

நான்ஸ்டிக் கடாய், தோசைக்கல் போன்றவற்றில் படிந்திருக்கும் கிரீஸ் போன்ற கறைகள் மற்றும் மெட்டல் ஸ்பூன் உபயோகிப்பதால் உண்டான கீறல்களுக்கிடையில் உள்ள அழுக்குகள் போன்றவை சுலபமாக நீக்க முடியாதவை. இவற்றை நீக்குவதற்கான ஒரே தீர்வு என்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
சமையலுக்கு நாம் பயன்படுத்தும் எண்ணெயிலுள்ள கொழுப்புகள் சூட்டில் உடைக்கப்பட்டு ஆக்ஸிடைஸ் ஆகி பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். பாத்திரம் குளிர்ச்சியடைந்த பின் அது மேலும் கடினத்தன்மை அடைந்து நீக்க முடியாதபடி ஆகிவிடும். பிறகு அதில் உணவுப் பொருட்கள், தூசு மற்றும் நீரில் உள்ள கனிமச் சத்துக்கள் சேர்ந்து கிரீஸ் போலாகி தண்ணீரால் கரைக்க முடியாததாகிவிடும். வலுவான டிடர்ஜன்ட் மற்றும் மெட்டல் ஸ்கிரப்பர் கொண்டு தேய்க்கும்போது நிலைமை மேலும் மோசமடையும். நான்ஸ்டிக் பான், ஸ்டிக்கி ஆகிவிடும். மேலும், எண்ணெய் ஊற்றுகையில், அழுக்குகள் அதிகமாகி பாக்டீரியாக்களின் கூடாரம் ஆகிவிடும்.
அதை சுத்தப்படுத்த, வினிகர், லெமன் ஜூஸ், பேக்கிங் சோடா, வாஷிங் சோடா போன்றவற்றை உபயோகிக்கையில், சில வகை உலோகங்கள் மீது அவை எதிர்வினை புரிந்து உலோகம் மற்றும் உலோகப் பூச்சுகளின் மீது பாதிப்பை உண்டுபண்ணக்கூடும். மிகச் சாதாரண முறையில் சமையல் பாத்திரங்களில் படியும் அழுக்குகளை நீக்க உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகிய இரண்டு பொருட்கள் போதுமானதாக உள்ளன. சாதாரண டேபிள் சால்ட் மைக்ரோ ஸ்கிரப்பராக செயல்படுகிறது. உலர்ந்த உப்பு துகள்கள், பாத்திரத்தின் மேற்பரப்பை சேதப்படுத்தாமல், கிரீஸ் போன்ற அழுக்குகளை உடைத்து உட்புகுந்து, தேய்ப்பதற்குப் பயன்படுத்தும் ஸ்பான்ஞ்சுடன் இணைந்து அழுக்குகள் அனைத்தையும் வெளியேறச் செய்து விடுகிறது. உப்பு குறைந்த விலையுள்ள பொருள். மேலும், அதை உபயோகித்த பிறகு கழுவி விடுவதும் சுலபம்.
ஆலிவ் ஆயில், எண்ணெய் கறைகளை நீக்கப் பயன்படும் என்பது அபத்தமானதாகப் பட்டாலும், அதன் செயல்பாடு முள்ளை முள்ளால் எடுப்பதற்கு சமமானது. கொழுப்புகள் நீரில் கரைவதை விட, பிற கொழுப்பான பொருளுடன் சேரும்போது சுலபமாக கரைந்துவிடும்.
சிறிதளவு ஆலிவ் ஆயிலை எண்ணெய் பிசுக்கு நிறைந்த கடாயில் தடவி வைத்தால், கிரீஸ் மிருதுவாகி, ஆக்ஸிடைஸ் ஆன அடுக்கை உருகச் செய்துவிடும். புதிதாக தடவப்பட்ட ஆலிவ் ஆயில் அதன் வழியே மேலும் உள்ளே சென்று கடினமாக ஒட்டிக்கொண்டிருக்கும் பிசுக்கை இளகச் செய்யும். அப்போது உப்பு வைத்து ஸ்கிரப் செய்தால் மொத்த அழுக்கும் வெளிவந்துவிடும். இரண்டு பொருட்களின் கூட்டுமுயற்சி வெற்றிக்கு வித்திடுகிறது. ஆலிவ் ஆயில் பிசுக்கை இளகச் செய்கிறது. உப்பு அதை பாத்திரத்திற்கு பாதிப்பின்றி மென்மையாக வழித்தெடுத்து விடுகிறது. மூன்றாவதாக, இளஞ்சூடான தண்ணீரில் கழுவி எடுக்கும்போது அனைத்து அழுக்குகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன.
அடுப்பில் வைத்து உபயோகித்த அழுக்குப் பாத்திரம் நன்கு ஆறியவுடன், ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களை துடைத்துவிட்டு, கிரீஸ் உள்ள பகுதியில் உப்பை சற்று தாராளமாக தூவி, அதன் மீது உப்பு முழுவதுமாக நனையுமாறு ஆலிவ் ஆயிலை ஸ்பிரே பண்ணவும். மிருதுவான பிரஷ் அல்லது ஸ்பான்ச் வைத்து கீறல் விழாதபடி தேய்த்து சுடு நீரால் கழுவி எடுக்கவும். கிரீஸ் பானில் ஆங்காங்கே அதிகளவில் படிந்திருக்குமானால், அதை மாற்றிவிட்டு புதிய பானை வாங்கிக் கொள்வது சிறந்த மாற்றாகும்.