வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க இந்த 6 தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்!

Mistakes you should avoid to make life meaningful
Two women talking
Published on

வாழ்க்கையில் ஒரு மனிதன் செய்யக்கூடிய செயல்களை விட, செய்யக்கூடாத செயல்கள்தான் இந்த உலகில் நிறைந்து காணப்படுகின்றன. அந்த செயல்களை உருவாக்கியவர்களும் நாம்தான்; அவற்றால் திசை மாறி உருக்குலைந்து போவதும் நாம்தான். எனவே, செய்யக்கூடாத விஷயங்களை தவிர்த்து, அமைதியான, சந்தோஷமான வாழ்வை வாழ என்னென்ன வழி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

1. ஆடம்பரங்கள்: நம்முடைய நிலைமையை தாண்டி, ஆடைகளையோ அணிகலன்களையோ அல்லது வாகனங்களை வாங்குவதோ அல்லது அதற்காக செலவழிப்பதோ கூடாது. சக்திக்கு மீறி வாங்குவதும், செலவழிப்பதும் நம்மை கடனாளி ஆக்கிவிடும். ஊதாரித்தனமாக செலவு செய்யக் கூடாது. அதுவும் கடன் வாங்கி ஆடம்பரச் செலவு செய்வது என்பது மிகவும் தவறு. தகுதிக்கும் வருமானத்திற்கும் மீறிய வாழ்க்கை கடன் சுமையை ஏற்படுத்தி விடும்.

2. பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது: குழந்தைகள் எதிரில் பணம்தான் பெரியது என்று ஒருபோதும் பேசக் கூடாது. பணம் இல்லாதவர்களைப் பற்றி தரக்குறைவாக பேசுவதும் கூடாது. குழந்தைகள் மனதில் பணம்தான் எல்லாம் என்ற எண்ணம் எழக் கூடாது. பொருளாதார வெற்றியை மட்டுமே வாழ்வின் வெற்றியின் அடையாளமாகக் கருதக் கூடாது.

இதையும் படியுங்கள்:
மோசமான பெற்றோர்கள்: ப்ளீஸ் உங்க குழந்தைகள் கிட்ட இப்படி எல்லாம் கேட்காதீங்க! 
Mistakes you should avoid to make life meaningful

3. மரியாதைக் குறைவாக நடத்துவது: முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும், வீட்டில் உள்ள பெரியவர்களாக இருந்தாலும் அவர்களை மரியாதை குறைவாக பேசவோ, நடத்தவோ கூடாது. குறிப்பாக, குழந்தைகள் எதிரில். புறக்கணிப்பது, நிராகரிப்பது, அவமதிப்பது, முரட்டுத்தனமாக நடந்து கொள்வது அல்லது ஒருவரின் கருத்துக்களையும், உணர்வுகளையும் மதிக்காமல் செயல்படுவது போன்ற நடத்தைகள் உறவுகளை பாதிக்கும். நம்பிக்கைக் குறைவதற்கும், மனக்கசப்பு உருவாவதற்கும், பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துவதற்கும் வழி வகுக்கும்.

4. முதுகுக்குப் பின் பேசுவது: ஒருவரை நேரில் பார்த்தால் அவர் முகத்துக்கு எதிரே ஒரு மாதிரியும், அவர்கள் இல்லாதபோது அவர்களைப் பற்றி வேறு விதமாகவும் பேசக் கூடாது. முகத்துக்கு எதிரே சிரித்து பேசுவதும், அவர்கள் இல்லாத நிலையில் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுவதும் மிகவும் தீய செயலாகும். இது அவர்களின் மனதில் வெறுப்பையும், பிளவையும் ஏற்படுத்தும். ஒருவருடைய நல்லப் பெயரை கெடுக்கும் எண்ணத்துடன் அல்லது அவர்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் செயலாகும். பொறாமை அல்லது அதிகார உணர்வைத் தேடுவது போன்ற பல காரணங்களுக்காக சிலர் இவ்வாறு பிறரைப் பற்றி பின்னால் பேசும் வழக்கம் கொண்டுள்ளனர். இது நேர்மையற்ற, நச்சுத்தன்மை வாய்ந்த பழக்கமாகும்.

இதையும் படியுங்கள்:
நாய்கள்: வீட்டின் நண்பர்களா அல்லது தெருவின் அச்சுறுத்தலா?
Mistakes you should avoid to make life meaningful

5. பேச்சில் கவனம்: அளவாகவும், பிறருக்கு நன்மை பயக்கும் வார்த்தைகளையுமே பேச வேண்டும். மற்றவர்கள் மனம் புண்படாதவாறு நிதானத்துடன் பேச வேண்டும். நேர்மையாக வாழ்பவர்களை, 'முட்டாள், பிழைக்கத் தெரியாதவர்' என்று குழந்தைகள் எதிரில் சொல்லவே கூடாது. நம் பேச்சு இளம் பிஞ்சுகளின் மனதில் ஆழப் பதிந்துவிடும். பேச்சில் கண்ணியம் மிகவும் அவசியம். கொட்டி விடலாம், ஆனால் அள்ள முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

6. அவசர முடிவு கூடாது: எக்காரணம் கொண்டும் அவசரத்தில் ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. அது தவறாகத்தான் முடியும். குறிப்பாக, கோபத்தில் இருக்கும் பொழுது எடுக்கும் முடிவுகள் 100 சதவிகிதம் தவறாகத்தான் முடியும். எனவே, விஷயங்களை நின்று நிதானமாக ஆராய்ந்து அவசரப்படாமல் முடிவுகளை எடுக்க வேண்டும். அவசர முடிவுகள் தேவையற்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, எதிலும் பொறுமை அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com