கொசு கடியில் இருந்து தப்பிக்க இயற்கை பாதுகாப்பு கவசம்!

Natural protection shield to avoid mosquito bites
Mosquito bite
Published on

ழை மற்றும் குளிர் காலத்தில் டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களால் மருத்துவ செலவு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் கெடுகிறது. இதற்கு ரசாயனம் நிறைந்த விரட்டிகளையும், கொசுவத்தி சுருள்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை பாதுகாப்பான வழிகளில் கொசுக்களை எளிதில் எப்படி விரட்டலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

கொசுக்களை விரட்டும் ஆற்றல் கொண்ட யூகலிப்டஸ், வேம்பு, தேயிலை மரம், லாவண்டர், புதினா போன்றவற்றின் எண்ணெய்களை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சில துளிகள் விட்டு அத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து சிறிதளவு நீர் கலந்து நம் வீட்டைச் சுற்றி தெளிக்கலாம் அல்லது இவற்றை ஒரு அகல் விளக்கில் விட்டு திரி போட்டு ஏற்றி விட, அந்த எண்ணையின் நறுமணம் வீட்டில் பரவுவதுடன் கொசுக்களின் தொல்லையும் இராது.

இதையும் படியுங்கள்:
லட்சலட்சமாக சம்பாதித்தாலும் ஏழ்மையான நிலை ஏற்படும்... எப்படி? எதனால்?
Natural protection shield to avoid mosquito bites

தேங்காய் எண்ணெயுடன் வேப்பெண்ணை சம அளவில் கலந்து சில துளிகள் லாவண்டர் எண்ணெயும் சேர்த்து விளக்கேற்ற இவை கொசுக்களை சிறந்த அளவில் தடுக்கும். இவை சுற்றுச்சூழலுக்கு நச்சுத்தன்மையற்ற சிறந்த நண்பனாகும்.

கற்பூரம் ஒரு இயற்கையான கொசு விரட்டி ஆகும். வீட்டில் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு கற்பூரத்தை ஏற்றி விட, அதன் நெடியில் கொசுக்கள் மாயமாகிவிடும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு அதில் நான்கு ஐந்து கற்பூர வில்லைகளை போட்டு வைக்க அதன் வலுவான வாசனையால் கொசுக்கள் வராது.

வீட்டுத் தோட்டத்தில் அல்லது பால்கனியில் சாமந்தி, துளசி, லாவண்டர், எலுமிச்சை, ரோஸ்மேரி போன்ற கொசு விரட்டும் செடிகளை வளர்க்கலாம்.

ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி அதில் சில கிராம்புகளை செருகி வைத்து வீட்டின் அறைகளில் வைக்கவும். இதன் மூலம் கொசுக்களின் தொல்லை குறையும்.

பூண்டில் கந்தக சத்து இருப்பதால் கொசுக்களை விரட்டும் தன்மை இதற்கு உண்டு. பூண்டு ஐந்தாறு எடுத்து நசுக்கி கிராம்புகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறியதும் அந்தக் கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் விட்டு வீடு முழுக்கத் தெளிக்க பூண்டின் நெடியால் கொசு தொல்லை இராது.

இதையும் படியுங்கள்:
உங்கள் பிள்ளைகள் விரும்பியதை வாங்க பட்ஜெட்டில் இடமில்லையா? அப்போ இப்படி சமாளியுங்களேன்!
Natural protection shield to avoid mosquito bites

கொசு கடித்த இடத்தில் தடித்து விடும். அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படுவதால் தூக்கம் கெட்டுவிடும். கொசு கடிக்கு பேக்கிங் சோடாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து கெட்டியான பேஸ்ட்டை கொசு கடித்த இடத்தில் தடவி விட அரிப்பு வீக்கம் உடனடியாக குறையும். கொசு கடித்த இடத்தில் ஐஸ் பேக்கை வைக்க எரிச்சல் போகும்.

பற்பசை வாய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும அரிப்புகளையும் சமாளிக்க உதவும். சிறிது பற்பசையை எடுத்து கொசு கடித்த இடத்தில் தேய்த்து விட அரிப்பு குணமாகும். வெங்காயத்தை நறுக்கி ஒரு துண்டை எடுத்து கொசு கடித்த இடத்தில் தேய்த்து விட வலி, எரிச்சல், அரிப்பு போகும். அதேபோல், வெள்ளரிக்காயை நறுக்கி ஒரு துண்டு எடுத்து கொசு கடித்த இடத்தில் தேய்த்து விட அரிப்பு, எரிச்சல் போய் அந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும். துளசி இலைகள் நான்கைந்து எடுத்து கையால் கசக்கி கொசு கடித்த இடத்தில் தேய்த்து விடலாம். ஆப்பிள் சீடர் வினிகரை கொசு கடித்த இடத்தில் தடவி விட இதன் அமிலத்தன்மை காரணமாக வீக்கத்தை குறைக்கும். அத்துடன் எரிச்சலும், அரிப்பும் குணமாகும்.

கே.எஸ்.கிருஷ்ணவேணி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com