
வாழ்க்கையில் நாம் நினைக்கும் அத்தனையும் நடந்து விடாது. சில தோல்விகள், சில வெற்றிகள், சில சமயம் வெற்றி தோல்வியில்லாமல் போவது மற்றும் பல சுவாரஸ்யங்களும் பல சங்கடங்களும் கூட வாழ்க்கையில் நிகழ்வதுண்டு. சந்தோஷம் வரும்போது அதைக் கொண்டாடும் நாம், கஷ்டம் வரும்போதும் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதுதானே நியதி!
ஆண்கள், பெண்கள் இருவருமே பிறந்து, வளா்ந்து, படித்து, வேலைக்குப் போய், பின்னர் திருமணம் எனும் நிலை வரும்போது, சிலருக்கு வாழ்க்கை எனும் அந்த வண்டியில் மாற்றம் எனும் பிரேக் பிடித்து வண்டி நகர மறுக்கிறது. இது வெகுவான நிஜம். சரி, திருமண வாழ்க்கையில் இணைந்து விட்டோம். அது எந்த வகை திருமணமோ, இரு மனம் இணைந்தால்தானே திருமணம். அந்த வாழ்க்கை எனும் தேர் இழுக்க முடியாதது இல்லையே. அதை இழுத்துச் செல்வது மிகவும் சுலபம்தான்! சுலபம் என நினைத்தால் சுலபமே! சிரமம் என நினைத்தால் சிரமம்தான்! எதுவும் நாம் கையாள்வதில்தான் உள்ளது.
அதற்கு தம்பதியர்களுக்குத் தேவை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, விட்டுக்கொடுத்துப்போவது, பரஸ்பரம் அன்பு பாராட்டுவது, நான் உனக்கானவன், நீ எனக்கானவள் என்ற நிலைபாடு! அனைத்திற்கும் மேலாய் கணவனை மனைவியும், மனைவியை கணவனும் விட்டுக்கொடுக்காமல் வாழ்வது, சுக, துக்கங்களைப் பகிர்ந்துகொள்வது, இருவரும் பொய் சொல்லாமல், எதையும் மறைக்காமல் வாழ்வது என பல்வேறு காரணங்கள் உள்ளன.
தனக்கு மனைவியாய் வருபவள் தனது சொந்த பந்தங்களை எல்லாம் விட்டுவிட்டு, ‘தன்னை கண் கலங்காமல் காப்பாற்றுவான்’ என்ற நம்பிக்கையில் வருகிறாள். அவளது உணர்வுகளை கணவன்மார்கள் மதிக்கக் கற்றுக்கொண்டாலே வாழ்க்கை இனிக்கும். தனது குடும்பம், எனது மனைவி என நினைக்க வேண்டும். அப்படி நினைப்பதுபோல, அவளது குடும்பத்தார்களையும் நமக்கானவர்கள் என நினைக்க வேண்டும். ஒன்றுமில்லாத விஷயத்திற்கு இருவருக்கிடையில் சண்டை வந்தால் அதை பெரிதுபடுத்தாமல் அமைதி காத்து புரிதலோடு செயல்பட வேண்டும்!
பெண்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பழகினாலும், தம் வீட்டு பெருமை மற்றும் தனது கனவன் வீட்டு குறைகளை மற்றவரிடம் சொல்லவே கூடாது! மாமனார், மாமியாரை பெற்றோர்கள் போல பாவிக்க வேண்டும்! எந்த முடிவுகள் எடுத்தாலும் கணவனும், மனைவியும் கலந்து பேசி ஈகோ கடைபிடிக்காமல் நல்ல முடிவாய் எடுக்க வேண்டும்! கோபம் தவிர்ப்பது எப்போதும் நல்லது.
கணவன், மனைவிக்குள் சண்டை வந்தால் அவளது பிறந்த வீட்டாரை கேவலமாகப் பேசும் நிலையை அறவே கடைபிடிக்கக் கூடாது! கணவன் உட்பட, அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளை செய்து தர வேண்டும் . தெரியாத பல விஷயங்களை மாமியாரிடம் கேட்டுத் தெரிந்து செயல்படுவது சாலச்சிறந்தது. பிறந்த வீட்டின் பெருமைகளை அடிக்கடி புகுந்த வீட்டின் நடைமுறைகளோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது!
ஒருவர் மீது ஒருவருக்குள் சந்தேகம் எனும் பேய் குடியேற விடவே கூடாது. எந்த விஷயமாக இருந்தாலும் உண்மையோடு இருவரும் நடந்து கொள்வது நல்லது. இருவரும் வேலைக்குச் செல்லும் நபர்களாய் இருந்தால் அவரவர்களுக்குள்ள வேலை பளுவைப் பற்றி கலந்து பேசுவது தவறல்ல! ‘உன்னை விட எனக்குத்தான் வேலை பளு அதிகம். உனக்கென்ன கவலை?’ என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்ப்பது நல்லதல்ல!
யாரேனும் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாதபோது அவரவர்கள் சிரமம் அறிந்து விட்டுக்கொடுத்து சகிப்புத்தன்மையோடு வாழ வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களை உதாசீனம் செய்யாமல் அவர்களது தேவைகளை மருமகளாகிய நாமே செய்ய வேண்டும். மாமியாரும் மருமகளும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்தாலே பாதி பிரச்னை முடிந்தது! அதேபோல, அவரவர் சம்பந்தமான தெய்வ வழிபாடுகளில் பிரிவினை வரக் கூடாது.
கணவனிடம் ஆடம்பர செலவு, படாடோபம், பந்தா காட்டி வாழ்வது, பொய் சொல்வது போன்ற நிகழ்வுகள் தோன்றினால் அவரை நல்வழிப்படுத்தலாம். அதே சொல்தான் மனைவிக்கும்! சிக்கனம் கடைபிடித்து வாழ்வது சிறப்பு. நாம், நமது, நமக்கான துணை என்ற நம்பிக்கை வேலியில் வாழ்க்கை எனும் வேட்டி, சேலையை காயப் போடலாம். அதை துளி கூட கிழியாமல் எடுப்பது என்பது கணவன், மனைவிக்குள் இருக்கும் ஒற்றுமையைப் பொறுத்ததே!
வாழ்க்கையில் அன்பையே பிரதானமாய் கொண்டு, நோ்மறை சிந்தனையோடு வாழ்ந்துதான் பார்க்கலாமே! நம்மால் முடியும், நம்மாலும் ஆதர்ஸ தம்பதிகளாய் வாழ முடியும்! இதற்கான வழி கணவன், மனைவி இருவர் கையில்தான் உள்ளது.