
சமையல் என்பது ஒரு கலை. நாம் எவ்வளவு கவனமாக சமைத்தாலும் சில நேரங்களில் உப்பு அதிகமாகவோ, காரம் அதிகமாகவோ சுவை குறைந்தோ இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் ஊறுகாய் முதல் இனிப்பு வகைகள் வரை, சமையல் ரகசியங்களை எளிமையாக்கும் சில குறிப்புகள் மற்றும் சமையல் நுட்பங்களை மேம்படுத்துவது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* சமையலுக்குப் பயன்படுத்திய கரண்டிகள், ஸ்பூன்கள் போன்றவற்றை அப்படியே பரிமாறாமல், கழுவிப் பயன்படுத்தினால் அது பார்ப்பதற்கும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்.
* கேசரி அல்லது அல்வா போன்றவற்றை பரிமாறும்போது, குழி கரண்டியின் உள்பக்கத்தில் சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவி எடுத்து வைத்தால், அது அழகான கோள வடிவில் வரும்.
* ஊறுகாயை நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க, அதில் உள்ள உப்புடன் வினைபுரியாமல் இருக்க மரக்கரண்டி அல்லது பீங்கான் கரண்டிகளை பயன்படுத்தலாம்.
* சிவப்பு மிளகாயை தாளிக்கும் முன்பு இரண்டாக வெட்டி ஒரு டப்பாவில் சேமித்து வைத்தால், தேவைப்படும்போது உடனடியாகப் பயன்படுத்தலாம்.
* வீட்டில் முளைகட்டிய பயறு வகைகளை சுண்டலாகவோ அல்லது புட்டு போன்ற உணவுகளாகவோ சமைத்து சாப்பிடும்போது, சுவையும் சத்தும் அதிகரிக்கும்.
* சமைக்கும்போதே நட்ஸ், வறுத்த கடலை மற்றும் முளைகட்டிய பயறு வகைகளைச் சாப்பிடுவது அசிடிட்டி போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்.
* விலை உயர்ந்த குங்குமப்பூவைப் பயன்படுத்த, சர்க்கரை பாகில் குங்குமப்பூ சேர்த்து சிரப் தயாரித்து வைத்துக் கொண்டால், அதன் சுவையும், நிறமும் மாறாமல் பயன்படுத்தலாம்.
* பருப்பு பாயசம் செய்ய, பருப்பை வறுத்து ரவையாக்கி, இரண்டாம் பாலில் வேக வைத்து, மில்க் மெய்ட், வறுத்த நட்ஸ், ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள் சேர்த்து இறக்கினால், சுவையான, சத்தான பாயசம் கிடைக்கும்.
* இனிப்பு பலகாரங்களுக்கு சுவை கூட்ட சுக்கு, ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை பொடி செய்து சேர்த்துப் பார்க்கலாம்.
* அடுத்த பண்டிகை சீசனுக்காக இனிப்புகள் செய்யும்போது முன்கூட்டியே ஒரு கம்பி பதத்தில் சர்க்கரை அல்லது வெல்லப்பாகு தயாரித்து ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்தால், உடனடியாக இனிப்பு செய்ய சுலபமாக இருக்கும்.
* சர்க்கரையை கேரமல் செய்துவைத்துக்கொண்டால், பாயசம் அல்லது புட்டிங் போன்ற இனிப்புகளுக்கு அழகான நிறத்தையும், தனித்துவமான சுவையையும் கொடுக்கும்.
* உலர்வான உணவுகளில் காரம் அதிகமானால், சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
* கிரேவி போன்ற உணவில் காரம் அதிகமானால், தண்ணீர் மற்றும் புளி சேர்த்து சமன் செய்யலாம். உப்பு அதிகமானால், அதில் ஒரு உருளைக்கிழங்கை சேர்க்கலாம்.
* சுக்கா போன்ற உணவுகளில் உப்பு அதிகமானால், எலுமிச்சை அல்லது தயிர் சேர்க்கலாம்.
* அரிசி வேகவைத்த தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், சமைத்த அரிசி வெள்ளை நிறமாக இருக்கும்.
* தயிர் சாதத்தின் சுவையை அதிகரிக்க, வெண்ணெய், கிரீம் மற்றும் பெருங்காயம் சேர்க்கலாம்.
* காரக்குழம்பு அல்லது வத்தக்குழம்பில் புளிப்பு அதிகமானால், சிறிதளவு வெந்நீர், காரம் மற்றும் வெல்லம் சேர்க்க வேண்டும்.
* இட்லிகள் மென்மையாகவும், வெண்மையாகவும் இருக்க வேண்டுமெனில், அதற்கான உளுந்தை ஐந்து முதல் ஆறு முறை நன்கு கழுவ வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உளுந்தில் உள்ள அழுக்கு மற்றும் மாசுக்கள் நீங்கி, மாவு நல்ல நிறத்துடன் வரும்.
மேற்கூறிய குறிப்புகளை பயன்படுத்தி வீட்டில் சாப்பிடும் அனைவரையும் கைப்பக்குவத்தில் அசத்துங்கள்.