

மழைக்காலம் என்பது மகிழ்ச்சி தரக்கூடியதுதான். மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும், வாழ்வாதாரம் உண்டாகும். பருவமழையில் மகிழ்ச்சிகள் நிறைந்திருந்தாலும் சில சிக்கல்களையும் சந்திக்க வேண்டி வரும். காரணம் மழைக்காலத்தில் நுண்ணுயிர்களுடைய வளர்ச்சி மிக வேகமாக அதிகரிக்கும். இதனால் உணவுப் பொருட்கள் குறிப்பாக மசாலா பொருட்கள் பூஞ்சை ஏற்பட்டு விரைவில் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது.
மழைக்கால ஈரப்பதத்தால் மளிகைப் பொருட்கள் வீணாகிப் போகலாம். இவற்றை தவிர்ப்பதற்கு நன்கு காய்ந்த காற்று புகாத டப்பாக்களில் சேமிக்க வேண்டும். அத்துடன் அலமாரிகளில் சிலிக்கா ஜெல் வைப்பது ஈரப்பதத்தை உறிஞ்சி பொருட்களை பாதுகாக்கும்.
பருப்பு மற்றும் மசாலாப் பொடிகளை நேரடி வெயில் மற்றும் வெளிச்சம் இல்லாத இடங்களில் வைப்பது சிறப்பு. முக்கியமாக கெட்டுப்போன பொருட்களை உடனடியாக கிச்சனிலிருந்து அப்புறப்படுத்துவது என்பது மற்ற பொருட்களை காப்பாற்ற உதவும்.
மழைக்காலத்தில் உப்பு மற்றும் மிளகாய் தூள் கட்டியாகாமல் இருப்பதற்கு சில வழிகள் உள்ளன.
பச்சரிசி அல்லது வெந்தயம் சேர்த்தல்:
உப்பு மற்றும் மிளகாய்த்தூள் வைக்கும் ஜாடியில் சிறிது அரிசி மணிகளை எடுத்து சின்னத் துணியில் கட்டி சேர்ப்பது அல்லது ஒரு சிறு துணியில் கட்டிய சிறிது வெந்தயத்தை சேர்த்து வைப்பது நல்ல பலனைத் தரும். இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உப்பை மற்றும் மிளகாய்த்தூளை கட்டியாகாமல் பாதுகாக்க உதவும்.
அதேபோல் காபிக் கொட்டைகள் சிலவற்றை இதே முறையில் பயன்படுத்தலாம். இவையும் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சும். இதன் சிறப்பு என்னவென்றால் உப்பு ஜாடியில் போட்டால் அதை உபயோகிக்கும் பொழுது காபியின் மணம் மற்றும் சுவை வராது. எனவே அவற்றை சமையலுக்கு தாராளமாக பயன்படுத்தலாம்.
கிராம்பு போடுதல்:
மிளகாய்த்தூள் உள்ள டப்பாக்களை சரியாக மூடவில்லை என்றால் காற்றில் உள்ள ஈரப்பதத்தால் அவை விரைவில் கெட்டு, அவற்றின் மீது ஒரு வெள்ளை நிறப் பூஞ்சைப் படலம் உருவாகும்.
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றுடன் 3-4 முழு கிராம்புகளை போட்டு வைக்க கட்டியாகாமலும், பூஞ்சை பிடிக்காமலும் பாதுகாக்க முடியும். அல்லது ஒரு சிறிய துண்டு சுக்கைக் கூட போட்டு வைக்கலாம்.
இவை ஈரப்பதத்தை தடுப்பதுடன் பூச்சிகள் வராமலும் பாதுகாக்கும். மிளகாய்களை சேமித்து வைப்பதாக இருந்தால் அவற்றை மைக்ரோவேவில் வைத்து சூடாக்கி வைக்கலாம்.
காற்றுப் புகாத பாத்திரங்கள்:
பிளாஸ்டிக் டப்பாக்களைத் தவிர்த்து உப்பு மற்றும் மிளகாய்த்தூளை ஈரப்பதம் படாதவாறு நல்ல காற்றுப் புகாத (Airtight) உலர்வான கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடிகளில் போட்டு இறுக்கமாக மூடி வைக்கலாம். இவை ஈரப்பதம் உள்ளே நுழைவதைத் தடுக்கும். இல்லையென்றால் ஈரமான காற்றில் இருந்து நீரை உறிஞ்சி அதன் நுண்ணிய துகள்கள் ஒன்றாக ஒட்டிக்கொண்டு கட்டிகளாக மாறிவிடும்.
உலர் கரண்டிகளைப் பயன்படுத்துவது:
உப்பு மற்றும் மிளகாய்த்தூளை எடுக்கும் பொழுது எப்போதும் ஈரம் இல்லாத முற்றிலும் காய்ந்த அதாவது உலர்ந்த சுத்தமான ஸ்பூனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஈரமான ஸ்பூனை பயன்படுத்தினால் விரைவில் கட்டி தட்டிவிடும்.
கட்டி தட்டுவது மட்டுமே பிரச்சனையாக இருந்தால் அந்த மசாலாப் பொருட்களை சாப்பிடுவது பாதுகாப்பானது. ஆனால் அதற்கு முன் மூன்று விஷயங்களை நாம் சரி பார்க்க வேண்டும். கட்டி தட்டிய அந்த பொருட்களில் வெள்ளை, பச்சை அல்லது சாம்பல் நிற பூஞ்சைகளைக் கண்டாலோ, புளித்த அல்லது பழைய வாசனையை உணர்ந்தாலோ, பூச்சிகளையும், சிலந்தி வலைகளையும் கண்டாலோ அந்த மசாலாப் பொருட்களை உடனடியாக தூக்கி எறிந்து விடவேண்டும்.
அதுவே பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் சாதாரணமாக இருந்து கட்டிகள் இருந்தால் உலர்ந்த கரண்டியால் அவற்றை உடைத்து சிறிது நேரம் வெயிலிலோ அல்லது சூடான வாணலியில் சிறிது நேரம் வைத்து எடுத்து திரும்பவும் பயன்படுத்தலாம்.