
விலங்கினங்களிலேயே மிகுந்த நன்றியுடையனவாக உள்ள நாய்களைப் பல காரணங்கள் கருதி மனிதர்கள் வளர்க்க ஆரம்பித்தார்கள். அவை வீட்டு விலங்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டதால், வேட்டைக்காரர்கள், விவசாயிகள், பெருந்தனவந்தர்கள், குடிசைவாசிகள் என்று அனைவருமே அவற்றைத் தங்கள் இருப்பிடங்களில் அவரவர் தகுதிக்கேற்ற உணவையளித்து வைத்துக் கொண்டார்கள். பணக்காரர்கள் வீட்டு டாக்ஸ் (நாய் என்று சொன்னாலே இழுக்கென்று எண்ணுகிறார்கள்) காரிலும், ஏன்? விமானங்களிலும் கூடப் பயணம் செய்யும் பாக்கியம் பெற்றுள்ளன.
அவற்றுக்கு வேளா வேளைக்கு நல்ல விதவிதமான உணவு, மருத்துவ வசதி, அவற்றை வாக்கிங் கூட்டிப்போக ஆட்கள், அவற்றுக்கென்று அறைகள், படுக்க மெத்தைகள் என்று அவற்றின் வாழ்க்கை படாடோபந்தான்! இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், இப்படி நாய்களை வளர்ப்பவர்கள்தான், தங்களுக்குச் சம்பந்தமேயில்லாத தெரு நாய்களுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு, நீதிமன்றங்களின் படியேறுகிறார்கள். ஏனெனில், அவர்கள் யாரும் நாய்களின் இம்சைகளுக்கு ஆளாவதில்லை. இது ஒரு பக்கம்! இதன் மறுபக்கத்துக்கும் போகலாம்!
பள்ளிக்குச் செல்லும் பாலகர்களையும், தெருவில் நடந்து செல்வோரையும் தெரு நாய்கள் கடித்துக் குதறி எடுக்கின்றன. ஓட ஓட விரட்டி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கின்றன. தற்போது இணைய தளங்களில் வரும் வீடியோக்கள் நம்மைப் பதற வைக்கின்றன. டூ வீலரில் செல்வோரைப் பின்னாலேயே துரத்திச் சென்று கடிக்கின்றன; விபத்துக்கு உள்ளாக்குகின்றன. அவற்றின் அட்டகாசம் அளவுக்கு மீறிப் போனதால்தான் உச்ச நீதிமன்றமே இதில் தலையிட வேண்டியதாகப் போயிற்று.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மனிதர்களாகிய நாம்தான்! கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘வெந்ததைத் தின்னு விதி வந்தன்னைக்கிச் சாவது’ என்று. அதைப் போலவே நம்மில் பெரும்பாலோர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு முக்கியக் காரணம், குடும்பத்துக்காக ஓடுவதிலேயே பலரின் நேரம் கழிந்து விடுகிறது. ஏழைகளும் நடுத்தரக் குடும்பத்தாரும் வீட்டில் உள்ள மிச்சம் மீதியை நாய்களுக்கு இட்டு, அவை வளர வழி வகுத்தார்கள். தற்கால வாழ்க்கை முறை மாறி, எல்லோரும் சுறுசுறுப்பாகி விட்டார்கள். டவுனிலுள்ளவர்களில் பெரும்பாலான கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்று விடுகிறார்கள். கிராமங்களிலும் நூறு நாள் வேலைக்குச் சென்று விடுகிறார்கள். நாய்கள் அனாதைகளாக்கப்பட்டு, உணவும், தக்க பாதுகாப்பும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டு, கோபம் கொள்ள ஆரம்பித்து விட்டன.
கால்நடை பராமரிப்புத் துறையானது கோழிகள், ஆடுகள், மாடுகள், மீன் வளம் போன்றவற்றைக் கவனித்து வந்தாலும், நாய்கள் அவற்றின் பர்வியூவில் கொண்டு வரப்பட்டதாகத் தெரியவில்லை. இனி நாய்களையும் அத்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரலாம். அவற்றின் அபரிமித வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், அவை முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும், எப்பருவ காலத்தில் அவை வெகுண்டு மனிதர்களைத் தாக்குகின்றன என்பதைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளையும் அத்துறை மேற்கொள்ளலாம். விலங்கு நல வாரியம், விலங்குகளின் எண்ணிக்கை விரைவாக வளரும் பகுதிகளைக் கண்டறிந்து, அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான உபாயங்களைக் கண்டறிந்து மேற்கொள்ள வேண்டும்.
நாய்களின் இன விருத்திக் கட்டுப்பாட்டுச் சிகிச்சையில் தவறுகள் நேர்ந்ததாலேயே அவற்றின் எண்ணிக்கை பெருகி விட்டது என்ற கூற்று நிலவுகிறது. அது உண்மையாயின், இனி அதுபோல நேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். அதிக எண்ணிக்கையான நாய்கள் உள்ள மாநிலங்களில் அவற்றைப் பிடித்து, அவற்றின் எண்ணிக்கை குறைவாக உள்ள, அவற்றை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் மாநிலங்களுக்கோ, மற்ற நாடுகளுக்கோ கூட அனுப்பலாம். பீடா (PETA-People for the Ethical Treatment of Animals) போன்ற அமைப்புகள், நாட்டில் செயல்படும் கோ சாலைகள் போன்று ‘நாய்கள் நலச்சாலைகள்’ அமைத்து அவற்றைக் காப்பாற்றலாம்!
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாக் போகும்போது மட்டும், பலரும் கன்றுக்குட்டி போன்ற பெரும் நாய்களுடன் வருவதைப் பார்க்கலாம். மற்ற நேரங்களில் அவற்றை சாலையிலோ, வெளியிலோ பார்க்கவே முடியாது. அவை குரைத்து சப்தம் ஏற்படுத்துவதுமில்லை. அங்கெல்லாம் நாய்களை பழக்க, போதுமான பயிற்சிக் கூடங்கள் உண்டு. சிலர் நாய்களை ரயிலில் அழைத்து வருவார்கள். ரயிலில் ஏறியதும் அவை அவ்வளவு அமைதியாக இருக்கும். முறையான பயிற்சியும், போதுமான உணவுமே அதற்குக் காரணம். அவை எங்கு மலம் கழித்தாலும் அதை லாவகமாக கவரில் எடுத்து, அவற்றிற்கான அருகிலுள்ள தொட்டிகளில் போட்டு விடுவார்கள். நமது நாட்டிலும் இம்முறையைக் கட்டாயமாக்க வேண்டும். ஏனெனில் நாய்களின் கழிவு மூலம், நிலத்தடி நீர் கெடுவதாகவும், காற்று மாசு படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்றைய நிலையில், மக்கள் தெரு நாய்களுக்குப் பயந்து வாழ்ந்து வருகிறார்கள். நாளைக்கு, காட்டெருமைகளுக்கும், யானைகளுக்கும், புலி, சிங்கங்களுக்கும் பயந்து வாழ வேண்டிய சூழல் வரலாம். இவ்வளவு விஞ்ஞான முன்னேற்றங்கள் வந்தும் இன்னும் தெரு நாய்களுடன் போராடும் அவல நிலையிலேயே நாம் உள்ளோம் என்பது எவ்வளவு வேதனையானது! அரசு இதில் அதிக கவனம் செலுத்தி, மனிதர்களும், விலங்குகளும் முறையாகக் காப்பாற்றப்பட வழிகளையேற்படுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் பிறந்த எவருக்கும், இயற்கையான சாவு வரும் வரை அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையல்லவா?