

இன்று ஆங்கிலப் புத்தாண்டு 2026. உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம்மில் பலர் ஆங்கிலப் புத்தாண்டு அன்று இதைச் செய்யப்போகிறேன், அதைச் செய்யப்போகிறேன் என்று சபதம் செய்வார்கள். தொண்ணூற்றி ஒன்பது பேர்களின் சபதம் ஒரு வாரம் கூட நீடிக்காது. சிலருடைய சபதங்கள் மூன்றாவது நாளிலேயே முடிவிற்கு வந்துவிடும். சுருக்கமாக சொல்லப்போனால் புத்தாண்டு சபதங்கள் தோல்வியிலேயே முடியும்.
சிலர் முதல் தேதியிலிருந்து சிகரெட் பிடிப்பதை விட்டுவிடப் போகிறேன் என்பார்கள். சிலர் மாமிசம் சாப்பிடுவதை அறவே விடப்போகிறேன் என்பார்கள். இன்னும் சிலர் மது அருந்துவதை விடப்போகிறேன் என்பார்கள். சிலர் அதிகம் பேசுவதை குறைத்துக்கொள்ளப் போகிறேன் என்பார்கள். இதையெல்லாம் செய்தால் நல்லதுதான். இவையெல்லாம் ஒரு தனிநபருக்கும் நல்லது. மொத்தத்தில் சமுதாயத்திற்கும் நல்லது. ஆனால், ஒரு வாரம் தாண்டியதும் மனம் மாறத் தொடங்கும். மெல்ல மெல்ல விட்டுவிட நினைத்த பழக்கங்கள் நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்ளத் தொடங்கும். இது இயல்பான விஷயம்தான். பல ஆண்டுப் பழக்கத்தை சட்டென விட்டுவிட முடியாது என்பதே நிதர்சனம். இப்படியேதான் காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
நம்மிடமுள்ள ஏதாவது சில கெட்ட பழக்கங்களை விட்டுவிட நினைத்தால் சபதம் எல்லாம் செய்துகொண்டிருக்கக் கூடாது. அதை மெல்ல மெல்லக் குறைக்கப் பழக வேண்டும். அப்போதுதான் அது நிரந்தரமாக நம்மை விட்டு அகலும். எல்லோரும் அடிப்படையில் நல்லவரே. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சில சமயங்களில் நாம் தவறு செய்யக் காரணமாகிவிடுகிறது. இந்தப் புத்தாண்டை அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் புத்தாண்டாக மாற்ற நாம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய சபதங்கள் சில இருக்கின்றன.
‘எல்லோரிடமும் ஏழை, பணக்காரன் என்ற பேதம் ஏதும் பாராமல் அன்போடு பழகுவேன். சின்ன சின்ன பிரச்னைகளை பெரிதாக்காமல் நாம் அனைவரும் சகோதரர் என்ற மனப்பான்மையோடு விட்டுக் கொடுத்து வாழப் பழகுவேன். சக மனிதர் எவரையும் எக்காரணத்தைக் கொண்டும் ஏமாற்ற மாட்டேன். பொய் சொல்ல மாட்டேன். எந்த ஒரு பிரச்னையையும் வன்முறையைக் கையில் எடுக்காமல் சட்டத்திற்கு உட்பட்டு அகிம்சை வழியிலேயே பேசித் தீர்ப்பேன். எக்காரணத்தைக் கொண்டும் லஞ்சம் வாங்க மாட்டேன். எக்காரணத்தைக் கொண்டும் எவருக்கும் லஞ்சம் தரவும் மாட்டேன். பெண்களை சகோதரிகளாக மதித்து நடப்பேன். அவர்களுக்கு எந்த ஒரு கணத்திலும் தீங்கு நினைக்க மாட்டேன். எளியவர் எவருக்கேனும் உதவி தேவைப்பட்டால் என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்’ என சபதம் எடுக்க வேண்டும்.
இதையெல்லாம் ஏற்கெனவே நான் பின்பற்றுகிறேன் என்று எவராவது சொன்னால் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி பாராட்டி மகிழ்வோம். எல்லாவற்றிற்கும் மேலாக நம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் படித்து முடித்து நம் நாட்டிலேயே வேலை செய்வேன் என்றும் நம் நாட்டை உலகின் முதல் நாடாக மாற்றுவேன் என்றும் சபதம் மேற்கொள்ள வேண்டும்.
மேற்கூறியவை எல்லாம் நடந்தால் எப்படி இருக்கும் என்று ஒருகணம் கற்பனை செய்து பாருங்கள். நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா? இவை நடைமுறைக்கு வந்தால் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் பிரகாசமாகவும் ஒளிரும். இந்த 2026ம் ஆண்டு ஒளிரும் ஆண்டாகவும் நம் வாழ்வில் மகிழ்ச்சியை மட்டுமே நிரப்பும் ஆண்டாகவும் அமையட்டும்.