
ஒருவரின் முக அழகை அதிகரித்துக் காட்டுவது அவரது சிரிப்புதான். பற்கள் முத்து போல் பளிச்சென்று இருந்தால் தனிக் கவர்ச்சிதான். பற்கள் கறையின்றி இருந்தால்தான் நமக்கும் தன்னம்பிக்கை, பார்ப்பவருக்கும் நம்மைப் பிடிக்கும். இப்படிப் பற்கள் கறையின்றி வெண்மையாக இருக்க வீட்டில் உள்ள பொருட்கள் சிலவற்றைக்கொண்டே அழகாக்கிக் கொள்ளலாம். அது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
பற்கள் வெண்மையாக இல்லாமல், மஞ்சளாக இருப்பதற்கு வயது, பரம்பரை காரணங்கள், சிகரெட், வெற்றிலை, பான்பராக் போடுவது, சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவற்றை காரணமாகச் சொல்லலாம். பற்களை சரியாகப் பராமரிப்பதன் மூலம் பற்களின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் வெண்மையாக, பளிச்சென்றும் இருக்கும்.
பற்களின் கறை போக கொய்யா இலைகளை வாயிலிட்டு மென்ற பின் அவற்றை துப்பி விட வேண்டும். இவ்வாறு இதைத் தொடர்ந்து செய்து வர பற்களின் கறை நீக்கி பற்கள் பளிச்சிடும்.
கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து பத்து நிமிடம் ஊற விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வர, பல் வெள்ளையாவதோடு, ஈறுகளும் வலிமை பெறும்.
இரண்டு டீஸ்பூன் வெள்ளை வினிகரில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் அரை கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்றாக வாயைக் கொப்பளிக்க, பற்களில் உள்ள மஞ்சள் கறை போகும். இருமுறை இதனை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்குவதில் பெரிதும் உதவியாக உள்ளது. இந்த பேக்கிங் சோடாவை 1 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு குளிர்ந்த நீரில் கலந்து அதனால் தினமும் கொப்பளிக்க பற்களில் உள்ள கறை அகலும்.
எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் உப்பு சேர்த்து பற்களில் தேய்த்து பிறகு குளிர்ந்த நீரில் வாய் கொப்பளிக்க, பற்களில் உள்ள கறைகள் நீங்கி பற்கள் பளிச்சிடும்.
உப்பைக் கொண்டு பற்களைத் தேய்த்து வர கறை போகும். உப்பை அதிகமாக உபயோகிக்காமல் அளவோடு உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் உப்பு ஈறுகளையும், எனாமலையும் பாதித்துவிடும்.
இரவில் படுக்கும் முன்பு ஆரஞ்சு தோலால் பற்களை நன்கு தேய்த்து கழுவி விட, கறை போகும். அதோடு, ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளில், வாயில் உள்ள பாக்டீரியாக்கள், கிருமிகளை அழித்து பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் மாற்றும்.
ஒரு ஆப்பிளை தினமும் கடித்து சாப்பிட வர உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதுடன் பற்களில் உள்ள மஞ்சள் கறையை அகற்றவும் உதவும்.
சார்க்கோல் பேஸ்ட், நறுமணம் மிக்க பேஸ்ட் என மாற்றி மாற்றி உபயோகித்தால் வாய் புண்ணாவதுடன் ஈறுகளையும் பாதித்து விடும். சிறு பிள்ளைகள் இனிப்பு, சாக்லேட் என எது சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும் என சொல்லி வளர்த்து வர பற்கள் இயற்கையான வெண்மை நிறத்தில் பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.