மரப்பாச்சி பொம்மைகள்: கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மருத்துவ குணங்கள்!

Marapachi Dolls
Navarathiri special articles
Published on

ரப்பாச்சி பொம்மைகள் என்பது,   பண்டைய காலம் தொட்டே, தென்னிந்தியாவில் நவராத்திரி பண்டிகையின்போது கொலுவில் வைக்கப்படும் மரப்பொம்மைகள் ஆகும். மரப்பாச்சி பொம்மைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.

மரப்பாச்சி பொம்மைகள்,  பொதுவாக ஆண் மற்றும் பெண் நிர்வாண வடிவில் ஜோடிகளாக செய்யப்பட்ட பொம்மைகள். இந்த இணை பொம்மைகள் நவராத்திரி கொலுவின் போது  அலங்கரிக்கப்பட்டு கீழ்ப்படியின் நடுவே முதலில் வைத்தபின், மற்றைய பொம்மைகளை வைப்பது வழக்கம். இறைவன்-இறைவியாக மரப்பாச்சி பொம்மைகளை நினைத்து வழிபடுவார்கள். 

விஜயதசமியன்று, கீழ்ப்படியில் வைத்திருக்கும் இரண்டு மரப்பாச்சி பொம்மைகளையும் மெதுவாக படுத்தாற் போல வைத்துவிட்டால், மற்றைய பொம்மைகளை ஒன்றிரண்டு நாட்கள் சென்று எடுத்து வைத்துக்கொள்ளலாமென்று கூறுவதுண்டு.

மரப்பாச்சி பொம்மைகளின் பலவிதமான முக்கியத்துவங்கள்:-

குழந்தைகளுக்கு மரப்பாச்சி:

மரப்பாச்சி பொம்மைகள், செஞ்சந்தன மரம், கருங்காலி, தேக்கு,  செம்மரம், ஊசியிலை மரம்    போன்றவைகளால் செய்யப்படும் பாரம்பரிய பொம்மைகள் ஆதலால், குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கப்படும்.  செஞ்சந்தன மரத்தால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் மருத்துவ தன்மையுடன் விளங்குவதாக கருதப் படுகின்றன. இத்தகைய மரப்பாச்சி பொம்மைகளை, குழந்தைகள் வாயில் வைத்து பல் முளைக்கையில் கடிக்கையில்,  சப்புகையில்,  அதன் மருத்துவ குணங்கள் குழந்தையின் உடலுக்குள் சென்று,  நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதாக நம்பப்படுகிறது.

தவிர, சளி, தும்மல் ஏற்படுகையில், மரப்பாச்சிப் பொம்மையை, சந்தனக் கல்லில் கொஞ்சமாக தேய்த்து, தாய்ப்பாலில் குழைத்து, லேசாக தீப ஒளியில் சூடு செய்து, குழந்தையின் நெற்றியில் பற்று போட, குழந்தையின் சளி, தும்மல் நீங்கும்.

பல்வேறு மரப்பாச்சி பொம்மைகள், குடும்ப உறவு முறைகளை, குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
🤯 என்னது! வீட்டை இப்படி சுத்தம் செஞ்சா போதும்... மாமியார் கூட உங்ககிட்ட டிப்ஸ் கேட்பாங்க!
Marapachi Dolls

திருமணங்கள் நடக்க மரப்பாச்சி:

அன்றைய காலகட்டத்தில், வீடுகளில் திருமணமாகாத மகள் மற்றும் மகன் இருந்தால், இரண்டு மரப்பாச்சி பொம்மைகளை அலங்கரித்து, வீட்டிற்குள்ளேயே திருமணம் நடத்தி, தெரிந்தவர்களை அழைத்து விருந்தோம்பல் செய்யும் வழக்கமிருந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் திருமணமாகுமென்ற நம்பிக்கையிருந்தது. அநேகருக்கு திருமணங்களும் நடந்துள்ளன.

திருமண விழா வளையாடல் பொருட்களில் மரப்பாச்சி:

திருமண விழாவில்,  வளையாடல் பொருட்களைத் திருமணத்திற்கு முதல் நாளன்று, பெண் வீட்டார் மணமுடிக்கப் போகிற பையனுக்கும், பிள்ளை வீட்டார் மணமுடிக்கப் போகும் பெண்ணுக்கும் கொடுப்பது வழக்கம். அலங்காரமான தட்டு ஒன்றில், பவுடர், சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்ற  பலவிதமான பொருட்களுடன், இரண்டு மரப்பாச்சி பொம்மைகளும் குறிப்பாக வைக்கப்பட்டிருக்கும்.

இதன் காரணம்:

அந்தக் காலத்தில், புகைப்படமெடுக்கும் வழக்கம் கிடையாது. அப்படியே யாராவது எடுக்கலாமென்றால் கூறினால் கூட மறுத்து விடுவார்கள். புகைப்படமெடுத்தால்,  குடும்பத்தில் அசம்பாவிதம் ஏதாவது நடந்துவிடும் என்கிற பயம் மற்றும் ஒருவித மூட நம்பிக்கை.  

திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்லும் பெண், வளையாடலில் வைத்த இரு மரப்பாச்சி பொம்மைகளையும் தன்னுடன் எடுத்துச் செல்வாள். மரப்பாச்சி பொம்மைகளைத் தனது பெற்றோர்கள் போல கருதி, தினமும் வணங்குவாள். இதன்  மூலம் ஒரு வகை பாதுகாப்பை உணர்வாள். மேலும், புகுந்த வீட்டில் கொலு வைக்கையில், இந்த மரப்பாச்சி பொம்மைகளை தாய் வீட்டு சீதனமாக எண்ணி, அலங்கரித்து வைப்பாள்.

இதையும் படியுங்கள்:
சமையலில் உங்களையும் சிறந்த ஃசெப்பாக மாற்றிக் காட்டும் சில ஆலோசனைகள்!
Marapachi Dolls

உபரி தகவல்கள்:

திருப்பதியில் வைக்கப்பட்டிருக்கும் மரப்பாச்சி பொம்மைகள்,  ஏழுமலையானையும், பத்மாவதித் தாயாரையும்  பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறப்படுகிறது.  

கொண்டப்பள்ளியில், மரப்பாச்சி பொம்மைகள்,  ராஜா ராணி பொம்மையாக  செய்யப்பட்டு,  தவறாமல் கொலுவில் வைக்கப்படுகின்றன. 

மரப்பாச்சி பொம்மைகள்,  ஒரு ஜோடியாக காணப்படும் காரணம், ஆண்-பெண் உறவையும், தம்பதியரின் ஒற்றுமையையும், குடும்ப வாழ்க்கையைக் குறிக்கும் சின்னமாகவும் கருதப்படுகிறது.

மரப்பாச்சி பொம்மைகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் பொம்மைகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com