
பிறரிடம் பேசிப் பழக உங்கள் குழந்தை வெட்கப்படுகிறதா? பெற்றோரே, இந்த ஐந்து ஆலோசனைகள் உங்களுக்குத்தான்.
சில இந்திய பெற்றோர்களுக்குரிய பெரியதொரு பிரச்னை, அவர்களின் குழந்தை அதிகம் வெட்கப்பட்டு, வீட்டுக்கு வரும் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் பேச மறுத்து ஓடி ஒளிவதுதான். விருந்தினர்கள் குழந்தையிடம், "ஏன் பேச மாட்ற", "வெட்கப்படாதே" என்றெல்லாம் கூறும்போது பெற்றோர்களுக்கு சங்கோஜம் உண்டாவது இயற்கை. குழந்தையின் கூடப் பிறந்த குணம் இது. இதை பொறுமையுடன், ஊக்குவிப்பை கொடுத்து சுலபமாக சரி பண்ணிவிட முடியும். அதற்கு பெற்றோர் பின்பற்ற வேண்டிய 5 வழி முறைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
குழந்தையின் உணர்வுகளை சகஜ நிலைக்கு கொண்டு வருதல்: "அது ரொம்ப வெட்கப்படும்" ன்னு உறவினர்கள் முன் கூறி, அதைப்பற்றி தேவையில்லாத முத்திரை குத்தி அந்த குணத்தை நிரந்தரமாக்கி விடாதீர்கள். தனிமையில் குழந்தையிடம் பேசி, "மற்றவர்கள் முன் பேசும்போது கொஞ்சம் பதட்டமாவது இயல்புதான். போகப் போக சரியாகிடும்" என்று நம்பிக்கையூட்டுங்கள். விரைவில் அவர்கள் அதைப் புரிந்துகொண்டு தன்னம்பிக்கையோடு சகஜ நிலைக்கு வந்துவிடுவர்.
அழுத்தம் கொடுப்பதையும் ஒப்பிட்டுப் பேசுவதையும் தவிர்த்தல்: உறவுக்காரக் குழந்தைகளுடன் போய்ப் பேசச் சொல்லி வலியுறுத்துவது மற்றும், "அவர்களைப் பார், எப்படி சிரித்துப் பேசி மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்" என்று ஒப்பீடு செய்தல் ஆகியவை எதிர்மறை விளைவுகளையே உண்டு பண்ணும்.
குழந்தைகளுக்கு பெற்றோரே முன்மாதிரியாக விளங்குவது: குழந்தைகள் தங்களை சுற்றி நடப்பதை உற்றுக் கவனித்து அதை அப்படியே பின்பற்றும் குணம் கொண்டவர்கள். பெற்றோர், வீட்டுக்கு வருபவரை இன்முகத்துடன் வரவேற்று, அவர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டிருப்பது அவசியம். அதை தொடர்ந்து கவனிக்கும் குழந்தைகள், அதே பழக்கத்தை தாங்களாகவே பின்பற்ற ஆரம்பித்துவிடுவர்.
கெட்-டுகெதர் (get together) போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முன் குழந்தைகளை தயார்படுத்துதல்: சிறிய அளவிலான குடும்ப நிகழ்வுகள் நடைபெறும்போது, அவற்றில் பங்கேற்கும் முன், சந்திப்பவர்களிடம் எப்படி 'ஹலோ' சொல்வது, எப்படி பேசுவது என்பதை குழந்தைகளுக்கு நடித்துக் காட்டி, அதையே அவர்களை கண்ணாடி முன் செய்யச்சொல்லி அவர்களைத் தயார் பண்ணுவது, குழந்தைகளிடமுள்ள சோசியல் ஸ்ட்ரெஸ் குறைய வழி வகுக்கும்.
முதற்படியாக ஒரே ஒரு நபருடன் பழகச் செய்வது: ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்டோருடன் கலந்துரையாட பழக்குவதைவிட, உறவினர் ஒருவரை ஒரு குழந்தையுடன் வீட்டுக்கு வரவழைத்து, அந்த குழந்தையுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசவும், விளையாடவும் சொல்லித்தரலாம்.
வெட்கப்படும் குணம் கொண்ட குழந்தை, சூழ்நிலையின் அழுத்தம் படிப்படியாக குறைவதை உணர்ந்து, பிறகு அதிகமான நபர்கள் இருக்குமிடத்திலும் சகஜமாக பேசிப்பழக ஆரம்பித்துவிடும்.
அதிகம் வெட்கப்படும் குழந்தையை திறனற்றது என ஒதுக்கிவிடாமல், அதற்குத் தேவைப்படும் பாதுகாப்பை வழங்கி, கால அவகாசத்தையும் கொடுத்தால் அதுவும் சிறப்பான குழந்தைதான் என்பதை நிரூபித்துவிடும்.