
இன்றைய உலகம் அளவுக்கு அதிகமான பகட்டும், ஆடம்பரமும், அதிகமான தொழில்நுட்ப வசதிகளையும், பணத்தை வாரி இறைக்கும் மக்களின் மனோநிலையும் கொண்டதாக இருக்கிறது. எளிமை என்பது சிறுமையல்ல. உண்மையில் அலங்காரமான ஆபரணம்தான். எளிமை என்பது பற்றாக்குறையோ அல்லது கஞ்சத்தனமோ அல்ல, மாறாக நல்ல செழுமையையும் மதிப்பையும் வெளிக்காட்டும் ஒரு அழகான தேர்வு. எந்தெந்த விதங்களில் எளிமையைக் கடைப்பிடிக்கலாம் என்பதைப் பற்றிய விளக்கத்தை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இப்போதைய வாழ்க்கை சூழலில் மக்கள் உடை, உணவு, பயணம் என்று எல்லாவற்றிற்கும் பணத்தை தண்ணீராக செலவழிக்கிறார்கள். இத்தகைய சூழலில் எளிமை என்கிற மதிப்பு வாய்ந்த விஷயம் மிகத்தேவையாக இருக்கிறது. தேவைக்கு அதிகமான உடைகளை வாங்கி பீரோவில் அடுக்கி வைத்துக்கொண்டு விதவிதமாய் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வெறும் லைக்குக்காக மட்டுமே வாழும் மக்களின் மனோநிலை அதிகரித்துவிட்டது.
உடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, அத்தியாவசியமான ஆடைகளை மட்டுமே வாங்குவதை வழக்கமாக மாற்றவேண்டும். இது வீட்டில் உள்ள பிற பொருள்களுக்கும் பொருந்தும். பிறர் பார்த்து பொறாமைப்பட வேண்டும் என்பதற்காக காஸ்ட்லி சோபா செட்டுகள், வீட்டை நிறைக்கும் தேவையில்லாத பொருள்கள், மின்சார, மின்னணு சாதனங்கள் போன்றவற்றை வாங்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருள்களை வாங்குவதை கைவிட வேண்டும். நீடித்து உழைக்கும் பொருட்களில் முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் பொருளும் பணமும் வீணாவதைத் தடுக்கலாம். அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிக்க வேண்டும். இது தெளிவான சிந்தனைக்கும் அமைதியான மனநிலைக்கும் வழி வகுக்கும். புதிதாக எந்த பொருள் வாங்குவதற்கு முன்பும் அது உண்மையிலேயே உங்களுக்கு தேவைதானா பலமுறை யோசித்து பிறகுதான் வாங்க வேண்டும்.
வாழ்க்கையில் எளிமையை கடைப்பிடிப்பதால் உண்டாகும் நன்மைகள்: எளிமையாக வாழ்வது குழப்பமில்லாத மனநிலையைக் குறிக்கிறது. தெளிவான சிந்தனையை அனுமதிக்கிறது. கவனச்சிதறல்களை நீக்கி உண்மையிலேயே தேவையான விஷயங்களில் மட்டும் கவனம் வைக்க உதவுகிறது. ஆடம்பரத்தின் மூலம் நமது மதிப்பை பிறரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எளிமையில் இல்லை.
அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் காலகட்டத்தில் எளிமையான வாழ்க்கை முறை நமக்கும் பூமிக்கும் சக மனிதர்களுக்கும் மிகுந்த நன்மை செய்யும். உயர்தரமான பொருட்களை தேர்ந்தெடுப்பது, கழிவுகளை குறைப்பது போன்றவை பொறுப்புள்ள குடிமகன்கள் செய்யவேண்டிய கடமைகள் ஆகும்.
அடிக்கடி ஹோட்டல்களில் ஆர்டர் செய்து விலை அதிகமான உணவுகளை வாங்கி உண்பது உடலுக்கு ஆரோக்கியக் கேட்டை உண்டாக்கும். வீட்டிலேயே எளிமையான சத்தான உணவை சமைத்து சாப்பிடும்போது பணம் மிச்சமாவது மட்டுமல்லாமல் நமது ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
பிறந்தநாள், திருமண நாட்கள் மற்றும் பிற விசேஷங்களை ஆடம்பரமான முறையில் பலரையும் அழைத்து விருந்து வைத்து கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. குடும்பத்தினருடன் கொண்டாடும்போது அது ஆழமான அன்பை குடும்ப உறுப்பினர்களிலேயே விதைக்கும். பிறருடைய பொறாமையிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். அடுத்து வரும் தலைமுறைக்கு எளிமையான வாழ்க்கை வாழ்வது ஒரு நல்ல பாடமாக அமையும்.
மிகவும் பிரபலமான, வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்கள் எளிமை என்கிற ஆபரணத்தைதான் அணிகிறார்கள். சிக்கல் இல்லாத, மனதிற்கு அமைதியையும், பிறரிடம் மரியாதையும் மதிப்பையும் பெற்றுத்தரும் எளிமை என்ற ஆபரணத்தை அனைவரும் அணிந்து கொள்வோமே.