
முத்து என்றால் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது தூத்துக்குடி. அதற்கு அடுத்தபடியாக ஹைதராபாத்தான். ஹைதராபாத் சுற்றுலா செல்பவர்கள் முத்து வாங்குவதற்கு மிகவும் பிரயாசை படுவார்கள். அது ரீசேல் வேல்யூ இல்லாதது என்றாலும் கூட, பார்ட்டி, ஃபங்ஷன் போன்றவற்றுக்கு அது அணிந்து செல்ல ஏதுவாக இருக்கும். நினைத்த வடிவங்களில் இதைப் பெற முடியும் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
முக்கியமாக, முத்து என்றாலே நாம் அனைவரும் கடல் நீரில் கிடைப்பது என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவை மற்ற இன்னும் சிலவற்றில் இருந்தும் எடுக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தலசம், சலசம் என இரண்டு வகையான முத்துக்கள் எடுக்கப்படுகின்றன. அவற்றுள் பூமியில் உள்ள பொருட்களில் உண்டாகும் முத்துக்கள் தலசம் என்று கூறப்படுகிறது. நீரில் உண்டான பொருட்களில் இருந்து பெறப்படும் முத்தை சலசம் என்று கூறுகின்றோம்.
முத்துக்கள் கிடைக்கும் பொருட்கள்: இவை சங்கு, மேகம், மூங்கில், பாம்புத் தலை, பன்றிக் கொம்பு, வெண்நெல், இப்பி, மீன் தலை, கரும்பு, யானை கொம்பு முதலிய இடங்களில் உண்டாகும் என்று கூறப்படுகிறது. மேலும், கொக்கின் தலை கற்புடை மகளிர் கழுத்து முதலியவற்றிலும் உண்டாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
யானை கொம்பில் பிறக்கும் முத்து மாடப்புறாவின் முட்டை போல் திரண்டு வெண்மை நிறமாகக் காட்சி தரும். மேகத்தின் முத்து இளம் சூரிய நிறமாக இருக்கும். மூங்கில் முத்து மழைத்துளி நிறமாக இருக்குமாம். பாம்பின் முத்து நீல நிறமாய் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பன்றிக் கொம்பின் முத்து இரத்த நிறத்தில் காட்சி தரும் என்கிறது குறிப்பு. நெல்லின் முத்து பச்சை நிறமாக இருக்கும். மீன் முத்து பாதிரிப்பூ நிறத்தில் காட்சி தரும். கரும்பின் முத்து பொன்னிறமாய் இருக்கும்.
இந்த முத்துக்கள் நட்சத்திரம் போல் ஒளியும், திரட்சியும் அழுக்கில்லாமலும், கையில் எடுத்துப் பார்க்கும்பொழுது கெட்டியாகவும், பார்வைக்கு அழகாகவும், படிக நிறத்துடனும் கூடியிருக்கும். அப்படிக் கூடி இருந்தால் அது உத்தமம். இவற்றைத்தான் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற முத்துக்களை அணிந்தால் லட்சுமிகரமும், ஆயுளும், செல்வமும் உண்டாகும். இதுபோன்ற முத்துக்களை அணிய ஸ்ரீதேவியின் அக்கா நம் வீட்டை விட்டு நீங்குவாள் என்றும் கூறப்பட்டுள்ளது.