"செல்ஃபோன் இல்லைன்னா அவ்வளவுதான்!" - இருந்தா?

Mobile
Mobile
Published on

சில நாட்களுக்கு முன்பு  பகல் பதினோரு மணி அளவில் தேநீர் கடையில் வழக்கம் போல் தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். அங்கு தேநீர் அருந்திக்கொண்டிருந்த இருவரில் ஒருவர் மிகவும் பதட்டமாக மற்றொருவரிடம் போச்சே, போச்சே என புலம்பி அங்கும் இங்கும் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவரிடம் "என்ன சார் ஆச்சு?" என வினவியபோது, "என் கைபேசியைக் காணவில்லை எங்கேயோ வைத்துவிட்டேன்" என்று கிட்டத்தட்ட அழுதே விட்டார். பின்னர் அவரின் நண்பர் கைபேசியிலிருந்து அவர் எண்ணுக்கு கால் செய்த போது அது பக்கத்திலேயே அடித்தது. அந்தக் கைபேசி தேநீர்க்கடையில் வடை அடுக்கி வைக்கும் ஒரு கண்ணாடிக்கூண்டிற்குள் இருந்தது. அந்த கடைக்காரர் "நான்தான் சார் எடுத்து வைத்தேன், நீங்க டீ சாப்பிடும் இடத்திலுள்ள ஸ்டாண்ட் மேல் வைத்து விட்டீர்கள்" என்றார்.

அந்த ஐந்து நிமிடம் அவர் பட்ட பாட்டை காண முடியவில்லை. போகிற போக்கில், "செல்ஃபோன் இல்லைன்னா அவ்வளவுதான்" என்று ஒரு அரிய தத்துவத்தை உதிர்த்து விட்டுப்போனார்.

அவர் மட்டுமல்ல இக்காலகட்டத்தில் தொண்ணூறு சதவீத மக்களின் நிலை இதுவே. உணவின்றி கூட வாழலாம்; ஆனால் ஸ்மார்ட் கைபேசி இன்றி வாழ முடியாது. ஆனால் அதுவே இப்போது நமக்கு எமனாக மாறிக்கொண்டிருக்கிறது.

பல ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையானவர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்வதைக் கண்டிருக்கிறோம். 

சிறு வயதிலேயே ஆபாசப்படம் பார்த்து அடிமையாகி அதனால் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் செய்ததாக பல வன்முறையாளர்கள் தாங்கள் பிடிபடும்போது சொல்வதைப் பார்க்கிறோம்.

சைபர் குற்றவாளிகள் கேபேசிகளை எளிதில் ஹேக் செய்து நமது தகவல்களைத் திருடி பணத்தையும் ஆட்டை போடும் பல நிஜக்கதைகளைக் கேட்கிறோம். 

சமூகவலைத்தளங்களில் தவறான சகவாசங்களில் மாட்டி ஏமாறுகிற ஆண் பெண் என இருபாலரையும் காண்கிறோம்.

இன்னும் ஏராள ஏமாற்று வித்தைகளையும் ஸ்மார்ட் கைபேசி மூலம் சந்தித்துக்கொண்டுதானிருக்கிறோம். இவையெல்லாம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியேதான் உள்ளன.

இதையும் படியுங்கள்:
நீங்கள் தீவிர செல்போன் உபயோகிப்பாளரா? ‘Phantom ringing syndrome’ என்றால் என்னவென்று தெரியுமா?
Mobile

கைபேசி இல்லாத காலங்களில் நிம்மதியாக வாழ்ந்தோம் என்று மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை. இப்போது இருக்கும் டெக்னாலஜியை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.

  1. முடிந்தவரை பயன்படுத்தாதபோது இணையத் தொடர்பு , வைஃபை ஆகியவற்றை அணைத்து வைக்க முயற்சிக்கலாம். இரவு தூங்கும் பொழுதாவது அணைத்து வையுங்கள்.

  2. லொகேஷன் ஷேரிங்கை எப்போதும் ஆன் செய்து வைக்க வேண்டாம். தேவைப்படும்போது மட்டும் செய்யுங்கள். ப்ளூடூத் போன்றவற்றை தைவையில்லாமல் ஆன் செய்ய வேண்டாம்.

  3. கைபேசிக்கு பாஸ்வோர்ட் போட்டு வையுங்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் வங்கிக்கணக்குக்கான பாஸ்வோர்ட்களை கைபேசியில் சேமித்து வைக்க வேண்டாம்.

  4. புதிய எண்ணிலிருந்து வரும் எந்த லிங்க்கையும் க்ளிக் செய்ய வேண்டாம். ஓடிபி சொல்லுங்கள் என புதிதாக யார் கேட்டாலும் சொல்லவேண்டாம்.

  5. தேவையில்லாத செயலிகளை பதிவிறக்க வேண்டாம். தேவையானவைகளை அவ்வப்போது கண்காணித்து செக்யூரிட்டி ஸ்கேன் செய்யுங்கள்.

  6. சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத நபர்களுக்கு தொலைபேசி எண் மற்றும் புகைப்படங்களை அனுப்ப வேண்டாம்.

  7. எக்காரணம் கொண்டும் வங்கிகள் அல்லாத ஆன்லைன் செயலிகளில் கடன் வாங்க வேண்டாம்.

பாதுகாப்பாக வழிகளில் கைபேசியை உபயோகியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com