

முன்பெல்லாம் நாம் எல்லோரும் அரசாங்கப் பள்ளிக்கூடத்திலோ அல்லது பொது பள்ளிக் கூடத்திலோதான் படித்தோம். டியூஷன் கோச்சிங் கிளாஸ் என்று எதுவுமே கிடையாது.. பள்ளிக்கல்வி முடிந்த பிறகு ஏதாவது ஒரு அரசாங்கக் கல்லூரியிலோ அல்லது சாதாரணமான ஒரு கல்லூரியிலோ பயின்றோம்.. அதற்குப் பிறகு முக்கால்வாசி வீட்டில் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் ஆண் பிள்ளைகள் எந்த வேலை கிடைக்கிறதோ, ஏதோ ஒரு வேலையை செய்து குடும்பத்தை காப்பாற்றுவார்கள்..
பணத்தைப் பற்றி அவ்வளவாக பேசவும் மாட்டார்கள் அதை பற்றி நினைக்கவும் மாட்டார்கள்.
மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் செய்யும்போது, பெண் என்ன படித்திருக்கிறாள்? அடக்கமான பெண்ணா? குடும்பத்தை அனுசரித்து நடத்துவாளா? பெரியோர்களிடம் அன்போடும் பாசத்தோடும் நடந்துகொள்வாளா? என்று பிள்ளை வீட்டாரும், பையனுக்கு நல்ல வேலை இருக்கிறதா? நல்ல குணம் இருக்கிறதா? கெட்ட பழக்கம் எதுவும் இல்லையே? என் மகளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்வானா?? என்று பெண் வீட்டார்களும் விசாரிப்பதுதான் வழக்கம்.
ஆனால், இப்போதைய நிலை?
குழந்தைகளை சிறு வயதிலிருந்தே இந்த வகுப்பிற்கு செல், அதை படி, இதை படி என்றெல்லாம் வற்புறுத்துவது யார்??
பக்கத்து வீட்டு பையன் 100/100 எடுத்தால் நீயும் எடுக்க வேண்டும், அவன் பதினொறாம் வகுப்பில் அறிவியலை தேர்வு செய்தால் நீயும் அதையே தேர்ந்தெடு என்று சொல்பவர்கள் யார்??
இது மட்டுமா? படிப்பு முடிந்து வேலை கிடைக்கும் நேரத்தில் இந்த இளைஞர்களும்/இளைஞிகளும் படும் பாடு.. அப்பப்பா... சொல்லி மாள முடியாது.
பெற்றோர்கள் மட்டுமில்லாமல் சுற்றி இருப்பவர்களும் சும்மாவா இருக்கிறார்கள். முன்பெல்லாம் வேலை கிடைத்துவிட்டது என்று சொன்னால் சந்தோஷம்ப்பா. நல்லபடியா வேலை செய்து மேலும் மேலும் முன்னேறி வாப்பா.. என்று கூறிவிட்டு சென்று விடுவார்கள்.
ஆனால், இப்போதோ பெற்றோர்களும் சரி, சுற்றி இருப்பவர்களும் சரி, எடுத்த உடனேயே கேட்கும் முதல் கேள்வி, எத்தனை package? உன் நண்பனுக்கு எத்தனை package என்றுதான் கேட்கிறார்கள். இளைஞர்களின் மனதில் சம்பாதிப்பதற்கு முன்னாலேயே பணம் பணம் என்று சொல்லி விஷத்தை கலந்துவிடுகிறார்கள். இதனால் தான் மனித நேயமே அழிந்துவிட்டது.
இது மட்டுமா? திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது பெண்களும் இலட்ச கணக்கில் சம்பாதிக்கவேண்டும். அதே சமயம் வீட்டு வேலைகளையும் செய்யவேண்டும். அதைப்போல ஆண்கள் 28 வயதிலேயே வங்கியில் அதிக பட்ச பணத்தை சேர்த்து வைக்கவேண்டும், வீடு கார் என எல்லாமும் தன் பெயரில் வாங்கி இருக்க வேண்டுமென பெண் வீட்டார்களும் கறாராக இருக்கிறார்கள். இதன் விளைவாக பிடிக்காத மற்றும் செட்டாகாத திருமணத்தை செய்து கொண்டு விரைவிலேயே தம்பதியர்கள் விவாகரத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
இன்னும் சில இளைஞர்களும், இளைஞிகளும் பணத்திற்காக வெளிநாட்டில் வேலை செய்ய சென்று விடுகிறார்கள், பணத்தின் காரணமாக திரும்ப வருவதற்கே யோசிப்பதில்லை. இதன் விளைவாக இன்று முதியோர் இல்லம் நிரம்பி வழிகிறது.
பெற்றோர்கள், குழந்தைகளுக்கு பணம் பணம் என்று அதையே முக்கியமாக காட்டி கொடுத்து விட்டு, பிறகு இன்றைய தலைமுறையினர் சரி இல்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம். அந்த காலத்திலே ஒரு மகன் குறைந்தபட்ச வருமானத்தை ஈட்டினால் கூட பெற்றோர்கள் சந்தோஷமாக அதை வாங்கிகொண்டு அவனை ஊக்குவிப்பார்கள். ஆனால் இப்போதோ தன் குழந்தைகள் அதிகமாக சம்பாதித்தால்தான் தமக்கு பெருமை என்று நினைக்கிறார்கள்.
ஆகவே, பெற்றோர்களே தயவு செய்து இனிமேலும் பணத்தாசையை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். இல்லை என்றால் முதுமை காலத்தில் உங்களின் கதி அதோகதி ஆகிவிடும்.