்தைகளின் பேச்சுத் திறனை வளர்ப்பதுடன் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய கட்டு சாதக் கூடை: அன்றைய மாட்டு வண்டி முதல் இன்றைய ஆன்லைன் டெலிவரி வரை!
குடும்ப உறவுகள்

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பு, மன அழுத்தம் எதிர்பார்ப்புகள் போன்றவற்றை இயல்பாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.‌ இதனால் குடும்பத்தில் பரஸ்பர நம்பிக்கை வலுவடைந்து சிறிய கருத்து வேறுபாடுகள் கூட பெரிதாக மாறாமல் அன்போடு தீர்க்கப்படுகின்றன.

இந்த கட்டுரையை வாசிப்பதின் மூலம் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதற்கு அதிக நேரம் தேவையில்லை. அன்புடன் செலவிடும் சிறிய நேரமே போதுமானது என்பதை உணர்வீர்கள்... தினமும் 20 நிமிடங்களை குடும்பத்தினருடன் அர்த்தமுள்ள வகையில் பகிர்ந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியான, புரிதல் நிறைந்த, பாசம் பெருகிய குடும்பச் சூழலை உருவாக்கும் ஊக்கத்தையும் பெறுவீர்கள்!!

குடும்ப உறுப்பினர்களிடையே காணப்படும் இடைவெளிகளைத் தாண்டி ஆழமான புரிதலை ஏற்படுத்தி, எத்தகைய பிரச்சினைகளையும் பேச்சின் மூலமாகவே எளிதில் தீர்க்கும் தெளிவைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com