இன்றைய காலகட்டத்தில் ‘பிள்ளை வளர்ப்பு’ பெரும் சவாலாகத் தான் இருக்கிறது. பிள்ளைகளைச் சிதற அடிக்க ஏராளமானவை உள்ளனவே… நம் பிள்ளைகளை வெற்றிகரமானவர்களாக வளர்த்தெடுக்க பெற்றோராக நாம் கடைபிடிக்க வேண்டிய ஐந்து நுணுக்கங்கள் இதோ..
அறிவியல் பூர்வமான ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள நுணுக்கங்கள் இவை.. தொடர்ந்து படியுங்கள்.
1. அனைத்திலும் நேர்மையான அணுகுமுறை
வெற்றிகரமான நபர்களின் பெற்றோர்களிடம் காண முடிகிற பொதுவான முதல் parenting நுணுக்கம் அவர்களின் நேர்மறையான அணுகுமுறை தான். சிறிய விஷயமோ பெரிய விஷயமோ.. எதுவாக இருந்தாலும் துளி அளவு கூட எதிர்மறையாக அணுகியதில்லை எங்களின் பெற்றோர் என்று அவர்களின் பிள்ளைகள் பெருமையோடு நினைவு கூறுகிறார்கள் . “பெரிதாக சிந்தித்து செயல்படு, நம்பிக்கையாக உணர், நேர்மறையாக இரு, எல்லாமே நடக்கக் கூடியது தான்” என்று சொல்லிச்சொல்லி பிள்ளைகளை வளர்ப்பது, பின்னாளில் அவர்களை வெற்றியாளர்களாக்கும்.
2. குழந்தையைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப ஊக்கப்படுத்துதல்:
என்னதான் ஊக்கப்படுத்தினாலும் மாங்காய் மரம் ஆப்பிள் பழத்தை உருவாக்காதல்லவா! பிள்ளைகளை நன்றாகப் புரிந்து கொண்டு அவர்களால் என்ன முடியும் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப ஊக்கப்படுத்தி அவர்களை வெற்றிகரமானவர்களாக ஆக்கிருக்கிறார்கள் பெற்றோர்கள்.
3. பிள்ளைகளைக் குறைவாக மதிப்பிடாமை:
ஒரு ஆய்வின்போது, சில பிள்ளைகளை விளையாட்டுப் பொருட்கள் விற்கும் பெரிய கடைக்குள் அனுப்பி ஹாக்கி விளையாட்டுக்குத் தயாராகி வரும்படிச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் வெளியில் காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படிக் காத்துக் கொண்டிருந்தபோது அனைத்து பெற்றோர்களும் “அவர்களுக்குத் தானாக உடை அணிந்து கொண்டு வரத் தெரியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனாலும் அந்தப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உதவுவதற்காக உள்ளே அனுப்பப்படவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு உள்ளே சென்ற பிள்ளைகள் அனைவரும் ஹாக்கி உடைகளை மிகவும் சரியாக அணிந்து கொண்டு வெளியே வந்தார்கள். இந்த ஆய்வில் இருந்து, பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளைக் குறைவாகவே மதிப்பிடுகிறார்கள் என்று தெரியவருகிறது.
நாம் நினைப்பதை விட பிள்ளைகளுக்கு அதிகம் தெரியும். நாம் எடை போட்டு வைத்திருப்பதை விட பிள்ளைகளுக்கு அதிக திறமை உண்டு. சிறுசிறு சிரமங்களுக்கு பயந்து பெற்றோர்கள் குறுக்கிட்டு பிள்ளைகளுக்கு உதவுவது உண்மையில் அவர்களை பின்னிழுப்பது போலத்தான் என்பது வெற்றிகரமாக பிள்ளைகளை வளர்த்தெடுத்த பெற்றோர்களின் கருத்தாகும். எனவே பிள்ளைகளுக்குத் தெரியாது என்று நாமாக முடிவெடுக்காமல் அவர்களைச் சுயமாக இயங்க அனுமதிக்க வேண்டும் என்பது முக்கியமான parenting நுணுக்கம்.
4. கடின உழைப்பும் விடாமுயற்சியும் மட்டும் போதாது:
கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கொள்ளலாம் என்பது பொதுவான கருத்து. ஆனால் வெற்றிகரமானவர்களின் பெற்றோர்கள் இதை மட்டும் சொல்லி அவர்களை வளர்க்கவில்லை. கடின உழைப்பும் விடாமுயற்சியும் தாண்டி, அறிவுத் தேடலும், கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உள்ளார்ந்த காதலும் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். ஆழமான ஆர்வத்தையும், கற்பதில் காதலையும் ஏற்படுத்த பயணங்கள் பெரிய அளவில் உதவும் என்பது அந்தப் பெற்றோர்களின் கருத்து.