ரீல்ஸ் ஆசான்களும்... மிஸ்ஸாகும் பாட்டி வைத்தியங்களும்: நவீன வளர்ப்பின் முரண்பாடுகள்!

modern-parenting
modern-parenting
Updated on

ன்றைய காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய சவாலான விஷயமாக மாறிவிட்டது. முன்பு ஒரு வீட்டில் பத்து குழந்தைகள் இருந்தாலும், ஒரே மாதிரி உணவு, ஒரே சமையல், ஒரே வாழ்க்கை முறை. ஆனால் இன்று ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி டயட், விதவிதமான ரெசிபிகள். இது காலத்தின் மாற்றமா அல்லது இன்றைய பெற்றோரின் ஃபேஷனா என்று கேள்வி எழுகிறது.

இன்றைய பெற்றோரின் ஆசான் வீட்டில் உள்ள பெரியவர்கள் அல்ல; அவர்கள் பார்க்கும் Instagram ரீல்ஸ் போடுபவர்கள்தான். தினமும் சமூக வலைதளங்களில் வரும் விஷயங்களையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். குழந்தை வயிற்றில் இருக்கும் காலத்திலிருந்தே டாக்டர் கூறுவதை விட, ரீல்ஸில் வரும் தகவல்களையே நம்பும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், குழந்தை வளர்ப்பில் “காப்பி-பேஸ்ட்” முறை அதிகமாகியுள்ளது. “அந்த வீட்டில் அந்த வயதில் குழந்தைக்கு இப்படிச் செய்தார்கள்; நாமும் அதையே செய்ய வேண்டும்” என்ற எண்ணமே அதிகம். ஆனால் அந்தக் குழந்தையின் சூழ்நிலை, உடல்நிலை, காலநிலை போன்றவற்றை யாரும் கவனிப்பதில்லை.

உணவு முறையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. “no sweets, no salt” போன்ற கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றுகிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் சாப்பிட்ட முன்னோர் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்தனர். அந்த இயற்கையான உணவுமுறையை இப்போது பின்பற்றாததால், குழந்தைகளின் வாழ்க்கை முறையிலும் குடும்பத்திலும் கூட மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இன்றைய கல்வி முறையையும் நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. காலை 7 மணிக்கே முதுகில் புத்தகச் சுமையோடும், கையில் சாப்பாட்டு கூடையோடும், தூக்கக் கலக்கத்தோடு குழந்தைகள் ஸ்கூல் பஸ்ஸில் ஏறும் காட்சி மனதை பாதிக்கிறது.

பெற்றோர்கள் “பெரிய ஸ்கூல், எல்லா வசதிகளும், வீட்டுக்கே பஸ்” என்று பெருமை பேசினாலும், அந்தக் குழந்தை காலை 7 மணிக்கு கிளம்பி மாலை 4 மணிக்குத்தான் வீடு திரும்புகிறது. பிறகு ட்யூசன் மற்றும் பிற தனிப்பட்ட வகுப்புகள், இந்த நீண்ட நேர பள்ளி வாழ்க்கை குழந்தையின் மனநிலைக்கும் உடல் நலத்திற்கும் எவ்வளவு பொருத்தமானது என்பது கேள்விக்குறியாகிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டுத் தரையை மாற்றணுமா? பராமரிப்பு இல்லாத, பட்ஜெட்டுக்கு ஏற்ற இன்டர்லாக் டைல்ஸ் வகைகள்!
modern-parenting

மேலும், ஆறு மாத குழந்தைகளுக்கே கலர்ஸ், நாடுகள், கொடிகள் என்று கற்பிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில், குழந்தைகள் கட்டாயமாக கற்றலுக்குள் தள்ளப் படுகின்றனர். குழந்தை ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தையாக இருந்தால்தான் அதன் இயல்பான மகிழ்ச்சி வெளிப்படும்.

மேலும் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியுடன், குழந்தைகளுக்கென தனியாக வடிவமைக்கப்பட்ட பல ஆப்ஸ்களும் உருவாகி வருகின்றன. உதாரணமாக YouTube Kids, Messenger Kids போன்றவை குழந்தைகள் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை.

இந்த ஆப்ஸ்களில் குழந்தைகளுக்கான கல்வி வீடியோக்கள், விளையாட்டுகள், மற்றும் வயதிற்கு ஏற்ற உள்ளடக்கங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும், பெற்றோர் கண்காணிப்பு வசதிகளும் இதில் இருப்பதால், குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கட்டுப்படுத்த முடிகிறது.

ஆனால், இந்த ஆப்ஸ்கள் பாதுகாப்பானவை என்றாலும், அதிக நேரம் பயன்படுத்துவது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கக்கூடும். எனவே, தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்த கற்றுக்கொடுப்பதும், அதற்கான எல்லைகளை அமைப்பதும் பெற்றோரின் முக்கிய பொறுப்பாகும்.

இந்த மாற்றங்களுக்கிடையில், குழந்தைகளின் சிந்தனை திறன் அதிகரித்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. என் உறவினரின் நான்கு வயது பேரன் எங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை பார்த்து விட்டு ஏன் பாட்டி “இந்த தண்ணீர் டேங்க் எவ்வளவு கெபாசிட்டி?” என்று கேட்டான். அந்த வயதில் இத்தனை விஷயங்களை கவனித்து கேட்பது ஆச்சரியமானது.

ஆனால் அந்தக் கேள்வி அந்த வயதிற்கேற்றதா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். நாம் அதை “அறிவுத்திறன்” என்று பாராட்டுகிறோம்; ஆனால் அது குழந்தையின் இயல்பான வளர்ச்சியோடு பொருந்துகிறதா என்பது முக்கியம்.

ஒரு ஒன்றரை வயது குழந்தை தானாகவே டிவி ஆன் செய்வது, மொபைலில் ஆப்ஸ்களை திறந்து மாற்றி மாற்றி பயன்படுத்துவது போன்றவை சாதாரணமாகிவிட்டன. “சித்திரமும் கைப்பழக்கம்” என்பதுபோல், இந்த பழக்கங்கள் சிறு வயதிலேயே உருவாகின்றன.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை! இந்த 4 இடங்களில் தெரியாமல் கூட ஃபோட்டோ எடுத்துவிடாதீர்கள்!
modern-parenting

முன்னோர் காலத்தில் ஐந்து வயதில்தான் பள்ளியில் சேர்த்தார்கள். அதுவும் குழந்தையின் உடல் வளர்ச்சியை பார்த்துதான். ஆனால் இன்று அந்த இயல்பான வளர்ச்சி முறைகள் மாற்றப்பட்டுவிட்டன.

மொத்தத்தில் பார்க்கும்போது, இன்றைய குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி முறைகள் வளர்ச்சியையும் தளர்ச்சியையும் ஒரே நேரத்தில் கொண்டிருக்கின்றன. அறிவு அதிகரித்தாலும், இயல்பு குறைந்து வருகிறது. வசதிகள் அதிகரித்தாலும், சுதந்திரம் குறைந்து வருகிறது.

குழந்தைகள் அறிவாளிகளாக மட்டும் அல்ல, மகிழ்ச்சியான மனிதர்களாகவும் வளரவேண்டும் என்பதே நாம் நினைவில்கொள்ள வேண்டிய மறுக்க முடியாத முக்கியமான உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com