

ஒவ்வொரு வீட்டிலும் தலையாய பிரச்னையாக உள்ளது கொசுக்கள் எனலாம். முன்பெல்லாம் கோடை காலம் வந்தால் கொசுக்களின் ஆதிக்கம் குறைந்துவிடும். மீண்டும் மழை மற்றும் குளிர் சீசன் வரும்போது கூடவே கொசுக்களும் வந்துவிடும். ஆனால், இப்பல்லாம் வருடம் முழுக்க நம்மை வாட்டி வதைக்கின்றன.
கொசுக் கடியிலிருந்து தப்பிக்கவும் அவற்றை விரட்டவும் கொசு வலை, கிரீம், எலக்ட்ரிக் பேட், எலக்ட்ரிக்கல் டிவைஸ் மூலம் செயல்படும் திரவ வடிவ இரசாயன கொசு விரட்டி போன்ற பல வகையான சாதனங்கள் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன. இருந்தபோதும் கொசுத் தொல்லையிலிருந்து விடுபட முடியாமலும், டெங்கு, மலேரியா போன்ற நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்திலும் நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறோம். கொசுத்தொல்லையிலிருந்து நம்மைக் காப்பதற்கு சில வகைத்தாவரங்களும் நமக்கு உதவி புரிவதாக கூறப்படுகிறது.
இத்தாவரங்களிலிருந்து வெளிப்படும், காரத்தன்மையை உள்ளடக்கிய கடுமையான வாசனையே கொசுக்களை வெகு தூரம் விரட்டியடிக்கச் செய்கின்றன. அவ்வாறான ஏழு வகைத் தாவரங்கள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
சிட்ரோனெல்லா - Citronella: கொசுவை விரட்டியடிப்பதில் முன்னிலையில் நிற்கும் தாவரங்களில் ஒன்று சிட்ரோனெல்லா. கொசுக்களை வெறுப்புணர்வு கொள்ளச் செய்யும் சகிக்க முடியாத வாசனை கொண்டது சிட்ரோனெல்லா. இந்த செடியின் இலைகளைக் கொண்டு, கொசுவை விரட்ட பல வகையான மெழுகு வர்த்திகள் தயாரிக்கப்படுகின்றன. சூரிய ஒளியை மிகவும் விரும்பும் சிட்ரோனெல்லா, வீட்டு பால்கனி மற்றும் தரையின் மூலைகளிலும் நன்கு செழித்து வளரும் குணம் கொண்டது.
லவெண்டர்: பர்பிள் நிறம் கொண்ட இச் செடியின் பூக்கள் அமைதிப் படுத்தும் குணமும் ஆழ்ந்த நறுமணமும் கொண்டது. இதன் மணம் கொசுக்களுக்கு அருவருப்பான வாடையாக உணரப்படுவதால், அவை இச்செடிகளின் அருகில் வரவே அஞ்சி ஓடிவிடுகின்றன. இப்பூக்கள் மனிதர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கவும், ரிலாக்ஸிங் மூட் உருவாக்கவும் உதவிபுரிகின்றன.
துளசி: இந்தியர்களின் பாரம்பரிய வழக்கப்படி துளசி பலரது வீடுகளில் புனிதமான செடியாக போற்றி வளர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் அடர் மணமானது கொசுக்கள் வீட்டிற்குள் நுழைவதை தடுத்து நிறுத்துகிறது. குறைந்த அளவு சூரிய ஒளி மற்றும் அளவான பராமரிப்பிலும் நன்றாக வளரக்கூடியது துளசி.
புதினா: நறுமணமும் புத்துணர்ச்சியும் தருவது புதினா. பல வகை உணவுகளில் சேர்க்கப்பட்டுஅவ்வுணவுக்கு அதிக சுவையும், மணமும் தரக்கூடியது. ஆனால் இதன் அடர்த்தியான மணம் கொசுக்களை விரட்டியடிக்க உதவி புரிந்து மனிதர்களை கொசுக்கடியிலிருந்து காக்கிறது. குறைந்த அளவு சூரிய ஒளி மற்றும் சிறு கவனிப்பிலேயே புதினா படர்ந்து செழித்து வளரும் குணம் கொண்டது.
மேரிகோல்ட்: இப் பூக்களின் கண் கவர் வண்ணமானது தோட்டம் அழகுற காணப்பட உதவுகிறது. இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பைரெத்ரம் (Pyrethrum) என்ற கூட்டுப் பொருள், வணிக ரீதியாக பல வகையான பூச்சி விரட்டி சாதனங்களின் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிறது. மேலும் அது கொசுக்கள் மற்றும் அது போன்ற வேறு பல பூச்சிகளையும் தூர விரட்டியடிக்க உதவி புரிகிறது.
ரோஸ்மேரி: பல வகையான பூச்சிகளுக்குப் பிடிக்காத, மரக் கட்டைகளிலிருந்து எழும் ஒரு மாதிரியான அடர் வாசனை போன்ற மணமுடைய மூலிகைச்செடி ரோஸ்மேரி. போதுமான சூரிய ஒளி கிடைக்கும் பட்சத்தில் தொட்டிகளில் அழகாக செழித்து வளரும். இதன் இளந்தளிர்கள், குச்சி போன்ற சிறு கிளை போன்றவற்றை, சாயந்திர வேளைகளில், வீட்டுக்கு அருகில் நசுக்கிப் போட்டு நெருப்பை வைத்தால் அதிலிருந்து வரும் வாசனை கொசுக்களைத் துரத்திவிடும்.
லெமன் கிராஸ்: இயற்கை முறையில் இதிலிருந்து உற்பத்தியாகும் சிட்ரோனெல்லா (Citronella) என்றொரு வகை எண்ணெய் கொசுக்களை விரட்டியடிக்க உதவிபுரிகிறது. மேலும் அதன் வாசனை சுற்றுப்புறத்தில் பரவியிருக்கும் காற்றை சுத்தப்படுத்தி ஃபிரஷ்ஷாக்க உதவுகிறது. சூரியஒளி கிடைக்கும் இடங்களில், தரையிலும், தொட்டிகளிலும் செழித்து வளரக்கூடியது லெமன் கிராஸ்.