
நம் வாழ்வில் மிக முக்கியமான விஷயங்களுள் ஒன்று உணவு. “ஒரு சாண் வயிறு இல்லாட்டா உலகத்தில் ஏது கலாட்டா” என்ற ஒரு பழமொழி உண்டு. உணவை உற்பத்தி செய்வது என்பது மிகவும் கடினமான செயல். நிலத்தில் விதைப்பது முதல் அதைப் பாதுகாத்து அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு செல்வதுவரை வியர்வை சிந்தும் பலருடைய கடினமான உழைப்பு அடங்கியுள்ளது.
தற்காலத்தில் நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ உணவை முழுவதுமாக சாப்பிடாமல் அலட்சியமாக வீணடித்துக் கொண்டிருக்கிறோம். திருமணம் போன்ற விசேஷங்களுக்குச் சென்றால் அங்கே வகைவகையான உணவுகள் பறிமாறப்படுகின்றன. ஆனால் அதை நாம் முழுவதுமாக உண்ணுவதே இல்லை.
பாதி உணவை இலையிலேயே வைத்து மூடிவிட்டு வருகிறோம். இப்படி உண்ணாத உணவானது குப்பைக்குச் செல்லுகிறது. உணவகங்களில் சாப்பிடும் பலர் காசு கொடுத்து வாங்கும் உணவைக் கூட மீதம் வைத்துவிட்டு எழுந்திருப்பதையும் காணமுடிகிறது.
ஒவ்வொரு பிடிசோறும் மிக முக்கியமானது என்பதை நாம் உணரவேண்டும். இந்த உலகில் பல லட்சக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பசியால் வாடுகிறார்கள். ஒருபக்கம் உணவானது வீணடிக்கப் படுகிறது. மறுபக்கம் உணவின்றி மனிதர்கள் வாடும் நிலைமை. இதை நாம் எப்படி சரி செய்வது? நிச்சயம் இதை நாம் சரி செய்யத்தான் வேண்டும்.
திருமணம் போன்ற விழாக்களில் விருந்து என்ற பெயரில் தற்காலத்தில் விதவிதமான உணவை பரிமாறுவது பெருமையாகக் கருதப்படுகிறது. ஒரே நேரத்தில் இருபது அல்லது முப்பது வெவ்வேறு வகையான உணவுகளை நம்மால் ரசித்துச் சாப்பிட முடியாது. சிக்கிரத்தில் வயிறு நிறைந்துவிடும். மேலும் திகட்டியும்விடும். அதனாலேயே நாம் சாப்பிட ஆசைப்பட்டாலும் சாப்பிட முடியாமல் போய்விடுகிறது.
இலையில் அப்படியே வைத்துவிட்டு எழுந்து விடுகிறோம். பலருக்கு சர்க்கரை நோய் உள்ளது. விருந்தில் மூன்ற அல்லது நான்கு இனிப்புகள் வரை பரிமாறப்படுகின்றன. பலர் அவற்றை அப்படியே இலைகளில் வைத்து மடித்துவிட்டு எழுந்து விடுகிறார்கள்.
இலை போட்டு பரிமாறுவதைவிட பஃபே எனப்படும் நாமே நமக்கு வேண்டியதை எடுத்து வைத்து சாப்பிடுவது இந்த விஷயத்தில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. நமக்கு விருப்பமானதை நாமே எடுத்துக்கொள்ளும்போது நமக்கு விருப்பமில்லாதது தவிர்க்கப்படுவதால் உணவு வீணாவதும் தடுக்கப்படுகிறது.
உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று விரும்புபவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு மட்டும் இரண்டு வரிசைகளில் அமர வைத்து உணவைப் பரிமாறலாம். இதனால் கணிசமான உணவு வீணாவது தவிர்க்கப்படும்.
வீட்டில் பிறந்தநாள், நிச்சயதார்த்தம், திருமணம் முதலான விசேஷங்கள் நடைபெற இருக்கும்போது அந்த மகிழ்ச்சியை நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் நமது வீட்டிற்கு அருகில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் மற்றும் ஏழைகள் வாழும் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு ஒரு வேளை உணவை ஸ்பான்சர் செய்யலாம். இதனால் அவர்களின் மனதும் மகிழ்ச்சியில் நிறையும். நமக்கும் ஒரு திருப்தி உண்டாகும்.
விழாக்களில் மீதமாகும் உணவை வீணாக்காமல் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் திருமண மண்டபங்களில் ஆதரவற்றோர் இல்லங்களின் நிர்வாகிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை ஒரு போர்டில் எழுதி வைக்கலாம். விழாவை நடத்துபவர்கள் சுலபமாக நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு தெரிவித்தால் அவர்கள் வந்து உணவை பெற்றுக் கொண்டு செல்ல ஏதுவாக அமையும்.
நமது பிள்ளைகளை விடுமுறை தினங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்கு அழைத்துச் சென்று பயிர்கள் எப்படி விளைவிக்கப்படுகின்றன என்பதையும் அதன் பின்னால் எவ்வளவு பெரிய உழைப்பு இருக்கிறது என்றும் நேரில் காண்பித்து விளக்கிப் புரிய வைக்கவேண்டும். நாம் அன்றாடம் ரசித்து ருசித்து சாப்பிடும் உணவு தானியங்களை விளைவிப்பது மிகவும் கடினமாக செயல் என்பதை அவர்கள் புரிந்துகொண்டால் உணவை வீணாக்கவே மாட்டார்கள்.