மனிதனின் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது அவர்கள் பார்க்கும் வேலை. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஏறத்தாழ 90,000 மணி நேரத்தை வேலையில் செலவிடுகிறான். உலகில் 55 சதவீத பணியாளர்கள் காலை 10 மணி முதல் மதியம் இரண்டு மணி வரையிலான நேர அமைப்பில் பணியாற்றவே விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் அவர்களின் வேலைத் திறன் அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பணியாளர்கள் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்வதாகவும், வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பிற்பகலில் பணியாளர்களின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவான அளவில் இருப்பதாகவும் அமெரிக்க ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
ஜன்னல்கள் அதிகமிருந்து வெளிச்சமும், காற்றும் அதிகமாக வரும் வசதியுள்ள இடத்தில் வேலை பார்ப்பவர்கள் மற்றவர்களை விட சுறுசுறுப்பாகவும் இரவு நேரங்களில் மற்றவர்களை விட 46 சதவீதம் ஆழ்ந்து தூங்குவதாகவும் லண்டன் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில் பசுமையான செடிகளை ஆங்காங்கே வைத்து ‘பசுமை சூழலை’ பராமரிக்கும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் சந்தோஷமாக பணியாற்றுவதாகவும் அதனால் அவர்களின் வேலைத் திறன் மற்ற அலுவலகப் பணியாளர்களை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளது இங்கிலாந்து கார்டிஃப் யுனிவர்சிட்டி சைக்காலஜி துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
செய்யும் வேலையிலுள்ள திருப்தி உணர்வுக்கும், மனநிலைக்கும் மற்றும் உடல் நிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உங்களின் 20 மற்றும் 30 வயதுகளில் நீங்கள் பார்க்கும் வேலையை பிடித்தம் இல்லாமல் பார்க்கிறீர்களா? உங்களுக்கு பின்நாளில் மன அழுத்த நோயும், தூக்கமின்மை பிரச்னைகளும் ஏற்படலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். வேலை காரணமாக எழும் மன அழுத்தம் உங்களின் வாழ்நாளின் ஆயுளை 33 ஆண்டுகள் குறைத்து விடுவதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வழக்கத்தை விட உங்களிடம் அதிகம் வேலை வாங்கும் மேலதிகாரியிடம் வேலை செய்கிறீர்களா? உங்கள் உடல் நிலை விரைவில் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் இங்கிலாந்து ஈஸ்ட் யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள்.
வேலை பார்க்கும் இடத்தில் நியாயமாக நடத்தப்படும் பணியாளர்கள் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ்வதாக கண்டறிந்துள்ளனர் இங்கிலாந்து ஆங்கிலேய யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். நல்ல வேலை அமைந்தால் மட்டும் போதாது, உங்களுடன் வேலை செய்யும் சக பணியாளர்கள் உங்களுடன் நட்பாகப் பழகி வந்தால்தான் உங்கள் உடல் நலனும் சிறக்கும் என்கிறார்கள். அதேபோல், உங்கள் சக பணியாளர்கள் குழு சோம்பேறித்தனமான மனநிலையில் இருந்தால் அது உங்களையும் தொற்றுநோய் போன்று தொற்றிக்கொள்ளும் என்கிறார்கள் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
விடுமுறையே எடுக்காமல் அலுவலகம் செல்பவரா நீங்கள்? ஒருவேளை விடுமுறையில் சென்றாலும் அலுவலகத்துடன் தொடர்பிலேயே இருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் உடலுக்கும், மனதுக்கும் நல்லதல்ல என்கின்றன ஆய்வுகள்.
பொதுவாக, 65 வயது வரை வேலை செய்கிறவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதாகவும், விரைவில் ரிட்யர்மெண்ட் வாங்குகிறவர்களின் ஆயுள் குறைவாக இருக்கும் என்பதை அமெரிக்காவின் ஓரிகான் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 65 வயது வரை வேலை பார்க்கிறார்கள் பொருளாதார ரீதியாகவும், உடல் நிலை ஆரோக்கிய ரீதியாகவும் திடமாக தங்களைப் பார்த்துக்கொள்வதே இதற்குக் காரணம் என்கிறார்கள். இவர்களின் வாழ்நாள் 11 சதவிகிதம் மற்றவர்களை விட அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.