
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாசத்தின் அடையாளமாக, பெற்றோர் தம் பிள்ளைகளை அணைத்துக்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. தன் பச்சிளம் சிசுவை மார்போடு அணைத்துக்கொண்டு அதன் ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பார்த்து கவனித்துச் செய்வாள் அதன் தாய். அழும் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும்போது சட்டென்று தன்னுடைய அழுகையை நிறுத்திக்கொள்ளும். அன்னையின் அன்பான அணைப்பு குழந்தைக்கு இதமும் ஆறுதலும் அளிக்கிறது.
பச்சைக் குழந்தைக்கும், கைக்குழந்தைக்கும் மட்டுமல்ல, வளர்ந்த டீனேஜ் பிள்ளைகளுக்கும் இந்த அரவணைப்பும் கட்டிப்பிடித்தலும் மிக மிக முக்கியம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதன் பொருட்டு ஜூலை 21ம் தேதி உலகளாவிய கட்டிப்பிடி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறிப்பாக பெற்றோர் தம் பிள்ளைகளை அணைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
உலகளாவிய கட்டிப்பிடி தினம் தோன்றிய வரலாறு: இந்த தினம் தோன்றியதன் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு இருக்கிறது. மிஷேல் நிக்கோல்ஸ் என்பவர், ‘உலகளாவிய ஹக் யுவர் கிட்ஸ் தினம்’ என்று 2008ல் தொடங்கினார். அவரது மகன் மார்க் எட்டு வயதில் புற்றுநோயால் இறந்துபோனான். பாசமிகு அன்னையால் தனது மகன் மிக இளவயதில் இறந்துபோனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உயிரோடு இருந்திருந்தால் தனது மகனை எத்தனை தூரம் போற்றி வளர்த்திருப்போம் என்று அவர் நினைத்து ஏங்கினார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மிஷேல், 'குழந்தைப் பருவம் நிலையற்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டிப்பிடித்து ஆறுதல் தந்து, அரவணைத்துக் கொண்டாட வேண்டும் என்று விரும்பினார். எனவே இந்த தினத்தை நிறுவினார்.
அணைப்பு ஏன் அவசியம்?
உண்மையில் பல பெற்றோர்களும் செய்யும் பெரும் தவறு, பிள்ளைகள் வளர வளர அவர்களிடமிருந்து விலகிச் செல்வதுதான். தமது சக்திக்கு மீறி பணம் செலவழித்து படிப்பு, ஆடைகள், பிற வசதிகள் என செய்து தருபவர்கள் கூட அவர்களின் மனதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. குழந்தைகள் பெற்றோரின் தொடுதலையும் அரவணைப்பையும் மிகவும் விரும்பும் இயல்புடையவர்கள்.
முரட்டு சுபாவம் உள்ள குழந்தைகள் கூட, பெற்றோர் அடிக்காமல், அதட்டாமல் மென்மையாக கட்டிப்பிடித்து அன்போடு எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள். அதேபோலத்தான் டீனேஜ் பிள்ளைகளையும் கையாள வேண்டும். அவர்களை அடிக்கடியோ அல்லது தினமுமே ஒரு சில நிமிடங்களாவது கட்டிப்பிடித்து ஆறுதல் படுத்த வேண்டும். இது அவர்களது உடலுக்கும் மனதுக்கும் பலவிதமான நன்மைகளை அளிக்கிறது.
தற்போதைய சமுதாயத்தில் குழந்தைகளும் டீனேஜ் பிள்ளைகளும் பலவிதமான மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். பள்ளி, நண்பர்கள் என அவர்கள் சந்திக்கும் சவாலான பல விஷயங்கள் அவர்களுக்கு மிகுந்த பதற்றத்தையும் கவலையையும் அளிக்கிறது. நிறைய விஷயங்களை அவர்களால் பெற்றோரிடம் வெளிப்படையாகப் பேச முடிவதில்லை. ஆனால், 10 வினாடிகள் மட்டுமாவது பெற்றோர் தமது பிள்ளைகளை கட்டிப்பிடிப்பதன் மூலம் பிள்ளைகளுடைய மன அழுத்தம் குறைந்து தமது மனதுக்கு நெருக்கமானவர்களாக பெற்றோரை பார்க்கிறார்கள்.
நோயுற்றிருக்கும் (குறிப்பாக சளி, காய்ச்சல்) பிள்ளைகளை கட்டிப்பிடித்துக் கொள்ளும்போது அவர்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக செயல்படுகிறது. மிக விரைவில் அவர்களின் நோய் உடலை விட்டு நீங்கும் என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மனரீதியாக அவர்கள் அனுபவிக்கும் பல தொல்லைகளை இந்த அரவணைப்பு சரி செய்கிறது.
தாம் தனியாக இல்லை, எந்தப் பிரச்னை வந்தாலும் தம்முடைய பெற்றோர் உடன் இருப்பார்கள், உதவி செய்வார்கள் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு உணர்த்துகிறது. எனவே, பெற்றோர் கூச்சப்படாமல் தங்கள் பிள்ளைகளை தினமும் 10 வினாடிகள் மட்டும் கட்டிப்பிடித்தால் கூட போதும். அது எண்ணற்ற நன்மைகளைக் கொண்டு வரும்.