
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நிலப் பிரச்னை தொடர்பான வழக்குகளில் சாட்சியாக முதலிடத்தில் இருப்பது பட்டா, சிட்டாதான். வீடு கட்ட, வீட்டின் மேல் கடன் வாங்க அல்லது சொத்துகளைப் பிரிக்க என எது என்றாலும் ஆதாரமாக இருப்பது பட்டா, சிட்டாதான். எதனால் நிலங்களுக்கு பட்டா, சிட்டா அவசியமாகிறது? இதனால் என்ன பயன்? பட்டா, சிட்டா பற்றிய சில விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
நீங்கள் நிலம் வாங்குவதாக இருந்தாலும், வாங்கிய நிலத்தை விற்றாலும் அல்லது தாத்தா தந்த நிலம் உங்கள் பெயரில் இருக்கிறதா என அறியவும் துல்லியமான ஆதாரமாக இருப்பதுதான் பட்டா, சிட்டா எனும் தமிழ்நாடு நில உரிமை பதிவு (patta chitta ). மேலும், இவை உரிமைக்கான சான்றாகவும், நில வகைப்பாடு மற்றும் பயன்பாடு பற்றிய விவரங்களையும் அறிய உதவும் சான்றாகிறது.
இதில் பட்டா என்பது தமிழக அரசால் வழங்கப்பட்ட நில உரிமையை நிரூபிக்க உதவும் ஒரு சட்ட ஆவணம். இது நில உரிமையாளரின் பெயர், சர்வே எண் மற்றும் நிலப்பகுதி போன்ற விவரங்களைக் கொண்டுள்ளது. சிட்டா என்பது நில வகைப்பாடு (ஈர நிலம் அல்லது வறண்ட நிலம்), பரப்பளவு மற்றும் உரிமை விபரம் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய நில வருவாய் பதிவு ஆகும்.
பட்டா, சிட்டாவில் உரிமையாளர் பெயர், நிலப் பகுதிக்கான தனித்துவமான அடையாளங்கள், நிலத்தின் மொத்த பரப்பளவு, நஞ்சை (ஈர நிலம்) அல்லது புஞ்சை (வறண்ட நிலம்) என வகைப்படுத்துதல், செலுத்த வேண்டிய சொத்து வரி பற்றிய தகவல்கள் ஆகியவை முக்கிய விவரங்களாகப் பதிவு செய்யப்படுகிறது.
சிலர் பட்டா, சிட்டாவின் முக்கியத்துவம் அறியாமல் அலட்சியமாக இருந்து ஏமாறுகிறார்கள். ஆனால், இதன் முக்கியத்துவத்தை நிச்சயம் அறிந்துகொள்ளுதல் பல வழிகளில் நல்லது. உதாரணமாக பட்டா, சிட்டாதான் நில உரிமைக்கான சட்டப்பூர்வ சான்றாக செயல்பட்டு நிலம் தொடர்பான தகராறுகளை அதிகாரபூர்வமாக தீர்க்க உதவுகிறது. நில பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறுவதற்கும் அவசியம் இந்த ஆவணங்கள் தேவைப்படும்.
பட்டா, சிட்டாவை எளிதாக பெற தற்போது இணையதளம் உதவுகிறது. தமிழ்நாடு மின் சேவைகள் போர்ட்டலை (eservices.tn.gov.in) பார்வையிட்டு பட்டா, சிட்டாவிற்கு விண்ணப்பிக்க வழிமுறைகளைப் பின்பற்றலாம். தமிழ்நாடு இ சேவைகள் போர்டல் குடிமக்கள் பட்டா மற்றும் சிட்டா போன்ற நிலப்பதிவுகளை சரிபார்ப்பது உட்பட பல்வேறு அரசு சேவைகளைத் தரும் இணைய தளமாகும். இதற்கு விற்பனைப் பத்திரம், சொத்து வரி ரசீது, அடையாளச் சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவையான ஆவணங்களாக உள்ளன.
ஆன்லைன் உடனடி பதிலை அளித்தாலும் புதிய பட்டா வழங்கலுக்கு 15 முதல் 30 நாட்கள் ஆகும் என்கின்றனர். அத்துடன் Landeed மூலமாக, கிராமம், பெயர் அல்லது சர்வே எண் வைத்து உங்கள் நில தகவல்களை உடனே பார்த்து பதிவிறக்கம் செய்யும் வசதியும் உண்டு.
நமது நில சொத்து உரிமை தொடர்பான தெளிவான ஆதாரத் தகவல்களை வழங்குவதுடன் நிலத் தகராறுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க உதவும் பட்டா, சிட்டாவை பதிவு செய்யவில்லை எனில் உடனே செயலில் இறங்குங்கள். அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று நேர விரயத்தை குறைக்கும் ஆன்லைன் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.