

Termite Control: நமது வீடுகளில் உள்ள மரத்தாலான கதவுகள், விலை உயர்ந்த ஃபர்னிச்சர்களை சைலன்டாக நாசமாக்குவதில் கரையான்கள் கில்லாடிகள். இவற்றை ஒழிக்க நாம் பயன்படுத்தும் வழக்கமான பூச்சிக்கொல்லி மருந்துகள் வீடுகளில் உள்ள மனிதர்களுக்கும், குழந்தைகளுக்கும், ஏன் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இதற்காக வீட்டை விட்டே சில நாட்கள் வெளியேற வேண்டிய சூழல் கூட பலருக்கு ஏற்படும். ஆனால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு அருமையான தீர்வை கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களுக்கு ஒரு சிறு பாதிப்பு கூட தராமல், ஒட்டுமொத்த கரையான் கூட்டத்தையும் கொத்து கொத்தாக அழிக்கும் அந்த புதிய ஆச்சரியமான கெமிக்கல் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கரையான்களை அழிக்கும் டெக்னிக்!
இந்த புதிய கண்டுபிடிப்பின் பெயர் பிஸ்ட்ரிஃப்ளூரான் (Bistrifluron). இது கரையான்களை வழக்கமான முறையில் விஷம் வைத்து கொல்வதில்லை, அவற்றின் உடல் வளர்ச்சியையே தடுத்து நிறுத்தி தந்திரமாகக் கொல்கிறது. மனிதர்களுக்கு உடலுக்குள் எலும்புகள் இருப்பதைப்போல, கரையான்களுக்கு உடலுக்கு வெளியே கைட்டின் (Chitin) என்ற பொருளால் ஆன ஒரு கடினமான கவசம் இருக்கும்.
கரையான்கள் வளர வளர தங்களது பழைய கவசத்தை உதிர்த்துவிட்டு புதிய கவசத்தை உருவாக்கிக் கொள்ளும். இது அவற்றின் வாழ்நாளில் சுமார் ஏழு முறை நடக்கும். இந்த புதிய கெமிக்கலானது அந்த கரையான்களை புதிய கவசத்தை உருவாக்க விடாமல் தடுத்து நிறுத்திவிடுகிறது. பாதுகாப்பு கவசம் இல்லாததால் அந்த கரையான்கள் தானாகவே இறந்துவிடுகின்றன.
மனிதர்களுக்கு நூறு சதவீத பாதுகாப்பு!
இந்த புதிய முறையில் உள்ள மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், இது மனிதர்களுக்கு நூறு சதவீதம் பாதுகாப்பானது. இந்த கெமிக்கல் பூச்சிகளின் கைட்டின் உற்பத்தியை மட்டுமே குறிவைத்து தாக்குவதால், எலும்புகளைக் கொண்ட மனிதர்களுக்கும் பாலூட்டிகளுக்கும் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஆய்வின் முக்கிய விஞ்ஞானிகளான நிக்கோலஸ் பவுலோஸ் (Nicholas Poulos) மற்றும் டாங்-ஹ்வான் சோ (Dong-Hwan Choe) ஆகியோர் மிக உறுதியாகக் கூறியுள்ளனர். ஆய்வகப் பரிசோதனையில் இந்த மருந்து சுமார் 95 சதவீத கரையான்களை அழித்து மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ளது.
ஒன்றாக சேர்ந்து சாகும்!
இது உடனடியாக கரையான்களைக் கொல்வதில்லை. இந்த மருந்து கலந்த மரத்தைச் சாப்பிடும் கரையான்கள், தங்களது கூட்டத்தில் உள்ள மற்ற கரையான்களுக்கும் அந்த உணவைப் பகிர்கின்றன. இதனால் ஒரு கரையான் மருந்தைச் சாப்பிட்டாலும் அது ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் அந்த மருந்தை கொண்டு சென்று சேர்த்துவிடுகிறது. ஆரம்பத்தில் கரையான்களின் வேகம் குறைந்து, பின்னர் சுமார் இரண்டு மாதங்களில் அந்த முழு காலனியும் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுகிறது.
மேலும், கரையான்களை ஈர்க்க பைனின் என்ற இயற்கையான மர வாசனையையும் இதனுடன் கலந்து பயன்படுத்தும்போது இதன் வீரியம் இன்னும் பல மடங்கு அதிகரிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் உள்ள கரையான்களை அழிக்க இனிமேல் ஆபத்தான கெமிக்கல்களை அடித்துவிட்டு வீட்டை காலி செய்து ஓட வேண்டிய அவசியம் வருங்காலத்தில் இருக்காது. பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் கரையான்களின் பெருக்கம் மிக வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், இந்த புதிய கெமிக்கல் தொழில்நுட்பம் சாமானிய மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக அமையும்.
தற்போதைய ஆய்வுகள் முழுமையடைந்த பிறகு இது மிக விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.