
திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவி. அருகில் உள்ளது பத்தமடை எனும் ஊர். இங்குள்ள முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக இந்த பாய் முடைதல் தொழிலைச் செய்து வருகின்றனர். சுமார் 150 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தாமிரபரணி நதிக் கரையில் உள்ள கோரைப் புற்கள் மற்றும் கத்தாழையைக் கொண்டு இந்தப் பாய் தயார் செய்யப்படுகிறது. எனவே, இந்தப் பாயில் படுத்துறங்க உடலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்.
அக்காலத்தில் இப்பகுதி மக்கள் இந்தப் பாய் முடையப் பயன்படும் கோரைப் புற்கள் மற்றும் பாய்களை நனைய வைக்க தாமிரபரணி ஆற்றைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது அவர்களின் இருப்பிடங்களில் பெரிய அளவில் தொட்டி கட்டி, அதில் நீர் நிரப்பி பாய்களை நனைய வைக்கின்றனர். திருமணத்தின்போது மணமகன், மணமகள், தேதி, ஊர் பெயரை சேர்த்து இந்தப் பாயை இவர்கள் நெய்து கொடுக்கிறார்கள். இங்கு தயார் செய்யப்படும் பாய்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. பத்தமடை பாய் புவிசார் குறியீடு பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும்.
இந்த பாய் தயார் செய்தல் என்பது, கோரை புற்களை உலர்த்துவது, காய வைப்பது, ஊற வைப்பது, தரம் பிரித்தல், சாயம் இடுதல் என நீண்ட செயல்முறைகளை கொண்டது. தற்போது மின்சக்தி மூலம் இது செய்யப்படுகிறது. இந்தப் பாய்கள் தரத்தைப் பொறுத்து 150 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பத்தமடை சுவாமி சிவானந்தா பிறந்த ஊர் ஆகும். 1963ம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவுக்கு இங்கிருந்து தயாரிக்கப்பட்ட பாய்கள் இந்தியாவின் சார்பாக பரிசாக வழங்கப்பட்டது. அதன் வேலைப்பாட்டை பார்த்து ராணி அசந்து போய் விட்டாராம். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கும் இந்தப் பாய் பரிசாக வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சமீபத்தில் ஜப்பானுக்கு சென்ற பிரதமர் இங்கு ஸ்பெஷலாக தயார் செய்யப்பட்ட பாய்களை ஜப்பான் பிரதமர், மன்னர் ஆகியோருக்கு பரிசாக வழங்கினார் என்றால் அதன் தரத்தைப் பார்த்துக் கொள்ளலாம்.
இங்கு செய்யப்படும் பாய்களில் முரட்டு பாய், நடுத்தர பாய், நுண் நெசவு பாய் என மூன்று தரங்கள் உள்ளன. தற்போது இந்த பாய் புவிசார் குறியீடு பெற்று இருப்பதுடன், ‘கிராஃப்ட் கவுன்சில் ஆப் இந்தியா’ என்ற அமைப்பு மூலம் பல்வேறு சலுகைகள் மூலம் நவீன முறையில் செய்யப்பட்டு வருகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைவர்கள், புகழ் பெற்ற சின்னங்கள் மற்றும் நடிகர்கள், இயற்கை ஓவியங்கள் என பலதரப்பட்ட வண்ண ஓவியங்கள் இந்தப் பாயில் இடம்பெற்று வருகின்றன. தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வரும் இந்த பத்தடை பாய் முடைதல் தொழிலைப் பேணி பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.