
உங்கள் வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியாக உணர வைத்தால், அவர் உங்களையும் மகிழ்ச்சியாக இருக்க வைப்பார். அன்பு என்பது பெரும்பாலும் ஒரு வழிப்பாதையாக இருக்காது. சிலர் தங்கள் துணையையோ அல்லது காதலியையோ மகிழ்ச்சியாக உணரவைக்க எப்போதும் விலை உயர்ந்த பரிசுகளையே கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பணத்தின் மூலம் மகிழ்ச்சியை வாங்க நினைக்கிறார்கள். ஆனால், இந்த செயல்முறை எல்லா நேரங்களிலும், எல்லா மனிதர்களிடத்தும் பலன் அளிக்காது. ஒருவேளை உங்களிடம் பணம் தீர்ந்துபோனால், மகிழ்ச்சியை எப்படி விலைக்கு வாங்குவீர்கள்? ஒருசிலரை விலையுயர்ந்த பொருட்களினால் எப்போதும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது.
பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருசில செயல்கள் மகிழ்ச்சியை கொண்டு வரும். துணையிடம் அன்பை வெளிப்படுத்த, அவர்களை மகிழ்ச்சியாக வைக்க விலையுயர்ந்த பரிசுகளை வழங்க வேண்டிய அவசியமில்லை. சிறிய விஷயங்களில் கூட நீங்கள் மகிழ்ச்சியைக் கொண்டு வரலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை, உங்கள் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நபராக நீங்கள் உணர வைக்க வேண்டும். உணர்வு ரீதியாக அவரை அணுக இந்த செயல்களைச் செய்யுங்கள்.
அன்பு மடல்: இன்றைய முன்னேறிய யுகத்தில் உங்கள் அன்பினை வெளிப்படுத்த வாட்ஸ் அப் பார்வார்ட் செய்திகளை அனுப்பி இருப்பீர்கள். ஆனால், அதே நேரம் உங்கள் கையால் எழுதப்படும் ஒரு கடிதம் உங்கள் துணைக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக் கூடும். உங்கள் காதலி அல்லது துணைக்கு உங்கள் கற்பனையில் ஒரு கவிதையை எழுதுங்கள் அல்லது உங்களுக்கு கவிதை எழுத வராவிட்டால், அவருடன் எப்படி மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்கள் என்பதை எழுதுங்கள்.
நீங்கள் அவரை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதையும் விரிவாக அந்த கடிதத்தில் எழுதுங்கள். அந்தக் கடிதம் எழுதும்போது பல வண்ண பேனாக்களை உபயோகித்து எழுதுங்கள். அதில் சிறியதாக இதயம், ரோஜாபூ போன்ற வடிவங்களை அங்கங்கே வரைந்து விடுங்கள். அவ்வப்போது இதுபோன்ற கடிதங்களை எழுதி அவர் பார்க்கும் இடங்களில் வைத்து விடுங்கள். இந்தக் கடிதத்தை அவர் படிக்கும்போது உங்களின் அன்பினை அவர் உணர்வார்.
சமையல்: எப்போதும் உணவு என்பது ஒருவரை எளிதில் மகிழ்ச்சியாக்கக் கூடிய ஒரு பொருளாகும். உங்கள் துணைக்குப் பிடித்த உணவுகளை, அவரது துணையின்றி நீங்களே முழுவதும் சமைத்து அவரை அமர வைத்து பரிமாறலாம் அல்லது ஊட்டியும் விடலாம். ஒருவேளை நீங்கள் சமையலில் தேர்ந்தவராக இல்லாவிட்டால் பெரிய அளவில் சமைக்காமல் அவருக்குப் பிடித்த பிஸ்கட்டுகளுடன், உங்கள் கையால் போட்ட காபி அல்லது தேநீரை அவருக்குப் பருகக் கொடுக்கலாம். இவ்வாறு செய்வதால் உங்கள் மனைவி மிகவும் மகிழ்ச்சியாக உணர்வார். அவருக்காக நீங்கள் செய்யும் இந்தச் செயலை மிகவும் ரசிப்பார்.
நேரம் ஒதுக்குதல்: இன்றைய எந்திர வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்குதல் கடினம். அதேநேரம் தினமும் இரவு உணவு உண்ணும்போது அவரிடம் பேசிக்கொண்டு நேரத்தை செலவிடலாம். சாப்பிட்டு முடித்த பின், வீட்டு வாசலில் சிறிது நேரம் பேசிக்கொண்டே நடைப்பயிற்சி செய்யலாம். வார இறுதி நாட்களில் பூங்கா, கோயில், கடற்கரை போன்ற ஏதேனும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று சிறிது நேரம் அமர்ந்து மனம் விட்டுப் பேசுங்கள். இது அவருக்கு உங்கள் மீதான பிடிமானத்தை அதிகமாக்கும்.
பணிவிடை: உங்கள் துணைக்கு, கிடைக்கும் நேரத்தில் சிறிய அளவிலான பணிவிடைகளைச் செய்யுங்கள். அவருடைய வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் , அவர் சோர்வுற்ற நேரத்தில் கை, கால்களைப் பிடித்து விடுதல் போன்ற செயல்கள் மூலமாக அன்பினை வெளிப்படுத்துங்கள். இதனால் உங்கள் துணை உங்களுடன் இருப்பதில் அதிக மகிழ்ச்சி அடைவார்.