இரும்புச்சத்து நமது இரத்தச் சிவப்பணுக்களின் ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் ஒரு முக்கியமான கனிமம் ஆகும். இரும்பு நுரையீரலில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவுகிறது. இணைப்புத் திசு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதை உணர்த்தும் ஏழு விதமான அறிகுறிகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. சோர்வாக உணர்தல்: இரும்புச்சத்துக் குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று சோர்வாக இருப்பது. இரவு போதுமான அளவு தூங்கினாலும் அடுத்த நாள் காலையில் கண் விழிக்கும்போது மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வார்கள். ஏனென்றால், உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும்போது அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல போதுமான ஹீமோகுளோபின்கள் இல்லை. இதனால்தான் சோர்வும் பலவீனமும் ஏற்படுகிறது. மேலும், சிலர் இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள்.
2. குளிர்ச்சியான கைகள் மற்றும் கால்கள்: இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சுற்றுப்புறச்சூழல் குளிர்ச்சியாக இல்லாவிட்டால் கூட கைகள் மற்றும் கால், விரல்களில் அடிக்கடி இந்தக் குளிர்ச்சியை உணர்வார்கள். போதுமான ஹீமோகுளோபின் இல்லாததால் இரத்த ஓட்டம் குறைகிறது. இதுவே இந்த குளிர்ச்சிக்குக் காரணம்.
3. வெளிர் நிறத்தில் இருக்கும் சருமம்: வழக்கத்தை விட சருமப் பகுதி வெளிர் நிறமாக இருந்தால், உடலில் இரும்புச் சத்து குறைபாடு இருக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம். இரும்புச்சத்து குறையும்போது உடலில் போதுமான இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யாத நிலை ஏற்படும். முகம், உள்ளங்கைகள், நாக்கு போன்ற இடங்களில் லேசான பிங்க் நிறத்தில் இல்லாமல் வெளிரிப்போய் இருந்தால், இரும்புசத்து குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். இவர்களுக்கு வாயின் உள்பகுதியும் வெளிர் நிறமாக இருக்கும்.
4. அடிக்கடி தலை சுற்றுதல்: இரும்புச்சத்து குறைபாட்டின் பொதுவான அறிகுறி தலைசுற்றல் ஆகும். இரும்புச்சத்து குறையும்போது மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாமல்போகும். குறிப்பாக, காலையில் படுக்கையை விட்டு எழும்போது கிறுகிறு என தலை சுற்றும். மேலும், இது பரந்த அளவிலான சிக்கல்கள் மற்றும் தீவிரத்தன்மையின் பல்வேறு நிலைகளைக் குறிக்கலாம்.
5. அடிக்கடி தலைவலி: மூளைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காதபோது தலைவலி ஏற்படலாம். இரும்புச்சத்து குறைபாடு இரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதுவே தலைவலிக்கு வழிவகுக்கும். சமீபத்திய ஆய்வில் இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகையையும், நாள்பட்ட தினசரி தலைவலிக்கும் இடையேயான வலுவான தொடர்பைக் கண்டறிந்துள்ளது.
6. பலவீனமான முடி மற்றும் நகங்கள்: இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு முடியும் நகங்களும் பலவீனமாக இருக்கும். அடிக்கடி உடைந்து போகும் நகங்கள் உள்நோக்கி வளைந்து உடைந்து போகும். இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வுகள் நகங்களில் ஏற்படும். இரும்புச்சத்து குறைபாடு முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை தராததால் முடி உதிர்தல் மற்றும் இழப்பு ஏற்படலாம்.
7. ஊட்டச்சத்து இல்லாத பொருட்களை சாப்பிடுதல்: உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள், ஐஸ் கட்டிகளை அடிக்கடி எடுத்து உண்பார்கள். சமைக்கப்படாத அரிசி, காகிதம், சுண்ணாம்பு, சாக்பீஸ், சாம்பல் போன்ற ஊட்டச்சத்து இல்லாத பொருட்களை சாப்பிடுவார்கள்.
இரும்புச்சத்துக் குறைபாட்டைத் தடுக்க, இரும்புச்சத்து அதிகமுள்ள பீன்ஸ், உலர் பழங்கள், முட்டை, ஒல்லியான சிவப்பு இறைச்சி, சால்மன் மீன், பட்டாணி, டோஃபு, இலைக்கீரைகள், தக்காளி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.