

மழைக்காலம் என்றாலே இதமான குளிர் காற்றுடன் சேர்ந்து கொசுக்களும் நம் வீட்டிற்குள் படை எடுக்கத் தொடங்கிவிடும். டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன் குனியா போன்ற நோய்கள் பரவுவதற்கு இந்த கொசுக்களே முக்கிய காரணமாக அமைகின்றன. கொசுக்களை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன் குழந்தைகளுக்கு கடுமையான அலர்ஜியையும் உண்டாக்கும். இதற்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பது தான் சரி.
மழைக்காலத்தில் கொசுக்களின் தொல்லை அதிகரிப்பது இயல்பு. ரசாயனங்கள் நிறைந்த கொசு விரட்டிகளுக்குப் பதிலாக, இயற்கையான முறையில் கொசுக்களை விரட்ட நம் வீட்டைச் சுற்றிலும், ஜன்னல் ஓரங்களிலும், நம் வீட்டின் உள்ளேயும் (Indoor Plants) சில குறிப்பிட்ட செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களை இயற்கையான முறையில் நாம்மால் விரட்ட முடியும்.
துளசி (Tulsi / Holy Basil):
இது ஒரு இயற்கையான பூச்சிக் கொல்லியாகும். துளசியில் உள்ள யூஜெனால் (Eugenol) போன்ற இயற்கை நறுமண எண்ணெய்கள் கொசுக்களுக்குப் பிடிக்காத கசப்பான வாசனையைத் தருவதால் அவை வீட்டை விட்டு ஓடி விடுகின்றன. அதன் வாசம் கொசுக்களை அண்ட விடாது. இவை கொசுக்களை விரட்டுவதுடன், காற்றில் உள்ள நச்சுக்களையும் நீக்குகிறது.
இதனை ஜன்னல் அல்லது வாசல் பகுதியில் வைக்க கொசுக்கள் உள்ளே வராது. இந்தச் செடிகளுக்கு நல்ல சூரிய வெளிச்சம் மட்டும் கிடைத்தால் போதும்; செழித்து வளரும். காய்ந்த துளசி இலைகளை மாலையில் சாம்பிராணியுடன் சேர்த்து எரிக்க அந்த புகைக்கு கொசுக்கள் உடனே ஓடி விடும்.
கற்பூரவல்லி (Indian Borage/Oregano):
இந்த மூலிகைச் செடியில் உள்ள கார்வாக்ரோல் (Carvacrol) மற்றும் தைமால் (Thymol) போன்ற வேதிப்பொருட்களின் வலுவான நறுமணம் கொசுக்களை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கிறது. சாதாரணமாக எல்லாச் சூழலிலும் வளரக்கூடிய செடி இது. நிறைய இடமோ அல்லது பொருட்செலவோ பிடிக்காத இந்த செடியை வளர்ப்பதும் எளிது.
இந்த செடியின் வாசமும், இதன் இலையின் சாறும் கொசுவை விரட்ட வல்லது. காரத்தன்மை மற்றும் வலுவான நறுமணம் கொண்ட இந்தச் செடி கொசுக்களை விரட்டுவதுடன் மருத்துவ குணமும் நிறைந்தது. இதனை பால்கனி அல்லது வீட்டு முற்றத்தில் வைக்கலாம்.
சாமந்தி (Marigold):
சாமந்திப் பூக்கள் அலங்காரத்துக்கு மட்டுமல்ல கொசுக்களை விரட்டவும் இந்தச் செடி பயன்படும். இதன் இலை மற்றும் பூக்களின் வாசனை கொசுக்களுக்கு பிடிப்பதில்லை. சாமந்தி பைரெத்ரம் (Pyrethrum) என்ற வேதிப்பொருள் கொண்டது. இந்த சாமந்திப்பூ செடியிலிருந்து வரும் தனித்தன்மை கொண்ட வாசனையை பூச்சிகள் விரும்புவதில்லை. இவை அழகான பூக்களைத் தருவதுடன் பூச்சிகள் மற்றும் கொசுக்களை வரவிடாமல் தடுக்கவும் செய்கிறது.
இச்செடியை நிழலில் வைத்தால் வளர்ச்சி தாமதம் அடையும். எனவே இதனை வீட்டின் நுழைவாயிலில் அல்லது பால்கனியில் வெயில் வரும் இடத்தில் வைப்பது நல்லது. அசுவினி உள்ளிட்ட பூச்சிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது என்பதால் இதனை விவசாயத் தோட்டத்திலும் வளர்க்கலாம்.
சிட்ரோனெல்லா புல்:
இயற்கை கொசு விரட்டி என்று அழைக்கப்படும் சிட்ரோனெல்லா (Citronella) புல் என்ற செடியின் இலைகளை கசக்க எலுமிச்சையின் மணம் தூக்கலாகத் தெரியும். இந்த இலைகளை சிறிது எடுத்து கசக்கி வீட்டின் ஜன்னல் பகுதியில் வைக்க கொசுக்களின் தொல்லை இராது. அதேபோல் இந்த புல்லில் இருந்து எடுக்கப்படும் சிட்ரோனெல்லா எண்ணெய் வாசனைப் பொருளாகவும், மூலிகை திரவமாகவும் பயன்படுகிறது. இந்த எண்ணையை மெழுகுவர்த்தி விளக்குகளில் ஊற்றி எரிய விடலாம் அல்லது உடலில் தேய்த்துக் கொண்டு கொசுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
புதினா (Mint):
இதன் காரமான மற்றும் குளிர்ச்சியான வாசனை கொசுக்களை இயற்கையாகவே விரட்ட உதவுகிறது. புதினாவில் உள்ள மெந்தால் (Menthol) கொசுக்களுக்கு பிடிப்பதில்லை. பெயரைக் கேட்டாலே புத்துணர்ச்சி ஏற்படும் இந்த புதினா இலைகளின் கடுமையான வாசனை கொசுக்களுக்கு பிடிப்பதில்லை. இதனை சின்னத் தொட்டியில் நட்டு ஜன்னல் ஓரத்தில் வைத்தாலே போதும் கொசுக்கள் உள்ளே நுழையாது.
அதேபோல் தினமும் நாலைந்து இலைகளை கையால் நன்கு கசக்கி ஜன்னல் ஓரங்களில் வைக்க கொசுக்கள் ஓடிவிடும். புதினாச் செடிகளை சமையலறை, வரவேற்பறை போன்ற இடங்களில் ஜன்னலுக்கு அருகில் வைக்கலாம்.
புதினா எண்ணெயை (Peppermint oil) தேங்காய் எண்ணெயுடன் கலந்து சிறிது சருமத்தில் தடவ கொசுக்கள் கடிக்காது.
நொச்சி செடி:
நொச்சிச் செடிகளை வீட்டின் நுழைவாயிலில் வைப்பது கொசுக்களை விரட்ட பயன்படும். இயற்கை கொசு விரட்டி மூலிகையான இதன் இலைகளில் உள்ள வாலடைல் (Volatile Oil) எனப்படும் அத்தியாவசிய எண்ணெய் கொசுக்கள் மற்றும் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது. நொச்சி இலைகளை சிறிதளவு எடுத்து கையால் கசக்கி படுக்கை அறையின் மூலைகளில் போட்டு வைத்தாலே அதன் வாசனையால் கொசுக்கள் நெருங்காது.
காய்ந்த நொச்சி இலைகளுடன் சிறிது வேப்பிலையும் சேர்த்து தீயில் எரித்து அதன் புகையை வீட்டில் சிறிது காட்ட கொசுக்கள் ஓடி விடும். இவை கொசுக்களை விரட்டுவதுடன், உடல் நலத்திற்கு எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
ஏஜ்ரேடம் (Ageratum):
ஏஜ்ரேடம் எனப்படும் பூச்செடி கொசுக்களை விரட்டும் ஆற்றல் கொண்ட ஒரு சிறந்த இயற்கை தாவரமாகும். நீலம் மற்றும் ஊதா நிறப் பூக்களைக் கொண்ட இந்த செடி வீட்டைச் சுற்றிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படும் பொழுது சிறந்த கொசு விரட்டியாக செயல்படுகிறது.
இந்தச் செடிகள் இயற்கையாகவே 'கூமரின்' என்ற வேதிப்பொருளை சுரக்கின்றன. கடைகளில் விற்கப்படும் பல ரசாயன கொசு விரட்டிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்தச் செடியில் இருந்து வெளிவரும் ஒருவித நறுமணம் கொசுக்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதனால் கொசுக்கள் அந்தப் பகுதிக்கு வராமல் ஓடி விடுகின்றன. இச்செடிகளை வீட்டின் நுழைவாயில், ஜன்னல் ஓரங்கள் அல்லது பால்கனிகளில் வளர்க்கலாம்.
பராமரிப்பு அவசியம்:
கொசு விரட்டிகளான இந்தச் செடிகளை வீட்டில் வளர்ப்பது மட்டும் போதாது. அதனை சரியான முறையில் பராமரிக்கவும் வேண்டும். தொட்டிக்கு கீழே உள்ள தட்டுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேங்கும் நீரில் கொசுக்கள் முட்டை இட்டு கொசு உற்பத்தி அதிகரிக்கும்.
எனவே தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் துளசி, புதினா போன்ற இலைகளை லேசாக கையால் கசக்கி அதனை டைனிங் டேபிளில் பரத்தி வைத்தோ அல்லது ஜன்னல் ஓரங்களில் போட்டு வைக்கவோ நல்ல பலன் கிடைக்கும்.